குளிர்ப் பாலைவனங்கள்!
பாலைவனம் என்ற சொல்லில் வனம் இருந்தாலும் பாலைவனங்களில் புல்வெளி கிடையாது.
காடுகள் கிடையாது. பாலைவனங்களில் விவசாயம் சாத்தியமில்லை. பாலைவனங்களில் நிறைய
இருப்பது மணல்தான்.
பாலைவனம் என்றால் மனக்கண் முன் வந்து நிற்பது சகாரா பாலைவனம்தான்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கிழக்கிலிருந்து மேற்குவரை
அமைந்திருக்கிறது. சகாரா பாலைவனத்தில் 11 நாடுகள் அமைந்துள்ளன. லிபியா, எகிப்து ஆகிய
நாடுகளின் பெரும் பகுதி பாலைவனமே.
சகாரா பாலைவனம் பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப்
பாலைவனம் முழுவதிலும் ஒரே மணலாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 30 சத விகிதப்
பரப்பில் மட்டுமே மணல். மீதிப் பகுதியானது முட்புதர், பாறைகள்
முதலியவற்றால் ஆனது. இத்துடன் ஒப்பிட்டால் அரேபியப் பாலவனத்தின் பெரும் பகுதி
மணல்தான்.
இந்தியாவிலும் தார் பாலைவனம் உள்ளது. இதன் பெரும் பகுதி ராஜஸ்தான் மாநிலத்தில்
அமைந்துள்ளது. லடாக்கிலும் பாலைவனம் உள்ளது. பாலைவனம் என்பதற்கு அளவுகோல் உண்டு.
ஓரிடத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 25 அங்குலத்துக்குக் குறைவாக இருந்தால் அது
பாலைவனம் என்று வகைப்படுத்தியுள்ளனர். தவிர, பாலைவனம் என்றால் பயங்கரமாக வெயில் அடிக்கும் என்று
கருதுவதும் தவறு. ஏனெனில் கடும் வெயில் வீசுகின்ற பாலைவனங்கள் இருப்பது போன்றே, கடும் குளிர்
வீசுகிற குளிர்ப் பாலைவனங்களும் உண்டு. அந்த அளவில் உலகின் பாலைவனங்களை இரண்டாகப்
பிரிக்கலாம்.
கோடைக்காலத்தில் கடுமையாக வெயில் அடிக்கிற பாலைவனங்கள் ஒரு வகை. கடும் குளிர்
வீசுகின்ற பாலைவனங்கள் இரண்டாவது வகை. ,
சகாரா பாலைவனம்,
அரேபிய பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம், அமெரிக்காவில்
உள்ள மொகாவி பாலைவனம், தார் பாலைவனம் முதலியவை வெயில் வீசும் பாலைவனங்கள்.
சகாராவில் 1922 -ம் ஆண்டில்
லிபியா நாட்டில் உள்ள அசிசியா என்னுமிடத்தில் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 58 டிகிரி வெப்பம்
பதிவானது.
எனினும் சகாரா போன்று கடும் வெயில் அடிக்கும் பாலைவனங்களில் இரவில் நல்ல
குளிர் இருக்கும். முதல் காரணம் மணலுக்கு வெப்பத்தை ஈர்த்துக்கொள்ளும் திறன்
கிடையாது. வானில் மேகங்கள் கிடையாது என்பதால் பகலில் பெற்ற வெப்பம் உயரே
சென்றுவிடும். எனவே நடுக்கும் குளிர் இருக்கும். சகாரா பாலைவனத்தில் கோடை இரவில்
குளிர் 4 டிகிரி
செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். ஒரு முறை பனிப்பொழிவு இருந்தது.
தென் அமெரிக்காவில் உள்ள அடகாமா பாலைவனம், ஆப்பிரிக்காவில்
உள்ள நமீப் பாலைவனம், சீனாவில் உள்ள தக்கலாமக்கான் பாலைவனம், சீனாவின்
வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனம் முதலியவை கடும் குளிர் வீசுகிற
பாலைவனங்கள். ஆனாலும் இவற்றில் கோபி, தக்கலாமக்கான் ஆகியவற்றில் கோடையில் வெயில்
உண்டு.
பாலைவனங்களில் பல வகையான பிராணிகள் காணப்படுகின்றன. கடும் வெயில் வீசுகிற
பாலைவனங்களில் வாழும் பிராணிகள் பகலில் பெரிதும் மணலுக்கு அடியில் பதுங்கிக்
கொண்டு, இரவில் நடமாடி
இரை தேடுகின்றன. இவை பாலைவனச் சூழலுக்கு ஏற்ற வகையில் உடலமைப்பைக் கொண்டவை.
ஆஸ்திரேலிய பாலைவனத்தில் வாழும் Thorny devil என்ற பிராணியின் முதுகில்
முட்கள் போன்ற அமைப்புகள் உள்ளன.
அதன் தோலானது காற்றில் உள்ள ஈரப்பசையை நீர்த் திவலைகளாக மாற்றுகிறது. இந்த
நீர்த் திவலைகளை வாய்ப் பகுதிக்குக் கொண்டு வந்து அருந்துகிறது. நமீப்
பாலைவனத்தில் உள்ள பல்லி போன்ற பிராணி காலை வேளையில் வாலைத் தூக்கிக் கொண்டு
நிற்கும். காற்றில் உள்ள நீர்ப் பசையானது வால் பகுதியில் நீர்த் திவலைகளாக மாறி
முதுகுப் பகுதியில் உள்ள வரிப் பள்ளங்கள் வழியே வாய்க்கு வந்துசேரும்.
பாலைவனங்களில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் திறன் கொண்ட தாவரங்கள்
உண்டு. இவற்றின் இலைகள் மிகச் சிறியவையாக இருக்கும். தண்டுப் பகுதிகள் கெட்டியாக
இருக்கும். அமெரிக்காவில் அரிசோனா பாலைவனத்தில் வாழும் கள்ளி வகைத் தாவரம் மிக
உயரத்துக்கு வளரக்கூடியது. சுமார் 150 ஆண்டுகள் வாழக்கூடிய இதன் பெயர் சகுவாரோ (saguaro). பாலைவனத்தில்
புல் பூண்டு வகைகள் அதிகம். இவற்றின் வேர்கள் பக்கவாட்டில் நீண்ட தூரம்
வளரக்கூடியவை. பாலைவனங்கள் உயிரற்றவை அல்ல.
கட்டுரையாளர், எழுத்தாளர்/தொடர்புக்கு: nramadurai@gmail.com
0 comments:
Post a Comment