'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 04



பண்டைய வேட்டையாடி இரை தேடும் சமூகத்தை நாம் இனி நுணுக்கமாக கவனிப்போமாயின், சமூக சமத்துவம் ஆண், பெண் இரு பாலாரிடமும் மற்றும் அனைவரிடமும் [எல்லா வயதினரிடமும்]  பரவலாக காணப் பட்டது. இதற்கு முக்கிய காரணம் அங்கு தேவைக்கு அதிகமான அல்லது உபரி வளங்கள் இல்லை, தனியார் சொத்து என்ற கருத்து இல்லை, உயிரியல் தந்தை [biological paternity] யார் என்ற அறிவு இல்லை போன்றவையாகும். அத்துடன், திருமணங்கள் அல்லது ஆண்- பெண் கூட்டு வாழ்வு அன்று முறைசாரா [likely informal] ஒன்றாக இருந்ததுடன்,  எளிதில் பிரியக் கூடியதாகவும், உறவு முறை இணைத்தல், முதன்மை அல்லது முக்கியம் அற்றும், பெண்ணின் கன்னித்தன்மை, யார் பிள்ளைக்கு தந்தை அல்லது வாழ்நாள் முழுவதுமான கூட்டு வாழ்க்கை அவர்களுக்கிடையில் பெரிய முக்கியம் பெறவில்லை [secondary to kinship ties, and there was little emphasis on female virginity, paternity, or lifelong unions].  எனவே அங்கு ஆண் ஆதிக்கம் வலுப்பெற வில்லை. குறைந்தபட்ச நாடோடி வேட்டை மற்றும் சேகரிக்கும் சமூகங்கள் [less nomadic hunting and gathering societies] சிலவேளை தாய் வழி சமூகமாகவும், அங்கு ஓரு பெண் பல கணவர்களை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளப் பட்டும் இருந்தன. அது மட்டும் அல்ல, தாய்வழி சமூகத்தில், பிள்ளைகள் தாயின் குலத்தின் பெயரை எடுத்துக் கொண்டனர் [children retained the clan name of their mothers].


உதாரணமாக, பழந் தமிழரின் வாழ்வை நோக்கும் பொழுது, அங்கு  பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய் வழி உரிமை பெறும் திராவிடத் [தமிழ்] தெய்வமாகக் காட்டு கின்றன. "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும் பொழுது அங்கு தாய் வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.

 

கழுதைப் புலி [Hyena], யானை, சிங்கம், பொனோபோ வகை மனிதக் குரங்கு [Bonobo], லெமூர் [lemur / நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம்]  ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே, பெண் விலங்குகள் தான் குழுவின் தலைவராக இருக்கும். தலைமை தாங்குதல் மற்றும் அடக்கி ஆளுதல் ஆகியவற்றை குழப்பிக் கொள்ளக் கூடாது. "ஒரு பிரச்சனைக்கு கூட்டு முயற்சியின் மூலம் தீர்வு காண வழி நடத்திச் செல்லுதலே தலைமை தாங்குதல் ஆகும். அதற்கு முரணாக, அடக்கியாண்டு மேலாதிக்கம் செலுத்துதல் மற்றது ஆகும். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனிதர் விலங்குகளைப் போன்றே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தில் கொடிய விலங்குகளுக்கு அஞ்சி, குரங்குகளைப் போல் மரக் கிளைகளில் தங்கியும், கூடி இனம் பெருக்கியும் வாழ்ந்தார்கள். தரைக்கு இறங்கி, நிமிர்ந்து, இரண்டு கைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதும், பின்னர் நெருப்பின் பயன்களைக் கண்டு கொண்டதும் மனித வாழ்க்கையின் அற்புதமான திருப்பங்களாகும். மனிதனாக உருவாக முன், மாந்தரினப் படிமலர்ச்சி அல்லது மனிதக் கூர்ப்பில், தான் கடைசியாக இருந்த மனிதக் குரங்கு போல், குழுவின் தலைவியாக அங்கு தாய் விளங்கினாள். இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச் சென்றனர். காட்டுத் தீயைக் குகைக்குள் பாதுகாக்க கற்றுக் கொண்டார்கள். இறைச்சியை உணவாகக் கொண்டபின் விலங்குத் தோலைப் பதமாக்கித் தைத்து ஆடையாக்கினார்கள். மண்பாண்டம் செய்து பயன் படுத்தத் தெரிந்து கொண்டார்கள். மக்களுக்கு நோயினால் துன்பம் வரும்போது, பச்சிலை மூலிகைத்திறன் கண்டார்கள். குழுவில் இவளே மக்களைப் பெறும் ஆற்றலைப் பெற்றிருந்த காரணத்தினால், ஆண் தலைமைத் தகுதிக்கு உரியவனாக வரவில்லை. குழுக்கள் பெண்களால் தாய்த் தலைவிகளாலேயே அறியப்பட்டனர். இந்த தாய்-மக்கள் உறவுகளைத் தவிர வேறு உறவுகள் இந்தக் குழுக் காலத்தில் தோன்றியிருக்கவில்லை எனலாம். இந்தக் குழுக்களே, தாய்வழி சமூகமாக வளர்ச்சி கண்டன. 


கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல தொல்லியல் அகழாய்வுகள் செய்து, அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக் கொணர்ந்து, வாசித்து பொருளும் கண்டு, அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்று  "ஏண் உடு அன்னா [Enheduanna] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய The exaltation of Inana (Inana B) பாடலாகும். இது  'ஈனன்னா' [Inanna] என்ற சுமேரிய தெய்வத்தின் மேல் பாடிய துதி பாடலாகும். அதன்  முதல் சில வரிகளை மட்டும் கீழே தருகிறேன்.

"Lady of all divine powers!

Lady of the resplendent light!

Righteous Lady adorned in heavenly radiance!

 

Beloved Lady of An and Uraš!

Hierodule of An, sun-adorned and bejeweled!

Heaven’s Mistress with the holy diadem,

Who loves the beautiful headdress befitting the office of her high priestess!

 

 

Powerful Mistress, seizer of the seven divine powers!

My Heavenly Lady, guardian of the seven divine powers!

You have seized the seven divine powers!

You hold the divine powers in your hand!

You have gathered together the seven divine powers!

You have clasped the divine powers to your breast!"

 

 

[The Exaltation of Inana (English and Sumerian translation)

by The University of Oxford Library. The Electronic Text Corpus of Sumerian Literature. and loose translation/interpretation by Michael R. Burch]

 

"சர்வ சக்திகளின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்

மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;

விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.

ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் [தலைமுடியில்] பெரும் பெரும் அணிகளை  சூட்டியவள்.

மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.

ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;  [மெய் -  சக்தி]

என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயே தான்

அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:

மெய்களை திரட்டி மெய்யான உன் கவசமாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"

 

இந்த மிக அற்புதமான தெய்வீகப் பாடலை தமிழ் படுத்தி, சில குறிப்புக்களையும் தந்து, அறிவிற்கு ஓர் விருந்தாகப் படைக்கிறார் முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு. கொற்றவையே இங்கு 'ஈனன்னா' [Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன் பல எடுத்துக் காட்டுகளுடன் விளங்க படுத்துகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும், பின்னர் சிவாவுடன் இணைத்து, விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள். அது மட்டும் அல்ல, இந்து சம வெளி நாகரிகத்திலும் மற்றும் பின்னைய இந்து சமயத்திலும் சிறந்த பெரிய பெண் தெய்வம் காண்கிறோம். அஸ்கோ பர்போலா [Asco Parpola] என்ற அறிஞர்  தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார்.

 

இவை எல்லாம் ஆரம்பகால பெண்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு என்று கூறலாம்.

 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 05 தொடரும்...  வாசிக்க தொடுங்கள் - Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக...5: 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள் -Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01

1 comment:

  1. அருமை - வாழ்க நலமுடன் வளமுடன் - வாழ்க வளர்க வெல்க ஓங்குக - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்

    ReplyDelete