இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தை நாம் கருத்தில் கொண்டால், பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும், பொருள் கொடுத்தும், திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும், என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருப்பது தெரிய வருகிறது. அகநானூறு 7: 17-22 இல்,
"பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி"
என்ற ஒரு வரியையும், குறுந்தொகை 67 இல்,
"புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல வொருகா சேய்க்கும்"
என்ற ஒரு வரியையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். இவையே நாளடைவில் மாற்றம் பெற்று சங்கம் மருவிய சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் வருவதற்கு வழிவகுத்தும் இருக்கலாம் ? உதாரணமாக, சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம், வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”
என்று சொல்லும் போது 'மங்கல அணி' என்ற சொல்லாட்சியும் வருவதை காணலாம். அதையும்
நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அகநானூற்றுப் பாடல்களில் பழைய திருமணச் சடங்குகளை சொல்லும் பாடல்கள் இரண்டு (86,136) இருக்கின்றன.
இரண்டு பாடல்களிலும் ஐயரோ, நெருப்போ இல்லை. ஒரு பாடல் மட்டும் கடவுளை கும்பிட்டதாக
குறிக்கிறது. ஆனால் கடவுள் பெயர் இல்லை. தாலி இல்லை. ஆனால், திருமணம் நடத்த
நல்ல நாள் பார்ப்பது, புதுத் துணி உடுப்பது, உற்றார், உறவினர் வருவது எல்லாம் இருக்கிறது.
பூவும், நெல்லும் சொரிந்த
நீரில் மணமகள் நீராடப் பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றது. மகனைப் பெற்ற தூய
அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பிலிருந்து வழுவாது நன்றாகப் பல பேறுகளைத்
தந்து, உன்னை எய்திய
கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையவளாக ஆகுக” என்று வாழ்த்தி கூந்தலுக்கு
மேலே, நீரைச் சொரிந்து, ஈரப்
பூவிதழ்களையும், நெல்லையும்
சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மொத்தத்தில் மஞ்சள் நீர்
ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும்
தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று
சொல்லப்படும் மணம் ஆகிறது. எனவே திருமணச் சடங்குகளை நிகழ்த்த புரோகிதர்கள்
ஈடுபட்டதாகச் எந்த சங்க இலக்கியக் குறிப்புகளும் இல்லை. என்றாலும் சங்க மருவிய
காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’ யமைப்
பற்றியும், மணமக்கள் தீவலம்
வந்தமைப் பற்றியும்,
தெளிவாகக் கூறுகிறது.
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் தனது ஒரு சூத்திரத்தில்,
"பொய்யும் வழுவும்
தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல், 4)
என்று கூறுகிறர். அதாவது களவில் ஈடு பட்ட இளைஞர் சிலர், அக் களவு வெளிப்
பட்ட பின், நான் இவளை
அறிந்ததில்லை என்று பேசியும், காதல் மணம் கொண்டவளைக் கைவிட்டும் வந்தனர். இப்
பழக்கம் பலரிடம் பரவாதிருப்பதற்காகக் களவு வெளிப் பட்ட, பின் பலர் அறியத்
திருமணம் நடத்தும் வழக்கம் வந்ததாகத் தொல்காப்பியர் எடுத்துக் கூறுகிறார். இதன்
மூலம் கி மு 500 ஆண்டுகளுக்கு
முன்பே தமிழர் மத்தியில் திருமண கொண்டாட்டம் மதம் தாண்டி ஏற்பட்டதை காண்கிறோம்.
மனித வாழ்க்கை என்று ஒன்றை எடுத்துக் கொண்டால், ஆணோ பெண்ணோ
தனித்து வாழ்ந்திட முடியாது. ஆண்களில் இருக்கின்ற குறைகளை பெண்கள் நிறைவு
செய்பவர்களாகவும்,
பெண்களில் இருக்கின்ற குறைகளை ஆண்கள் நிறைவு
செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் தான் குடும்பம் என்ற வாழ்க்கைப் படகு
சுமுகமாக செல்ல முடிகிறது. சமுதாயமும் சீராக திகழ்கிறது எனலாம். அவ்வாறு இல்லாது
போனால் சமூக அத்திவாரம் ஆட்டம் கண்டு
விடும் என்பது புலன் படுகிறது. இதனால் தான் ஆண் பெண் ஒன்றாக இணையும் திருமணம்
அன்று முக்கியம் பெறுவதை எல்லா சமூகங்களிலும் காண்கிறோம். என்றாலும் ஆண் பெண்களின்
நிலை அல்லது கணவன் மனைவிகளின் பங்கு
அல்லது பொறுப்பு போன்றவற்றில் வேறு பாடுகளையும் காண்கிறோம்.
சமயத்துக்குள் திருமணம் உள்வாங்கப் பட்டது, திருமண
இயல்புகளை மாற்றியதா என்று பார்த்தால், ஆம் என்று தான்
பதில் சொல்லவேண்டும். ஆனால் அவை நன்மையா, தீமையா என்று கேட்டால், அது அவை அவைகளின்
முன்னைய இயல்புகளை அல்லது நிலைகளை வைத்தே ஆம் அல்லது இல்லை அல்லது இரண்டும் என்று
பதில் வரும் என்று நம்புகிறேன்.
உதாரணமாக, தேவாலய ஆசீர்வாதம் [Church blessings] நிறைய மனைவிகளை மேம்படுத்தி உள்ளது எனலாம். ஏன் என்றால், ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு அதிக மரியாதை காட்ட கற்றுக் கொடுத்துள்ளதுடன் அவர்களை விவாகரத்து செய்வதில் இருந்தும் தடை செய்யப் பட்டும் உள்ளது. "இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" ["the twain shall be one flesh,"] என்ற கிறிஸ்தவ கோட்பாடு, கணவன் மற்றும் மனைவி ஒருவருக் கொருவர் உடலுக்கு தனிப் பட்ட அணுகலை வழங்குகிறது [exclusive access to each other's body.] இது ஆண்கள் பாலியலில் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. என்றாலும் தேவாலயம் இன்னும் அவர்களின் மனைவிமார்களின் விருப்பங்களை தள்ளி போட்டு விட்டு, ஆணையே [கணவனையே] குடும்பத்தின் தலைவனாக கருதுகிறது.
No comments:
Post a Comment