கரடு முரடான கற்களைச் செதுக்கி,சிற்பங்களை உருவாக்கினேன்.களி மண்ணை பதமாகக்
குழைத்து, பல்லுருவங்களைப்
படைத்தேன்.பாட நேரத்தில் தவறு விட்டவர்களை திருத்துவதற்காக தண்டித்தேன். மற்றய நேரங்களில் நண்பனாகப் பழகினேன்.
தனதுசகஆசிரியர்களை, இளையோரோ,மூத்தோரோ ´ஐயா´ என பண்பாக
அழைத்து மதிப்பளித்தேன். அது நான் கற்ற
கல்லூரியின் சிறப்பு. கற்பித்த ஆசிரியர்களின் ஆளுமை. தனது ஆசிரியர்கள் முன் மாதிரியாக மனதில் நிறுத்தி, நானும் அவர்களைப்
போலவே நல்லாசிரியராகவேண்டும் என்பது எனது கனவு. நான் ஆரம்பக் கல்வி கற்ற
பாடசாலைக்கே முதல் நியமனம் கிடைத்தது. ஈராண்டு சேவையின் பின், பலாலி ஆசிரியர்
பயிற்சி கலாசாலைக்கு தெரிவாகி, அங்கும் ஈராண்டு விசேட பயிற்சி பெற்று கல்விச்
சேவையைத்தொடர்ந்தேன்.
ஆண்டுகள் கடந்தன. அரசியல்
சூறவளியில் சிக்கி,
தவிர்க்கமுடியாத சூழலில் வெளிநாடு வந்தேன்.
என்னைப்போல் புலம்பெயர்ந்துவந்து ஒரு குரு நிலையில் உடைந்துவிட்ட உள்ளங்கள்
சார்பில் என் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
36-வருட அஞ்ஞாத
வாழ்வின் பின்னர்….
[அனுபவம்-01]
அரசியற் சூறாவளி அமைதிகொண்டதும் எனது நகரான திருமலைக்கு திரும்பியிருந்தேன்.
ஊரில் பல்வேறு மாற்றங்கள்; ஆட்களிலும் கூடத்தான். பலரையும் அடையாளம் காணமுடியாத, வேற்றினரான
தோற்றம்...
என்னையும் பெரும்பாலானோர் அடையாளம் காணத்தவறினர். நீண்ட காலத்துக்குப் பின்
பலரையும் தேடிச்சென்று பார்த்தேன். ஆரம்பத்தில் மகிழ்ந்தாலும் மிகவிரைவிலேயே, ஏன் வந்தோம் என்ற
சிறிய வெறுப்பும்,
நிராசையும் என்னை ஆட்கொண்டன.
நான் வந்ததையறிந்து, சிவமணி என்றொரு பழைய மாணவி, தனது கணவருடன்
பார்க்க வந்திருந்தாள். வந்த உடனேயே" எப்படி அண்ணே..இருக்கிறீங்க..? " என்றாள்.
மனதில் முகைவிட்டிருந்த மகிழ்ச்சி, வெண்ணையின் வழு வழுபாக சரேலென வழுக்கி
நழுவியதுயது. அவள் என்னைக் காண வராமலிருந்திருக்கலாம். என்னி டம், ஊரில் கல்வி
கற்றவள் அவள். எனது கிராமப் புறப் பாடசாலையில் மாணவ மாணவிகள், ஆசிரியர்களை, "ஐயா" எனஅழைக்கவே கற்றுக்கொடுத்திருந்தனர். ஆனால் இன்று, எனது மாணவிதான்
" அண்ணே " என வறட்டுக் கௌரவத்தில் நாக்கூசாமல் அழைத்தாள். எதிர்பார்ப்பு, ஊதிப் பருத்த
பலூனாய் ´டப்´ எனவெடித்துச்
சிதறியது. எனது முக மாற்றம்
அவளுக்கு மனதை உறுத்தியிருக்க வேண்டும்; விரைவாக அகன்றுவிட்டாள்.
[அனுபவம்-02]
அதே நாளில்.... ஒரு தொலை
பேசியழைப்பு.... தங்கை வீட்டில் தங்கி நின்றேன். அழைப்பை நானே எடுத்தேன்.
"ஹலோ..அண்ணே..!
நான் கணேசன் கதைக்கிறன்...என்னை ஞாபகம் இருக்கா..?"
" கணேசனா..? ஆர்...கணேசன்..? "
"மறந்திற்றீங்க..போலயிருக்கு..!. நீங்க, யேர்மனியில இருந்து வந்து நிற்கிறதாகக்
கேள்விப்பட்டன். நான் இப்ப மன்னாரில..!.அரசியல்வாதியாக இருக்கிறன்...."
எதிர் முனைக் குரல் தன்னைப் பிரபலப்படுத்தி, அறிமுகப்
படுத்தியது.
" அப்படியொரு
.கணேசனை...ஞாபகமில்லையே..."
"அண்ணே..! நான்
உங்களிட்டப் படிச்ச கணேசன்... நாகலிங்கத்தாரின்
மகன்.."
"ஓ..ஓ..!. படிப்பிச்ச வாத்திமாரை.. இப்பவெல்லாம்..ஐயா..என்று கூப்பிடாம, அண்ணே..என்றா
கூப்பிடுவீங்க.?"
நக்கலாகக் கேட்டேன். மனதுக்குள் வெறுமையாய் சிரித்துக்கொண்டேன்.
"இல்லை..இல்லை.. அண்ணே...ஐயா...! நான் இப்ப மன்னாரில பெரிய
அரசியல்வாதி.. தொழில்அதிபர்... என்னிட்ட வாறவங்களை.. அண்ணே.. அண்ணே.. என்று ..கூப்பிட்டுப் பழகிப் போச்சுது...! இரெண்டொரு நாளில, திருமலைக்கு
வருவன், ...வந்து
பார்க்கிறன்..." சட்டென தொடர்பு துண்டிக்கப்பட்டது. நீ வராமலிருப்பதே மேல் என
நினைத்துக்கொண்டேன்.
[அனுபவம்-03]
அடுத்த நாள்.......
ஒரு தொலை பேசியழைப்பு...எனது தம்பி உதயன் தொடர்பில்.....
" அண்ணா..!
உங்களோட..ஆனந்தன் கதைக்க வேணுமாம்.." என்றவன் தொடர்பை மாற்றினான்.
"ஹலோ..அண்ணை..!
நான்..ஆனந்தன்.. திருமலை வலையக் கல்வியதிகாரி கதைக்கிறன்.."
"ஆரது...ஆனந்தன்...?" விளக்கமில்லாமல்
வினவினேன்.
"ஆனந்தன்..
அண்ணை..!.உங்களிட்ட ஆலங்கேணியில படிச்ச ஆனந்தன்...! கோணாமலையரின் இரெண்டாவது
மகன்.. நீங்க படிப்பிச்ச, ஆலங்கேணி பள்ளியில இண்டைக்கு முக்கிய ஆலோசனைக் கூட்டம் என்ர
தலைமையில நடக்குது.. நீங்க படிச்ச, படிப்பிச்ச பள்ளிக்கூடம்
தானே!. நீங்களும் பங்கு பற்றினால் கௌரவமாயிருக்கும். கட்டாயம் வரணும். இது
அன்புக்கட்டளை..." நொறுங்கியது நெஞ்சம். யோசிக்கவில்லை.
" எனக்கு
..நேரமில்லை.." தொடர்பைத் துண்டித்தேன். மனம் குமைந்தது. இப்படி ஒரு கௌரவம்
தேவையா?
[அனுபவம்-04]
அடுத்த நாள் பிற்பகல்.....
உள்துறை முக வீதியில் காலாற நடந்து கொண்டிருந்தேன்.என்னைக் கடந்து விரைவாகச்
சென்ற கார் ஒன்று,
கிறீச்சிட்டு நின்றது. கார் கண்ணாடி கீழிறங்கி யது.
"சேர்..!
நீங்க...லிங்கம் சேர்தானே..? யேர்மனியில் இருந்து எப்ப வந்தீங்க..? கன காலதுக்குப்
பிறகு பார்க்கிறன்.." காரிலிருந்து எட்டிப்பார்த்த ஒருவர் என்னிடன்
வினவினான். எனக்கு அடையாளம்
பிடிபடவில்லை. அவன் என்னை அடையாளம் கண்டது போல், என்னால் அவனை, உடனே அடயாளம்
காணமுடிய வில்லை. பீற்றராக இருக்கும் போலிருந்தது. என்னிடம் படிக்காத யோசெப்
கல்லூரி மாணவன். உதைப் பந்தாட்டதிலும்,விளையாட்டிலும் அசயகாயசூரன். அவனது புன்முறுவல்
அடையாளப் படுத்தியது.
" சேர்! நான்.
பீற்றர் ! வாங்க ..சேர்..காரில...ஏறுங்க! எங்க போக வேணும் எண்டு சொல்லுங்க !
உங்கள..கொண்டு போய் விடுறன்." விநயமாகக் கேட்டான்.
"இல்ல--பீற்றர்.!
நான் காலாற நடக்க வேணுமென்று நடக்கிறன். கேட்டதுக்கு நன்றி .! நல்லா இருக்கிறியா?" புன்னகையுடன்
கேட்டேன்.
"இருக்கிறன்..சேர்!...
சரி..சேர்...! போறதுக்கு முன்னம், என் வீட்டுக்கும் காட்டாயம் வரவேணும். இந்தாங்க
எனது வீட்டு விலாசம்."
தனது விலாச அட்டையை என்னிடம் தந்து விட்டு மறைந்தான். உள்ளம் பனி போல்
குளிர்ந்தது. படிப்பித்த மாணவரால் ஏற்பட்ட ஊமைக்காயத்தை, படிப்பிக்காத
மாணவன் ஒருவன் ஒத்தடமிட்டான். அவனை மனதுள் பாராட்டி வாழ்த்தி னேன்.
[அனுபவம்-05]
நான், வெர்ளினில் 80-இல் கால்
பதித்தவன். ஈழத்திலிருந்து வந்தவர்கள் யாவ ருமே அரசியல் தஞ்சம் கோரியவர்களே.
என்னுடன் சேர்த்து,
மேலும் சில ஆசிரியர்களும், அரசாங்க
உத்தியோகத்தர்களும்,
ஒரளவு படித்தவர்களும் உள்ளடக்கம். பெரும்பாலானவர்கள்
கல்வியறிவு குறைந்தவர்கள். ஆங்கிலம், கொஞ்சமும் தெரியாதவர்கள்.
யேர்மனியில், ஆங்கிலம் தொடர்பு
மொழியாக இருந்தது. உதவும் சுபாவம் உடைய என்னையே பெரும்பாலனவர்கள் மொழி
பெயர்ப்புக்காக நாடினர். வக்கீலைப் பார்க்கவோ, மருத்துவரிடம்
போகவோ என் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது.
ஆங்கிலம் தெரிந்த மற்றையோர், அலுப்புடன் மறுத்துவிடுவார்கள். அதனால்
யாவற்றுக்கும் நானே. வந்தவுடன், யேர்மன் மொழியும் கற்கத்தொடங்கியிருந்தேன். அதன் மூலம், எனக்கு வேலை
வாய்ப்பும் கிட்டியது. நிரந்தர வதிவிட அனுமதியும், வேலை வாய்ப்பும்
கிடத்ததால், கையில் பணமும்
புழங்கியது. காசு கை மாறுவதும், கடன் கொடுப்பதும் வாடிக்கையாகியது.
அப்படி காசு கடன் பட்டவர்களில், ஒருவன்தான் தேவன். சிறிது சிறிதாக பணம் கை
மாறியவன், எனது பலவீனம்
அறிந்து, பெருந்தொகையாகவும் வாங்கினான். தரும்போது பகுதி பகுதியாகவே
தருவான். வட்டி தருவதாகச் சொல்லுவான், ஆனால் நான் வட்டி வாங்குவதில்லை; அதுவே அவனுக்கு
சகாயமாகியது.
தேவன் மிகவும் சுறு சுறுப்பான வாலிபன். ´மாஸ்ரர்..மாஸ்ரர்´என்று வளைய வளைய
வருவான்; புன்னகையும், தேனொழுகும்
பேச்சும் அவனிடம் நிரந்தரமாய் குடியிருக்கும். மற்றோரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துக்கு நிரந்தரச் சொந்தக்காரன்.
நாளடைவில், அவனது துணிச்சலான
சுய முயற்சியால், பல்லினப்
பொருட்கள் விற்கும் சிறியளவிலான கடை (யேர்மனில்- கியோஸ்க்) ஒன்றை வாடகைக்கு எடுத்து
நடத்தினான். ஆரம்பத்தில்
மந்தமான வியாபாரமும், நாளடவில் விருத்தியும் பெற்றது. மது,சிகரெற், சோக்கிலேற், சிப்ஸ் வகைகள்
அமோகமாக விற்பனையாகின. ´இன்ரநெற்´ விரிபுபட்ட
சேவையையும், ´மணிகிராம்´ துரித பணமாற்றுச்
சேவையையும் ஆரம்பித்தான். சுறு சுறுப்பான வியாபாரத்தால், இரண்டு
விற்பனையாளர்களையும் நியமித்தான். பணம் பெருகப் பெருக தேவனிடம், திமிரும்
முளைவிட்டு வளர்ந்தது. நட்பு வட்டம் சுருங்கியது. மூத்தோரையும், மதிக்கவேண்டியவர்களையும்
உதாசீனப் படுத்தினான். ´நீங்கள்´என்றவர்களை, ´நீ´என ஒருமையில்
அழைக்கும் அளவுக்கு
மாறினான். அதிகம் ஏன்? ,..´மாஸ்ரர்...மஸ்ரர்..´.என வழிந்து குழைந்தவன், பண உதவிகள் பெற்ற, என்னையே, "அண்ணே..நீ..."
என அழைக்கும் அளவுக்கு, தன்னை ஊர்க் குருவி என எண்ணிக்கொண்டான்.
" உயர உயரப்
பறந்தாலும், ஊர்க் குருவி
பருந்தாகமாட்டாது " என்பதைக் காலம் அவனுக்குக் கற்பிக்கும்.
நான் வெளியே போகும் போது எப்போதும்,தோளில் ஒரு சிறிய பையை மாட்டிக் கொள்வது
வழக்கம். அவனது கடைக்குப் போகும் போதும் அவ்வாறே போவேன்.
அங்கு விற்பனையாளராக இருந்தவர்களிடம், என்மீது ஒரு கண் வைக்கும்படி
அறிவுறுத்தியுள்ளான். அதன் அர்த்தம், அங்குள்ள பெறுமதியான மதுப்போத்தல் எதையாவது நான்
களவாக மடக்கலாம் என்பதே அவன் நினைப்பு. இதனை பின்னர் தான் அறிந்து கொண்டேன்.
எவ்வளவு மலினமான-கேவலமான அற்பன் அவன். அவனைப் போன்ற அழுக்குப் புத்தி, மற்றவர்களுக்கும்
என நினைத்துவிட்டான். மனம் வருந்தி மறுகியது. அவனது கடைப் பக்கம் போவதையும், அவனைச்
சந்திப்பதையும் முற்றாகவே தவிர்த்துக் கொண்டேன்.
காணாது கண்ட பணம், அவனை எவ்வளவு கீழ் நிலைக்குத் தாழ்த்தியுள்ளது. என்றாவது
ஒருநாள் தன் போலிக் கௌரவத்தை அவன் உணரக்கூடும்.
இந்த அனுபவங்கள்
எனக்கு மட்டும் இன்று நடக்கவில்லை. தாயகத்திலும் கூட இன்று ஆசிரியர்கள்
மேலான மதிப்பு அன்றய காலத்தில் இருந்ததைப்போல் இல்லாமை, மாணவர்களுக்கு
கல்வி மேலான அக்கறையினை இழக்கச் செய்யும் காரணிகளில் ஒன்று என்பது அண்மைக்காலங்களில் வெளியாகும் பரீட்சை
முடிவுகளின் வீழ்ச்சி ஆதாரப்படுத்தியுள்ளது கவலைக்குரிய தொன்றாகும்.
மயில். மகாலிங்கம்.....( யேர்மனி )
No comments:
Post a Comment