மனித குலம் அழியுமென எதிர்பார்த்தும் நடக்காத வரலாற்று நிகழ்வுகள்

 


1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். அப்போலோ 11 விண்கலத்தில் நிலாவுக்குச் சென்ற மூன்று விஞ்ஞானிகளைக் கொண்ட பேழை பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உள்ளே இருப்பது அசவுகரியாக இருந்தது. அவர்களை மீட்டு தேசிய ஹீரோக்களாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவை நாசா அதிகாரிகள் எடுத்தனர். ஆனால் இன்னொரு பக்கம், நிலாவில் இருந்து மனிதர்களைக் கொல்லும் வேற்றுலக நுண்ணுயிரிகள் ஏதும் பூமிக்கு வந்துவிடுவதற்கும் சாத்தியம் இருந்தது.

 

அதற்கு சில தசாப்தங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் போன்றோரைக் கொண்ட குழுவுக்கு இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, அது உலகத்தையே அழித்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. வளிமண்டலம் முற்றிலுமாக அழிந்து உயிர்கள் வாழமுடியாத சூழல் ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது.

 

இப்படி, கடந்த நூற்றாண்டின் சில தருணங்களில், உலகத்தின் தலைவிதியையே சிலர் அடங்கிய குழுக்கள் தங்களது கைகளில் வைத்திருந்தன. சிறிய அளவு சாத்தியமே என்றாலும், ஒட்டுமொத்தமாக பூமியை அழித்துவிடும் அபாயங்கள் அவர்களின் முடிவுகளில் இருந்தன. அது அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக எல்லாவற்றின் முடிவாகவும் இருந்திருக்கும்.

 

ஆயினும் அபாயங்களைப் பொருள்படுத்தாமல், அந்த முடிவுகளை அவர்கள் எடுத்தது ஏன்? அதுபோன்று நாம் இப்போது என்னவிதமான ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சூழலைப் பற்றி அவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?

 

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விண்கலன்களையும் மனிதர்களையும் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டபோது விண்வெளிக் குப்பைகள் உருவாகும் ஆபத்து ஏற்பட்டது.

 

முதலாவது ஆபத்து, பூமியில் உள்ள நுண்ணுயிரிகள் விண்வெளிக்குச் சென்று, அங்கு ஒருவேளை வேற்றுலக உயிர்கள் இருந்தால் அவற்றை அழித்துவிடக்கூடிய ஆபத்து இருந்தது. அதனால் விண்கலன்கள் அனைத்தும் முற்றிலுமாக கிருமி நீக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது இருப்பதைப் போன்றே விண்வெளிப் போட்டி உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் இந்த அச்சம் அதிகமாக இருந்தது.

 

இரண்டாவது கவலை முதலாவதற்கு நேர் எதிரானது. அதாவது விண்வெளிக்குச் சென்றுவிட்டு பூமிக்குத் திரும்பும் வீரர்கள், விண்கலன்கள், ராக்கெட்டுகள் போன்றவை பூமியில் உள்ள ஆக்சிஜன் அனைத்தையும் உட்கொள்ளும் வகையிலான நுண்ணுயிர்களைக் கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அந்தக் கவலை.

 

நிலாவுக்கு அப்போலோ விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியபோது, இந்த இரண்டாவது கவலைதான் நாசாவுக்கு அதிகமாக இருந்தது. ஆபத்தான ஏதேனும் உயிரினத்தை விண்வெளி வீரர்கள் பூமிக்கு கொண்டு வந்துவிட்டால் என்னவாகும் என விஞ்ஞானிகள் அஞ்சினர்.

 

ஆயினும் பெரும்பாலானவர்கள் நிலாவில் எந்தவகையான உயிர்களும் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என உறுதியாக நம்பினர். அதனால் அங்கிருந்து பூமிக்கு நுண்ணுயிர்கள் வருவது என்பது சாத்தியக் குறைவான ஒன்றுதான். "நிலாவில் இருந்து பூமிக்கு நுண்ணுயிர்கள் வருவதற்கு 99 சதவிகிதம் வாய்ப்பில்லை" என்று அப்போதிருந்த செல்வாக்கு மிக்க ஒரு விஞ்ஞானி உறுதியாகக் கூறியிருக்கிறார்.

 

இருப்பினும் விண்வெளியில் இருந்து திரும்பி வருவோரை தனிமைப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது சில ஆட்சேபங்களும் இருந்தன. ஒருவேளை விண்வெளி வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் நாட்டு எல்லைக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பதற்கும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என சுகாதாரத்துறை அதிகாரிகள் வாதிட்டனர்.

 

நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதன் பிறகு அதிகப் பொருள் செலவில் கப்பலில் விண்வெளி வீரர்களைத் தனிமைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிலாவுக்குச் சென்றுவரும் அனைவரும் மூன்று வாரங்களுக்குத் தனிமையில் இருந்த பிறகே குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்திக்க முடியும் அல்லது அதிபருடன் கைகுலுக்க முடியும் என்ற விதிமுறைக்கும் நாசா ஒப்புக் கொண்டது.

 

ஆனால் அந்த முடிவிலும் உண்மையில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையிலும் பெரிய அளவு இடைவெளி இருந்தது. கப்பலுக்குச் செல்லும்வரை நிலாவில் இருந்து திரும்பி வந்த அதே விண்கலத்துக்குள்ளேயே வீரர்கள் இருக்க வேண்டும் என்பதுதான் வகுக்கப்பட்ட விதிமுறை. ஆனால், அதிக சூடான அந்த குறுகிய இடத்துக்குள் நீண்ட நேரம் இருந்தால், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கவலை எழுந்ததால், அதன் கதவை நீரில் மிதக்கும்போதே திறக்க நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதனால் கப்பலுக்குச் சென்று தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பே பேழையின் கதவு திறக்கப்பட்டு, வீரர்கள் வெளிப்பட்டனர். அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்குச் சென்றுவிட்டனர்.

 

அப்படிக் கதவைத் திறந்தபோதும், நல்லவேளையாக அப்போலோ 11 விண்கலத்தின் மூலம் எந்தவகையான வேற்றுலக உயிர்களும் பூமிக்குள் நுழைந்துவிடவில்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் நுழைந்திருந்தால், ஒரு குறுகிய கால அசவுகரியத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பூமிக்கும் மனித குலத்துக்கும் நிரந்தரமாக பேரபாயத்தை ஏற்படுத்தியதாக அந்த முடிவு இருந்திருக்கும்.

 

பேரழிவு அணுகுண்டு சோதனை

அதற்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளுக்கு இதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தது. 1945-ஆம் ஆண்டில் மன்ஹாட்டம் திட்டம் எனப்படும் அணுஆயுதத் திட்டத்தின் மூலமாக ட்ரினிட்டி எனப்படும் உலகின் முதலாவது அணுகுண்டு சோதனை நடந்த நேரம் அது.

 

அணுக்கருப் பிளவு மூலம் வெளிப்படும் வெப்ப ஆற்றல் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு என விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது. அந்த வெடிப்பானது பூமியின் வளிமண்டலத்தைப் பற்றி எரியச் செய்து, கடல்களை எரித்து, பூமியின் பெரும்பாலான உயிர்களை அழித்துவிடும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.

 

அது பெரும்பாலும் சாத்தியமில்லாதது என அடுத்தடுத்த ஆய்வுகள் கூறின. ஆயினும் அணுகுண்டு சோதனை நடக்கும் நாள்வரை தங்களது கணக்கீடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து சரிபார்த்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் அணுகுண்டை வெடிக்கச் செய்யலாம் என முடிவு செய்தனர்.

 

அணுகுண்டு வெடித்தபோது, அது பேரழிவை ஏற்படுத்தப்போகிறது என்று பலர் கருதினர். அவர்களில் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர். அவரது தொடக்ககால பிரமிப்பு, அச்சமாக உருவெடுத்திருந்தது.

 

"வெடிகுண்டு வேலை செய்யும் என்று அவர் நம்பவில்லை. பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதினார். 'உலகின் முடிவு' என்று குறிப்பிட்டார்" என அவரது பேத்தி ஜென்னட் கோனன்ட் வாஷிங்டன் போஸ்ட்டில் தெரிவித்திருந்தார்.

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் டோபி ஆர்ட், ட்ரினிட்டி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்தை மனித குலத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று வரையறுத்தார்.

 

"திடீரென்று நாம் அதிக ஆற்றலை வெளியேற்றுகிறோம், பூமியின் முழு வரலாற்றிலும் இல்லாத வெப்பநிலையை உருவாக்குகிறோம்" என்று ஆர்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மன்ஹாட்டன் திட்டத்தின் விஞ்ஞானிகளின் கணக்கீடுகள் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அதிபர் உள்ளிட்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதியிடமும் இப்படியொரு ஆபத்து பற்றி கூறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. விஞ்ஞானிகளும் ராணுவத் தலைவர்களும் தாங்களாகவே முடிவெடுத்து சோதனையை முன்னெடுத்து நடத்திவிட்டனர்.

 

அழியும் அபாயம் கொண்ட உலகம்

 

21-ஆம் நூற்றாண்டின் அறிவார்ந்த சூழலில் இருந்து பார்க்கும்போது அவர்கள் எடுத்த முடிவு நேரத்துக்கு ஏற்றது எனக் கூறிவிடுவது எளிது. இப்போது சூரிய மண்டலத்தைப் பற்றிய அறிவும் விண்வெளி மாசுபாடு பற்றிய கூடுதல் புரிதலும் இருக்கிறது. மேலும் உலகப் போர் நடந்தும் வெகு காலமாகிவிட்டது. இப்போது அப்படியொரு ஆபத்தான முடிவை யாரும் எடுப்பார்களா?

 

நிச்சயமாக இல்லை. தற்செயலாகவோ அல்லது வேறுவிதமாகவோ, பேரழிவுக்கான சாத்தியம் ஏதாவது இருப்பதாகக் கருதினால், அது முன்பு இருந்ததை விட இப்போது அதிகமாகி இருக்கிறது என்பதுதான் உண்மை.

 

வேற்றுலக உயிர்கள் பூமியை அழிப்பது என்பது பெரிய ஆபத்து என்று சொல்ல முடியாது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நமது பூமி பாதுகாப்புக் கொள்கைகள், வேற்றுலக உயிர்கள் பூமியைத் தாக்காத அளவுக்கு கவனமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி. விண்வெளிக்கோ, நிலாவுக்கோ சென்றுவரும் தனியார் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை எப்படி கையாளுகின்றன என்பதும் சந்தேகத்துக்கு உரியது.

 

அதைவிடவும் மிகவும் கவலைக்குரியது அணுஆயுதங்களால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல். வளிமண்டலம் பற்றி எரிவது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அணுஆயுதப் போரும் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் சாத்தியமில்லாதவை என்று கூற முடியாது.

 

இரண்டாம் உலகப் போரின்போது அணு ஆயுதங்கள் சக்திவாய்ந்தவையாகவும், அதிக எண்ணிக்கையிலும் இல்லை. ஆனால் இப்போது பல நாடுகளிடம் அணு ஆயுதங்கள் ஏராளமான அளவில் இருக்கின்றன. ஆற்றலும் அதிகம்.

 

பேராசிரியர் ஆர்ட், இருபதாம் நூற்றாண்டிலேயே மனித குலம் அழிந்துபோவதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் என மதிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது அது அதிகரித்திருப்பதாக அவர் நம்புகிறார். கடந்த சில தசாப்தங்களில் மனித குலத்தை அழிக்கும் வாய்ப்புகள் பெருகியிருப்பதாக அவர் வாதிடுகிறார்.

 

அணுஆயுதங்களைப் போலவே, தீங்கான செயற்கை நுண்ணறிவு, கார்பன் வெளியீடு போன்றவற்றுடன் கொடிய வைரஸ்களும் மிக வேகமாக வளர்ந்திருக்கின்றன.

 

"அசாதாரண துயரங்கள்"

 

இத்தகைய பேரழிவுக்கான அபாயங்களுக்கு அவற்றுக்குரிய முக்கியத்துவம் அளிக்க நாம் ஏன் தவறுகிறோம்? ட்யூக் பல்கலைக்கழகத்தின் ஜோனாதன் வீனர் இதுபற்றி விவரிக்கிறார். பேரழிவு அபாயங்களை மக்கள் "அசாதாரணமானவை" என்று மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

 

இதுபற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். அதாவது சுயநல மனிதர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அனைவருக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. காடழிப்பு, பருவநிலை மாற்றம், அதிக மீன்பிடிப்பு போன்றவை இதில் குறிப்பிடப்படுகின்றன.

 

ஆனால் உண்மையில் "அசாதாரண துயரங்கள்" வேறுபட்டது. மக்கள் இதைத் தவறாகப் புரிந்து கொள்வது ஏன் என்று வீனர் விளக்குகிறார்.

 

அரிய பேரழிவுகள் பற்றிய தகவல்கள் இல்லாதது முக்கியமான காரணம். ஒருபோதும் நடக்காத நிகழ்வுகளை விட சமீபத்திய முக்கியமான நிகழ்வுகளை மனதில் கொண்டு வருவது எளிதாகிவிடுகிறது. கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளின் தொகுப்புடன் மூளை எதிர்காலத்தை உருவாக்க முனைகிறது.

 

பயங்கரவாதம் தொடர்பான ஒரு ஆபத்து தொடர்பான செய்தி, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், தொழில்நுட்பங்கள் போன்றவை செய்திகளில் இடம்பிடிக்கின்றன. ஆனால், அசாதாரண ஆபத்துகள் பற்றிய செய்திகள் வருவதில்லை. உண்மையில் அனுபவங்கள் மூலமாக அதைக் கற்றுக் கொள்வதும் சாத்தியமில்லைதான். ஆனால், அப்படியொன்று நடந்துவிட்டால், அவ்வளவுதான். ஆட்டம் முடிந்துவிடும்.

 

மிக அரிதான பேரழிவுகளை நாம் தவறாகப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு காரணம் தனிநபர் சோகத்தைப் பற்றிய கவலைகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்தப் பேரழிவு குறித்த அக்கறை குறைகிறது என்பது.

 

மற்றொரு காரணம் பொறுப்பின்மை. உங்களது செயலால் உலகம் அழிந்துபோனால், அதற்காக உங்களை யாரும் கேட்க முடியாது. வழக்குத் தொடுக்கவும் இயலாது.

 

ஆனால் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ஒருவருடைய முடிவால் மட்டுமல்லாமல், தற்செயலாகவும் இப்படிப்பட்ட பேரழிவுகள் நடந்துவிடலாம் என்பதுதான்.

 

அப்போலோ 11 அதிகாரிகள் மற்றும் மன்ஹாட்டன் விஞ்ஞானிகள் அப்படி எதையும் செய்யவில்லை. எதிர்காலத்திலும் ஒரு நாள், மனித குலத்தின் தலைவிதியை முடிவு செய்யும் முடிவை எடுக்கும் இடத்தில் யாராவது இருக்கலாம். அவர்களும் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

ரிச்சர்ட் ஃபிஷ்ஷர்/பிபிசி ஃபியூச்சர்

 

1 comments:

  1. Pragmatic Play offers a wide range of slots and
    Pragmatic 온라인카지노사이트 Play has BEST 바카라 a selection of slot games, including slots, 온라인 카지노 대한민국 table games, live aprcasino.com dealer and 더킹카지노 live casino games. It is a leading provider

    ReplyDelete