நிபுணர்கள் கூறுவது என்ன?
கொரோனாவுக்கான
தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி,
இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா
என்பதுதான்.
அமெரிக்காவில் இரண்டு
டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வராதா, அவர்கள் மூலமாக
நோய் பரவாதா என்ற கேள்விகள் எழுந்தன.
இப்போதும் பலர்
கொரோனாவுக்கான தடுப்பூசி போட்ட பிறகு தமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பே இல்லை
என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
இதற்கு முன்பு உலகில்
வந்த பல்வேறு நோய்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல ஆண்டுகள் வரை
பாதுகாப்பு அளித்தன.
ஆனால் கொரோனா
தடுப்பூசிகள் எவ்வளவு காலத்துக்கு மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு
அளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
கொரோனாவுக்கு எதிரான
ஆற்றல் உருவாவதும் நீண்ட காலத்துக்குத் தங்கியிருப்பதும் ஒவ்வொரு தனிநபரின்
அடிப்படையான நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சார்ந்திருக்கிறது.
"இதுவரையிலான
தரவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்துகளின் எதிர்ப்பு ஆற்றல் மனிதர்களில்
10 மாதங்கள் வரை நீடித்திருக்கிறது" என பிபிசி தமிழிடம்
தெரிவித்தார் ஜப்பானின் கியோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர் கணேஷ் பாண்டியன்.
"ஆயினும் இது
எல்லோருக்கும் பொதுவானது அல்ல. உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் போடும்
பணி தொடங்கப்பட்டு குறைந்த காலமே ஆகியிருப்பதால் புள்ளி விவரங்கள் இன்னும்
முழுமையாகத் திரப்படவில்லை. விரிவான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன" என்றார் அவர்.
நாளடைவில் தடுப்பூசிகளால்
உடலில் ஏற்படும் எதிர்ப்பாற்றல் குறைந்து கொண்டே வரும் என்று அறிவியல் கூறுகிறது.
கொரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை எத்தனை மாதத்துக்குப் பிறகு எதிர்ப்பாற்றல்
குறையத் தொடங்குகிறது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மாடர்னா மற்றும் ஃபைசர்
நிறுவனத்தின் தடுப்பூசிகளைப் போட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகும்
எதிர்ப்பாற்றல் சிறிதளவுகூடக் குறையவில்லை என உலகமெங்கும் சீராக தடுப்பூசிகள்
விநியோகிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கவி அமைப்பு
கூறுகிறது.
ஆக்ஸ்போர்டு -
ஆஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பொறுத்தவரை இரு டோஸ்களுக்குப் பிறகு
மூன்று மாதங்களுக்குப் பிறகும் உடலில் ஆன்டிஜென் எனப்படும் எதிர்ப்பு அணுக்கள்
குறையவில்லை என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
"தடுப்பூசி பற்றிய
குறைந்த அளவிலான தரவுகளே நம்மிடம் இருக்கின்றன. வழக்கமாக இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை
தரவுகள் கிடைத்த பிறகே ஒரு தடுப்பூசியானது எவ்வளவு காலம் புதிய தொற்றில் இருந்து
பாதுகாப்பு அளிக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியும்" என்கிறார் அமெரிக்கா
மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின்
தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி,
"ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே தடுப்பூசியை எடுத்துக் கொண்டால்கூட இருவருக்கும்
வெவ்வேறு அளவிலான தடுப்பு ஆற்றலே உருவாகும். அதனால் தடுப்பு ஆற்றல் எப்போது
குறையும் என்பதை பொதுமைப்படுத்த இயலாது. தரவுகள் வந்த பிறகு சராசரியாக இவ்வளவு
காலத்தில் தடுப்பாற்றல் குறையத் தொடங்குகிறது என்றுதான் சொல்லலாம்" என்கிறார்
முத்துமணி.
இயற்கையாக
உருவான எதிர்ப்பாற்றலுக்கு கூடுதல் திறன்
தடுப்பூசியால் உடலில்
கிடைக்கும் கொரோனா எதிர்ப்பாற்றலைக் காட்டிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு
இயற்கையாகவே கிடைக்கும் எதிர்ப்பாற்றல் வலிமையாக இருப்பதுடன் நீண்ட காலம்
நீடித்திருக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை சயின்ஸ் இதழில் வெளியான ஓர் ஆய்வு
உறுதிசெய்திருக்கிறது.
ஆயினும் வருங்காலத்தில்
தடுப்பூசிகள் மூலமாக அதைவிடவும் கூடுதலான எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியும்
என்கிறார் முத்துமணி.
உடலில் உருவாகும்
எதிர்ப்பு ஆற்றல் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பது, உடலின்
எதிர்ப்பாற்றல் நினைவு திறனைப் பொறுத்தது. உடலில் உருவான எதிர் உயிரியானது
ஏற்கெனவே உடலைப் பாதித்த தொற்றை சரியாக அடையாளம் கண்டு செயலாற்றும் திறனைத்தான்
இப்படி அழைக்கிறார்கள். இதுதான் தடுப்பூசிகளின் அடிப்படை.
ஆனால் கொரோனாவுக்கு நமது
உடலின் எதிர்ப்பாற்றல் அமைப்பானது எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது இன்னும்
ஆய்வுக்குட்பட்டிருக்கிறது. அதனால் கொரோனா தடுப்பூசிகளால் உருவாகும்
எதிர்ப்பாற்றல் நினைவு திறனைப் பற்றியும் இதுவரை துல்லியமான முடிவுகள் இல்லை.
நேச்சர் இதழில் வெளியான
ஓர் ஆய்வில், ஏற்கெனவே கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் உடலில் 9 மாதங்களுக்குப்
பிறகும் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து ஆன்டிபாடிஸ் எனப்படும் எதிர் உயிரிகள்
உற்பத்தி செய்யப்பட்டு வருவது தெரியவந்ததது. அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு
அவர்களது உடலில் எதிர்ப்பாற்றல் இருக்கிறது என்று பொருள்.
கொரோனா வந்த பிறகு இரண்டு
டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களிடம் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களது உடலில் வலிமையான எதிர்ப்பாற்றல் உருவாகி இருந்தது முடிவுகளில்
தெரியவந்தது. இது கொரோனாவின் பல்வேறு திரிபுகளில் இருந்து அவர்களைக் காக்கக்கூடும்
என்று அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்கத்
தடுப்பூசிகள் இந்தியாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளை விடச் சிறந்ததா?
அமெரிக்காவில் போடப்படும்
ஃபைசர், மாடனா போன்ற தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக அதிகத்
திறனுடன் செயல்படுகின்றன என புள்ளி விவரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் அவற்றை போடுவதற்கு இந்தியா போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்
காட்டுகிறார்கள். ஆனால் அது அவசியமற்றது என்கிறார் முத்துமணி.
"அமெரிக்கர்களிடம்
சிறப்பாகச் செயல்படும் தடுப்பூசிகள் இந்தியாவிலும் திறன்மிக்கதாக இருக்கும் என்று
கூற முடியாது. அமெரிக்கர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு அணுக்களும்
இந்தியர்களிடம் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு அணுக்களின் அளவும் வேறுபட்டவை.
அதனால் தடுப்பூசிகளின் எதிர்ப்பாற்றலும் வெவ்வேறு பிராந்தியங்களில்
வெவ்வேறாகத்தான் இருக்கும்" என்கிறார் முத்துமணி.
"இதுவரை
தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் அனைத்துமே முதன்முதலில் உருவான கொரானா
வைரஸின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் வைரஸின் திரிபுகள்
பெருகும்போது தடுப்பூசிகளின் திறனும் குறைவது இயற்கைதான். ஆனால் இப்போதைக்கு அதைக்
குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இதற்கு முன் பல நோய்களுக்குக்
கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் சுமார் 40 சதவிகிதத் திறன்
கொண்டிருந்தபோதே நோயை ஒழித்திருக்கின்றன. கொரோனாவுக்கு தயாரிக்கப்பட்டுள்ள
தடுப்பூசிகள் 60 முதல் 94 சதவிகிதம் வரை திறன் கொண்டிருப்பதால் அஞ்சத்
தேவையில்லை."
மூன்றாவது
டோஸ் அவசியமா?
தடுப்பூசிகளால்
கிடைக்கும் எதிர்ப்பாற்றல் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கும் எனில் கூடுதல் டோஸ்
போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
"6 மாதங்கள் அல்லது
ஓராண்டுக்குப் பிறகு கூடுதலாக பூஸ்டர் டோஸ் ஒன்று போடலாமா என்பது குறித்து
பன்னாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்" என கணேஷ் பாண்டியன்
கூறுகிறார்.
"பூஸ்டர் டோஸ்
எனப்படும் கூடுதல் டோஸ் தடுப்பூசி அவசியமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள
குறைந்தபட்சம் அடுத்த ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால்
அப்போதுதான் தடுப்பூசி போட்டவர்களிடம் இருக்கும் எதிர்ப்பாற்றல் பற்றிய தரவுகள்
ஓரளவுக்காவது நமக்குக் கிடைத்திருக்கும்" என்கிறார் முத்துமணி.
எம். மணிகண்டன்/பிபிசி தமிழ்
No comments:
Post a Comment