- நிபுணர்கள் அறிவுரை என்ன?
மாதவிடாய் காலத்திலோ கருவுற்றிருக்கும் காலத்திலோ ஒரு பெண்
உடலுறவு கொள்ள வேண்டுமா? கருவுற்ற காலத்தில் உடலுறவுக்கு
பொருத்தமான மாதம் எது? இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி
கேட்கப்படுகின்றன.
இந்த பிரச்னையில்
பல வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதனால் மக்கள் குழப்பமடைகிறார்கள்.
ஒரு பெண்
கருவுறும் போது அவரது உடல் மட்டுமல்ல, மனநிலையும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அவரது
மாறுபட்ட புதிய உணர்ச்சித் தேவைகள் சரிவர நிறைவேறவில்லை என்றால் அது அப்பெண்ணையும்
கருவையும் பாதிக்கும்.
ஆனால், அந்த
காலகட்டத்தில் ஓர் ஆண் அத்தகைய இயற்கையான மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. அவரது
பாலியல் விருப்பம் அப்படியே உள்ளது. இந்த வேறுபட்ட உணர்வு நிலைகள், பாலியல்
விருப்பங்களில் உள்ள வேறுபாடு ஆகியவை தம்பதிக்கு இடையே ஒருவகையான பதற்றத்தை
உருவாக்கும்.
"கருவுற்ற
காலத்தில் உடலுறவு கொள்வதற்கான ஒரு பெண்ணின் ஆசை குறைந்தாலும், அவள் மென்மையான, காதல்
நெருக்கத்துக்கு ஏங்குகிறாள். அதனால், கணவனும் மனைவியும் நிச்சயமாக அன்பில் நெருக்கமாக இருக்க
வேண்டும். அது அவர்களின் ஆசைகளை தூண்டிவிட்டால், உடலுறவு கொள்ளலாம். ஆனால் தன் மனைவி மீது கணவன்
தன் விருப்பத்தைத் திணிக்கக்கூடாது" என்று தனது "சமக்ரா காம்ஜீவன்"
என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ராஜன் போஸ்லே.
பெரும்பாலான
மருத்துவர்கள் கருவுற்ற காலத்தின் முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில்
உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
தொற்று ஏற்படும் அபாயம்
மருத்துவர்
காமாக்ஷி பாட் இதன் பின்னணியில் உள்ள காரணங்களை விவரிக்கிறார். பிபிசி
மராத்தியிடம் பேசிய அவர்,
"கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக
உள்ளது, எனவே அந்த
காலத்தில் உடலுறவை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது."
"கடைசி மூன்று
மாதங்களில் உடலுறவு கொள்வதால் ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. குறைக்காலக்
குழந்தைப் பிறப்புக்கும் அது வழிவகுக்கும்"
இவை தவிர்த்த
இடைப்பட்ட காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது தம்பதியின் விருப்பத்தைப் பொருத்தது
என்று குறிப்பிடுகிறார் பாட்.
புனேவைச் சேர்ந்த
மேகநோய் நிபுணரும், 'ஹலோ
செக்ஸுவாலிட்டி' என்ற புத்தகத்தை
எழுதியவருமான பிரசன்னா காத்ரே பிபிசி மராத்தியிடம் இது குறித்துப் பேசினார்.
கருவுற்ற முதல்
காலாண்டில் உடலுறவு கொள்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவெடுக்க
வேண்டும் என்கிறார் அவர்.
"முதல் மூன்று
மாதத்தில் கரு புதிதாக உருவாகியிருக்கும். அதற்கேற்றபடி பெண்ணின் உடல் முழுமையாக
மாற்றமடைந்திருக்காது. அதனால் அந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வது அபாயகரமானது.
அது கருச் சிதைவுக்கு வழிவகுக்கும். கடைசி மூன்று மாதத்தில் உடலுறவு கொள்வதால்
முன்கூட்டியே குழந்தை பிறக்க வாய்ப்புண்டு"
கருவுற்ற
காலத்தில் உடலுறவு கொள்ளும்போது, பாதுகாப்பான நிலையில் செய்வதை ஆணும் பெண்ணும் உறுதி செய்து
கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணின் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்.
என்.எச்.எஸ். எனப்படும் பிரிட்டனின் சுகாதாரத்துறையின்
வழிகாட்டு நெறிமுறைகளில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:
உங்களது
மருத்துவர் தடை கூறாவிட்டால், கருவுற்ற காலத்தில் உடலுறவு கொள்வது முற்றிலும்
பாதுகாப்பானது.
உடலுறவு உங்களது
குழந்தையைப் பாதிக்காமல் இருக்கும் வகையில் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
கருவுற்ற
காலத்தில் பாலியல் விருப்பங்கள் மாறுவது இயல்பு. இது கவலைப்பட வேண்டிய அம்சம்
அல்ல. ஆனால் உங்கள் துணையுடன் இதைப்பற்றி பேசினால் உதவியாக இருக்கும்.
கருவுற்ற
காலத்தில் உடலுறவு கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றோ, வேண்டாம் என்றோ
என்றோ நீங்கள் உணரலாம். காதல் செய்வதற்கு நீங்கள் வேறு வழிகளைக் கண்டறியலாம்.
எதுவாக இருந்தாலும் உங்கள் உணர்வு குறித்து உங்களது இணையுடன் பேசுவது முக்கியம்.
உங்கள் கர்ப்பம்
சாதாரணமாக இருந்தால், வேறு எந்த
சிக்கல்களும் இல்லை என்றால், உடலுறவு மற்றும் உச்ச நிலையை அடைவது முன்கூட்டியே குழந்தை
பிறப்பதற்கோ, கருச் சிதைவுக்கோ
வழிவகுக்காது.
கருவுற்ற
காலத்தின் கடைசி நாள்களில் கருப்பையின் தசைகள் கடினமாக போகலாம். இது ப்ராக்ஸ்டன்
ஹிக்ஸ் சுருக்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் சிறிது நேரம்
படுத்திருந்தால் சுருக்கங்கள் மறையும்.
கருவுற்ற காலத்தில் உடலுறவை எப்போது தவிர்க்க வேண்டும்?
கர்ப்ப காலத்தில்
உடலுறவு கொள்வதை எப்போது தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் NHS அறிவுறுத்தியுள்ளது.
அதிக
இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.
நஞ்சுக்கொடி
குறைவாக இருந்தாலோ, ரத்தம்
சேர்ந்தாலோ உடலுறவு கொள்வது ரத்தப் போக்கை அதிகரிக்கக்கூடும்.
பனிக்குட நீர்
வெளிவந்தால் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். இது நோய்த் தொற்றுக்கான அபாயத்தை
அதிகரிக்கும். இது குறித்து மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்.
கருப்பை வாயிலில்
ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். கருச்சிதைவு ஏற்படவோ, முன்கூட்டியே
குழந்தைபிறக்கவோ வாய்ப்புண்டு.
கருவில் இரட்டைக்
குழந்தைகள் இருந்தாலோ, இதற்கு முன்
கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ கடைசி மாதங்களில் உடலுறவு கொளவதைத் தவிர்க்க
வேண்டும்.
பெரும்பாலான
தம்பதிகளுக்கு உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்று NHS கூறுகிறது, ஆனால் அது
அவ்வளவு எளிதானது அல்லது.
உடலுறவு
கொள்வதற்கு வெவ்வேறு நிலைகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். கர்ப்ப
காலத்தில் உடலுறவில் ஈடுபடும்போது பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பெண்களுக்கு சில
நடவடிக்கைகளை NHS பரிந்துரைத்துள்ளது.
"நேருக்கு நேர்
பார்த்தபடியோ பின்புறமாகவோ,
ஒரு பக்கமாகப்
படுத்துக் கொள்வது. வசதியாக இருக்கும்படி தலையணைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை
பிரிட்டன் சுகாதாரத்துறை பரிந்துரைக்கிறது.
ராஜன் போசலேவும்
தனது புத்தகத்தில் இதுபோன்ற யோசனைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
"ஒவ்வொரு
தம்பதிக்கும் குழந்தைப் பேறின்போது ஒரு புதிய நெருக்கமான உறவை உருவாக்க வாய்ப்பு
கிடைக்கிறது. இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள். இந்த காலகட்டத்தில்
ஒருவருக்கொருவர் விதவிதமான வழிகளில் நெருக்கமாக இருக்கலாம். இந்த புதிய நெருக்கம், புதிய பாசம், புதிய காதல்
ஆகியவை அவர்களது எதிர்கால வாழ்க்கையில் ஒரு விலைமதிப்பற்ற பங்கை வகிக்கும்"
நன்றி: பி.பி.சி.தமிழ் வெளியீடு-19/10/2021
No comments:
Post a Comment