புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக மரணத்துக்குரிய நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்!
அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில்
புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில்
மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப்
பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள
அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான்
இந்த வெண் சுருட்டுகள்!
உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண்
சுருட்டுகள் வீதம்,
20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று
நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு
கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட
அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன.
முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித்
தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை
வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும்
வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம்.
இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு
போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது
இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள்
தடித்து வீங்கி, ரத்தக்குழாயின்
அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக்
கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல்
நீர்க்கோவை, இதயத் தசைகளின்
செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில்
மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது.
புகைப்பவர்கள்,
தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு
இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக
குடற்புண்ணும், குடற்
சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய்
வரும்.
இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு
மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை
தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன.
இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன.
இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை
பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து
விடுகின்றன.
இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும்.
புகைக்கு அடிமையாகாமல் இருக்க! புகையை அடியோடு மறப்போம். ஆனால்...
மறவாதீர்கள்!! புகைத்தல் உங்களை மட்டுமன்றி, உங்களுடன்
வாழ்வோரையும் மரணத்தை நெருங்கச்செய்யும்.
ஆதாரம் : கூடல் இணையத்தளம்
No comments:
Post a Comment