****************************************************
சித்தர் சிவவாக்கியம்-471
வாயில்
எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர்
வாயிருக்க
எச்சில் போனவாற தென்ன தெவ்விடம்
வாயிலெச்சில்
அல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏதுசொல்.
வாயில் எச்சில் போக வேண்டும் என்று நீரைக் குடித்து வாய் கொப்புளித்து துப்புவீர். வாய் இருக்க அதைவிட்டு எச்சில் போவது எவ்வாறு? நீங்கள் ஓதுகின்ற போதெலாம் மந்திரங்கள் வாயிலுள்ள எச்சிலால் அல்லவோ உருவாகி வெளிவருகின்றது. ஆதலால் எச்சிலால் ஆன நீரே ஈசன்தான் என்பதை அறிந்து அவனையே நமக்குள் நாடி தவம் புரியும் இடமே எச்சிலால் ஆனது. அது எது என்பதைச் சொல்லுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் --473
மேதியோடும்
ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேதமாய்
உருத்தரிக்குமாறு போலவே
வேதமோது
வானுடன் புலைச்சி சென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.
எருமைக் கெடாவும் பசுமாடும் இணைந்து புணர்ந்தால் அதனால் ஏற்படும் பசுவின் சூலில் இரண்டுங் கெட்ட தன்மையான உருத்தரித்து பிறந்து இறக்கும். ஏனெனில் அவை இரண்டும் வேறு வேறு சாதி. ஆனால் அதைப் போல மனிதர்களில் சாதி பேதம் பேசும் மதியில்லாதவர்களே! வேதம் ஓதும் மேல் சாதி எனக் கூறும் பிராமணன் கீழ் சாதி எனக் கூறும் புலைச்சியுடன் இணைந்து புணர்ந்தால் அதனால் அப்பெண் கருவுற்று பிறக்கும் குழந்தை எந்த சாதி பேதமும் இல்லாமல் தானே பிறந்து வளர்கிறது. இயற்கை இப்படி இருக்கும் போது இதில் எங்கிருந்து வந்தது சாதி? ஆதலால் மனிதகுலம் யாவும் ஓரினம்தான் என்பதை உணருங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 474
வகைக்
குலங்கள் பேசியே வழக்குரைக்கு மாந்தர்கள்
தொகைக்
குலங்கலான நேர்மை நாடியே யுணர்ந்தபின்
மிகைத்த
சுக்கிலமன்றியே வேறுமொன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.
எங்கள் குலமே உயர்ந்தவகை என்று விதண்டவாதம் பேசி வழக்குரைக்கும் மனிதர்களே எல்லா மனிதர்களும் ஒரே வகைதான் என்ற உண்மையை உணர்ந்து அவையாவும் நீரினில் தோன்றிய நேர்மையை அறிந்து எல்லோர்க்கும் பொது நீதியாக உள்ள அதையே நாடி தியானித்திருங்கள். இதுவரையில் அதை அறியாமல் இரைத்த சுக்கிலத்தால் வரும் இன்பத்தை யன்றி வேறு ஒன்றையும் நீங்கள் கண்டதில்லை. சோதியான விந்தி லிருந்தே அனைத்தும் வந்தது என்பதையும் அதைச் சேர்வதுவே மெய்யான பேரின்பம் என்பதையும் அறிந்துணர்ந்து அதியே நாடியிருந்து பிறவிப் பிணியை ஒழியுங்கள். சிரித்துத் திரிபுரம் எரித்த ஈசன் நம்புருவ நடுவில் நின்று ஆடுவதையும் முத்தீயும் ஒன்றாகி நம் தீயான நந்தியாக நின்றதையும் அறிந்து தியானித்திருங்கள். நந்தியே நம் குருவாக வந்து பேசுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 475
ஓதும்
நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்
தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதி
பேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேத பேத மாகியே பிறந்துழன்று இருந்ததே.
ஓதுகின்ற நான்கு வேதங்கள் கூறும் உண்மையும், அனைத்து சாஸ்திரங்களில் உரைத்த உண்மையும், ஐந்து பூத தத்துவங்களில் உள்ள உண்மையும், ஒன்றான மெய்ப்பொருளை அறிவதற்கே அமையப் பெற்றுள்ளது. அதுவே
சாதி பேதம் இல்லாத உண்மையாக இருப்பது. அதைப் பற்றியே அனைத்து நூல்களும் பலவிதமான
பேதமாக கூறி வருகின்றது. அந்த மெய்ப்பொருளே உலகம் எங்கினும் பலவிதமான சாதி
பேதங்களாக பிறந்து உழன்று கொண்டிருக்கின்றது.
***************************************************
..அன்புடன்
கே எம் தர்மா.
No comments:
Post a Comment