பூமி என்னும் சொர்க்கம் 12:

அண்டார்டிகாவில் எரிமலைகள்!


அந்தமான் தீவுகளில் எரிமலை உள்ளது. மற்றபடி இந்தியாவில் எரிமலை கிடையாது. ஆனால் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிருந்த அண்டார்டிகாவில் சுமார் 138 எரிமலைகள் உள்ளன. இவற்றில் 47 எரிமலைகள் ஏற்கெனவே அறியப்பட்டவை. அண்மையில் புதிதாக 91 எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்டார்டிகா பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டம். இந்த எரிமலைகளில் ஒன்று மட்டும்தான் வெளியே தெரியும் வகையில் உள்ளது. அது அண்டார்டிகாவின் விளிம்பு அருகே அமைந்த டிசப்ஷன் தீவில் உள்ளது. மற்ற எரிமலைகள் பனிக்கட்டிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. சில எரிமலைகள் நான்கு கிலோ மீட்டர் ஆழம் கொண்ட பனிக்கட்டிக்கு அடியில் உள்ளன.

 

டிசப்ஷன் தீவில் அமைந்துள்ள எரிமலையின் பெயர் எரிபஸ். இது மிக உயரமானது என்பதால் பனிக்கட்டியைத் துளைத்துக்கொண்டு வெளியே தெரிகிறது. இந்த எரிமலையின் வாயில் எப்போதும் நெருப்புக் குழம்பு உள்ளது. இது கடைசியாகக் கடந்த 2011-ம் ஆண்டில் நெருப்பைக் கக்கியது.

 

இன்னொரு எரிமலை செயலில் இருந்தாலும் அதன் நெருப்புக் குழம்பு வெளியே வர முடியாத வகையில் அதன் வாயைப் பனிப்பாளங்கள் மூடியுள்ளன.

 

விஞ்ஞானிகள் ராடார் கருவிகளைப் பயன்படுத்தியும் நில அதிர்வுப் பதிவுக் கருவிகளைப் பயன்படுத்தியும் 91 புதிய எரிமலைகளையும் கண்டுபிடித்தனர். அண்டார்டிகாவை அடுத்துள்ள கடலின் அடித்தரையில் ஒரு வேளை மேலும் பல எரிமலைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

அண்டார்டிகாவைப் போர்த்தியுள்ள பனிக்கட்டிப் பாளங்களுக்கு அடியில்தான் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அடியில் நிலக்கரிப் படிவுகளும் உள்ளன. அண்டார்டிகா தென் துருவத்துக்கு நகர்ந்து சென்றதற்கு முன்னர் ஒரு காலத்தில் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அண்டார்டிகாவில் நிலத்துக்கு அடியில் நிலக்கரிப் படிவுகள் உள்ளன.

 

பொதுவாகக் கண்டங்கள் இடம் பெயரும்போது கண்டங்களைத் தாங்கியுள்ள சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று செருகிக் கொள்ளும். அப்படிப்பட்ட இடங்களில் எரிமலைகள் அதிகமாக இருக்கும். ஆனால் அண்டார்டிகா வட்டாரத்தில் சில்லுகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகுவதால் இப்படி எரிமலைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அட்லாண்டிக் கடலின் வட கோடியில் உள்ள ஐஸ்லாந்தில் இதுபோன்ற நிலை உள்ளதால் அங்கு பல எரிமலைகள் உள்ளன. அதேபோல கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இதுபோன்று சில்லுகள் விரிவடைந்துவருகின்றன. அதன் விளைவாக அங்கும் பல எரிமலைகள் உள்ளன.

 

எரிபஸ் எரிமலை அமைந்த டிசப்ஷன் தீவுக்கு அருகே ஒரு முறை ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் கடலுக்கு அடியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டன. சில்லுகள் விலகும் பகுதியில் கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் ஊற்றுகள் இருப்பது உண்டு. அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் அமைந்துள்ள வட கடல் பகுதியில் நிறைய எண்ணெய் ஊற்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்டார்டிகா சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்துடன் ஒட்டிக்கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின்னர் அது விலகி தனியே சென்றது. பிறகு அது மீண்டும் இந்தியத் துணைக் கண்டத்துடன் வந்து மோதியது. அப்போதுதான் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தோன்றியதாகக் கருதுகின்றனர். கண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போது விளிம்பு நெடுக மலைகள் தோன்றுவது உண்டு. இந்தியத் துணைக் கண்டமும் அண்டார்டிகாவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இப்படி மோதிக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

அண்டார்டிகா கண்டம் இந்தியாவிலிருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனாலும் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து நேர் தெற்காகக் கிளம்பினால் அண்டார்டிகாவுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

No comments:

Post a Comment