பனி யுகம்
சுமார் 12 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மக்கள் வசித்துவந்தார்கள். அவர்கள் எப்படி
வசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற
நாடுகள் அப்போது இருக்கவில்லை. கனடாவும் இல்லை. ஏனெனில் அவை அனைத்தும்
பனிக்கட்டிக்கு அடியில் இருந்தன. அமெரிக்காவின் வட பகுதியும் இதேபோல
பனிக்கட்டிக்கு அடியில் இருந்தது. ரஷ்யாவின் வட பகுதியும் இப்படித்தான் இருந்தது.
பனிக்கட்டி என்றால் சாதாரணப் பனிக்கட்டி அல்ல. தரையிலிருந்து 3 முதல் 4 கிலோ மீட்டர்
உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே பனிக்கட்டிதான்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 3 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி
மூடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
பூமியில் இப்படிச் சில பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்த காலத்தை பனி யுகம் என்கிறார்கள்.
வட துருவப் பகுதியில் உள்ள கிரீன்லாந்தின் நிலப் பகுதி இப்போது 80 சதவிகித
அளவுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாக உள்ளது. பூமியானது திடீரென்று குளிர்ந்து
போனால் கிரீன்லாந்தின் பனிக்கட்டி தெற்கு நோக்கிப் பரவி பழையபடி மேலே குறிப்பிட்ட
நாடுகளை எல்லாம் மூடிவிடும். அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் பனிக்கட்டியால்
மூடப்பட்டுவிடும்.
கடந்த காலத்தில் பல நாடுகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்ததற்குப் பூமி குளிர்ந்து போனதே காரணம். சூரியனிடமிருந்து பூமியானது வெப்பத்தைப் பெறுகிறது. இந்த வெப்பம் குறைந்து போனால் பூமி குளிர்ந்து போகிறது. இதற்குச் சூரியன் காரணமல்ல, பூமிதான் காரணம்.
சூரியனை பூமி சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமியானது ஒரு பக்கமாகச் சாய்ந்த
நிலையில்தான் சூரியனைச் சுற்றிவருகிறது. இந்தச் சாய்மானம் காரணமாகத்தான் பூமியில்
கோடைக்காலம், குளிர்காலம் ஆகிய
பருவங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தச் சாய்மானம் ஒரே மாதிரி இருப்பது கிடையாது.
இப்போது சாய்மானம் 23.5 டிகிரி அளவில்
உள்ளது.
இது 24.5 டிகிரியாக
அதிகரிக்கும். பின்னர் சாய்மான அளவு குறைய ஆரம்பித்து பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, சாய்மானம் 22.1 டிகிரியாக
மாறும். பிறகு மறுபடி சாய்மானம் அதிகரிக்கும். தவிர, பூமியின் அச்சு
வானில் ஒரு வட்டம் போடுகிறது. அந்த அளவில் சாய்மானம் நேர் மறுபுறத்துக்கு மாறி
விடும். அப்படி மாறினால் என்ன ஆகும்? தமிழகத்தில் டிசம்பரில் வெயில் பொசுக்கும். மே
மாதம் குளிர்காலமாக இருக்கும்.
இப்படியான மாறுதல்கள் மட்டுமின்றி, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரமும்
மாறுபடுகிறது.
பூமியானது சூரியனைச் சற்றே நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஜனவரி
மாதத்தின்போது சூரியனுக்கு உள்ள தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. ஜூலையில் இது
152 மில்லியன் கிலோ
மீட்டராக உள்ளது. எனவே சூரியனுக்கு உள்ள தூரத்தில் ஏற்படும் மாறுபாடு 5 மில்லியன் கிலோ
மீட்டராக உள்ளது. இது பெரிய வித்தியாசம் இல்லை.
எனினும் இந்த வித்தியாசம் சில நேரங்களில் அதிகரித்துவிடுகிறது. இதுவரை
கூறப்பட்ட அம்சங்களின் விளைவாக சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம்
குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போகிறது.
செர்பியா நாட்டைச் சேர்ந்த மிலுடின் மிலன்கோவிச் என்னும் நிபுணர்தான் 1913-ம் ஆண்டில் இந்த
மாறுபாடுகள் குறித்த தமது கொள்கையை வெளியிட்டார்.
பூமியின் வட கோளார்த்தத்தில் கோடைக்காலத்தில் வெயில் நன்கு உறைக்கிற அளவுக்கு
இருக்குமானால் குளிர்காலத்தில் சேர்ந்த பனிக்கட்டிகள் உருகிவிடும்.
கோடைக்காலங்களில் தொடர்ந்து வெயில் அளவு குறையுமானால் பனிக்கட்டிகள் மேலும் மேலும்
சேர்ந்து இறுதியில் பனி யுகம் தலைகாட்ட ஆரம்பிக்கும்.
வருகிற ஆண்டுகளில் மறுபடி பனியுகம் தலைகாட்ட வாய்ப்பில்லை. இப்போது பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதன் விளைவாக துருவப் பகுதிகளில் குறிப்பாக வட துருவத்தில் பனிக்கட்டி அளவு குறைந்துவருகிறது.
கட்டுரையாளர்,எழுத்தாளர்-தொடர்புக்கு: nramadurai@gmail.com
No comments:
Post a Comment