"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 08 [முடிவுரை]



சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம். தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த, புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு [புகலூர்க் கல்வெட்டு] சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த மாவீர அரசர்களாவர். இங்கு சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளம் சகோதரரான இளங்கோ அடிகள் தான் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் ஆவார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற் கொண்ட இமாலயப் படை யெடுப்பு குறிப்பிடத் தக்கதாகும். மற்றும் பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப் பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால சோழன் ஆகும். அவனது இளமைக் காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. மேலும் பல ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.

 

தற்காலத்திய தெற்குத் தமிழ் நாட்டில் சங்க காலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலை நகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். மற்றும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற இடத்தில் நடை பெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப் பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

 

சங்க காலத்தில் குறுநில மன்னர்களும் முக்கிய பங்காற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் மாவீரர்களாகத் திகழ்ந்தனர்.

 

போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட சங்க காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் இன்னொரு விதமாக இருக்கின்றன. 

 

சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. அக்காலத்தில் நிகழ்ந்த பல போர்ச் சம்பவங்களைப் புறநானூறும் பதிற்றுப்பத்தும் விளக்குகின்றன. தொல்காப்பியத்தில் புறத் திணையியலும் போர்ச் சம்பவங்களைப் பற்றியே எடுத்துரைக்கிறது. போர்க்களத்தில் பயன்படுத்த வேண்டிய நியமங்கள் என்ன என்பனவற்றை எல்லாம் நேரடியாக அறிய வழியில்லை. கிடைக்கும் சில சில இலக்கியக் குறிப்புகளை வைத்து ஊகிக்க வேண்டிய நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம்.

 

ஆனால் இந்த இலக்கிய குறிப்புக்கள், சங்க கால பாடல்கள்,  புலவர்கள் தமக்கு பரிசுகள் வேண்டி, அதற்காக புகழ்ந்து பாடியவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. மேலும் போருக்கு இலக்கணம் கூறும் புறநானூற்றுப பாக்களிலும் பார்ப்பனர்களுக்கு ஆதரவான கூற்றுகளே இடம் பெறுகின்றன. உதாரணமாக, பசுக்களைக் கொல்லக் கூடாது, பசுப்போன்ற பார்ப்பனரைக் கொல்லக் கூடாது [?], புதல்வரைப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது போன்ற விதிகள் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், புதல்வரைப் பெறாதவரைக் கொல்லக்கூடாது என்ற விதி இருப்பதைப்போல புதல்வியை (மகளை)ப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது என்ற விதி அங்கு காணப் படவில்லை. இவ்வாறு பார்ப்பன ஒழுக்கங்களே புறநானூற்றில் விதிகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்களைக் கொன்று விட்டால் சந்ததி அற்று அல்லது குறைந்து போய்விடும், பிறகு போரிடுவதற்கு போதுமானவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் பெண்கள் போரில் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

 

பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது. எந்தச் சமூகத்திலும் சண்டை செய்வதற்கு என சில விதிகள் இருக்கவே செய்யும். உதாரணமாக, நேருக்கு நேர் ஆட்கள் போரிடும் பழங்கால முறையில், எந்த நாட்டிலும் முதுகில் தாக்குவது ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை. புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆடைகழன்ற நிலையில் நின்றோரையும் மேய்ச்சல் நிலத்தில் வீழ்ந்தோரையும் நீரில் பாய்ந்தோரையும் படைக்கலமின்றி நிர்க் கதியாய் நிற்போரையும் தாக்குதல் கூடாது என்பவை பொதுவான அக்கால விதிகள் என்று கூறலாம்.

 

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை”

[புறநானூறு 76]

 

போரில் பிறரை அழிப்பவர்களுக்கு மிகச் சாதகமான பாட்டு இது ஆகும். ஏனெனில் உயிரோடு இருப்பவரிடம் இருந்து தான் பரிசு பெறமுடியும். இறந்தவன் பெருமை பாடுவதால் புலவனின் வயிறு நிறையாது. வட புலத்துப் பண்புகளைக் கொண்ட பெரும்பாலான இப் புலவர்கள், வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் வருணிக்கப் பட்ட கடவுளர்களுடன் தமிழகத்து மன்னர்களை ஒப்பிட்டனர். ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட தலைவன் ஒருவனின் சார்பாகப் பாடியதாக தோன்றவில்லை. அப்படி பாடி இருந்தால்,  கொல்லாமையே இவ்வுலகத்து இயற்கை’ என்று பாடியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை.  பாதிக்கப்பட்டவர்களுக்கும் , தோல்வியுற்றவர்களுக்கும் எந்த புலவரும் ஆதரவு இல்லை என்பது தான் உண்மை. சங்க கால அரசர்கள், பொதுவாக போரினால் பெற்ற வெற்றிகளைத் தங்கள் பெயருடன் இணைத்துள்ளனர். மேலும் போருக்குப் புறப்படும் அரசர்களும் வீரர்களும் வஞ்சினம் உரைப்பதையும்  அங்கு காண்கிறோம்.

 

இவற்றை வீரயுகத்திற்குரிய மதிப்புகள் என்று இன்று கணித்து, இவை போன்றவை இன்று முதன்மை பெற்றுக் காணப்படுவதை காண்கிறோம். சங்க இலக்கியத்தில் சில புறநானூற்றுப் பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் அவற்றிற்கு தமிழ் வீர கவிதை [Tamil Heroic Poems] என்ற பெயர் தந்தார். இதற்கு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்த, முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் கைலாசபதியும் தமிழ் வீர கவிதை [Tamil Heroic Poems] என்னும் தலைப்பில் தான், தனது இலக்கிய வரலாற்று ஆய்வை செய்தார். அதன்பின் மிகச் சிறப்பான முறையில் சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்த ஏ.கே. இராமானுஜன் அதற்குக் கொடுத்த பெயர் காதல் மற்றும் போர் கவிதைகள் [Poems of Love and War]. இவையெல்லாம் சங்க இலக்கியப் புறப்பாக்களில் காணப்படும் வீரத் தன்மையை மட்டும் வலியுறுத்துவனவாக உள்ளன.

 

நாட்டிற்காகப் போரிட்டு இறப்பது உயரிய பண்பு எனக் கருதப்பட்டது. இதனை இன்று வரை நமது கவிதைகள் முதற் கொண்டு திரைப்படம் வரை வலியுறுத்தி வருகின்றன. போரில் புறமுதுகிடுவதும் முதுகில் புண்படுவதும் இழுக்கு எனக் கருதப் பட்டது. போரில் இறந்து பட்ட வீரர்களின் பெயரால் அவர்தம் உறவினர்களுக்கு ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நடுவது வழக்கம். அக்கல்லில் அவ்வீரனைப் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டன. உலகமுழுவதும் இன்று சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். பலசமயங்களில் அவர்கள் கடத்தப் பட்டும் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர். பழங் காலத்தில் சிறார்கள் இப்படி கடத்தப் பட்டுப் படைகளில் சேர்க்கப் பட்டதற்கான குறிப்புகள் ஒன்றும் அதிகமாக இல்லை. என்றாலும், சிறுவர்களும் போரில் ஊக்கத்துடன் அக்காலச் சமூகத்தினால் ஈடுபடுத்தப் பட்டதை இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உதாரணமாக வீரத்தாய் வரலாற்றில் அதை காண்கிறோம்.

 

எது எப்படி இருந்தாலும், இன்றைய இளைஞர் யுவதிகளுக்கு ஒரு உற்சாகம் கொடுக்கும் பாடல்களாக சங்க கால மாவீரர்களின் கதைகள்  இருப்பது என்னவோ உண்மைதான் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முடிவுற்றது, ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]

No comments:

Post a Comment