[மாவீரன் சோழன்
போரவைக்கோப்
பெருநற்கிள்ளி]
இவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில் [ஆமூரில்] வாழ்ந்து வந்தான். அங்கு இவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் [படைத் தலைவனாகப்] பணிபுரிந்தான்.
பண்டைக் காலத்தில், போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக் கூடங்கள் இருந்தன.
அவற்றிற்கு போரவை [அல்லது முரண்களரி:- மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்
பயிற்சிக் களம்] என்று பெயர். கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன்.
இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று
அழைக்கப்பட்டான்.
இப்படியான போர்ப்பயிற்சிக் களம் அல்லது விளையாட்டுக் களம் ஒன்றைப்பற்றி
பட்டினப்பாலை மிக தெளிவாக அழகாக கிழே உள்ளவாறு
கூறுகிறது.
"முது
மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை
இருங் கிளை இனன் ஒக்கல்
கருந் தொழில் கலிமாக்கள்
........................................
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி
பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
எல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை"
பட்டினப்பாலை(59-74)
வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின்
நிழலில், மறவர்கள் தம்
வலிமையைக் காட்டும் போர்ப் பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய
உறவினர்களும், இனச்
சுற்றத்தினரும் கூடியிருந்தனர். வலிமையான போர்த் தொழிலில் வல்ல போர் மறவர்கள்,
.......................................
.............................. கையினாலும், படைக்கலத்தினாலும்
ஒருவருக்கொருவர் பின் வாங்காது, போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர்
வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில் [catapult] கல்லை ஏற்றி
எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான
பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன.
பண்டைய காலத்தில், ஒரு நாட்டிற்கு எதிராக படையெடுத்துத் தாக்குதல் செய்வ தென்றால், முதல் ஒரு
எச்சரிக்கையாக அந்த நாட்டின் பசுக்களை வெட்சி பூ [ஒருவகைக் காட்டுப்பூ] சூடி, அங்கு போய்
கவருவார்கள். இப்படியான வழக்கம் மகாபாரத காலத்திலும் இருந்தது என்றாலும், அங்கு பூ
சூடுவதில்லை. இப்படி தமிழர் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பூ சூடுவது போல் உலகில்
எங்கும் இல்லை. எதிர் அணி பசுக்களை வெற்றிகரமாக மீட்க போரிடும். அப்பொழுது அவர்கள்
கரந்தை பூ சூடி போரிடுவார்கள். வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி
ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும்
இலக்கண நூல் கூறுகிறது. அப்படியான ஒரு வெட்சி
கி மு 500 ஆண்டளவில்
ஆமூரில் நடைபெற்றது.
அதை மீட்கும் பொறுப்பு ஆமூர் அரசனின் படைத் தலைவன் கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று.அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்ற பொழுது [பகைவரின் பசுக்களைக் கவர்தல் வெட்சிப் போரும். பசுக்களை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் அல்லது அப்படி கவர்ந்த பசுக்களை மீட்கும் போர், கரந்தைப் போர் ஆகும்], வீரர்களை அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண் மொழி [நீண்மொழி என்பது ஓருவீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது / Theme describing the vow taken by a warrior] பேசி அவர்களை ஊக்குவிப் பதற்கா, அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு புலவர் சாத்தந்தையாருக்கு பணித்தான்.இதோ அந்த பாடல்:
"துடி
எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
5
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
10
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே."
[புறநானூறு
287]
துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! மாரிக்
காலத்து நீர்த்தாரை போல அம்பு உடம்பில் தைத்தாலும், வயலில்
கெண்டைமீன் பிறழ்வது போல உடம்பில் வேல் புரண்டாலும், பொன்னாலான நெற்றி
பட்டம் கொண்ட மாபெரும் யானை தன் தந்தக்
கூர்மையால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத பெருமை பொருந்திய வீரன்
அவன். அந்தப் பெருமையைப் பாராட்டி அவனுக்கு வேந்தன் தண்ணடை (நன்செய்-நிலம் / Arable land / agricultural lands) வழங்குவான். பொய்கையில் வாழும் வாளைமீன் பிறழும்போது நெல்
சேமிமித்து வைத்திருக்கும் குதிர் என்னும் கூட்டில் மோதித் திரும்பும் அளவுக்கு
நீர்வளம் மிக்க தண்ணடை-வயல் அது [தண்ணடை என்னும் மருத நிலங்களை போரில் சிறந்த
வெற்றிச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு பழங்காலத்தில் கொடுப்பது வழக்கமாய்
இருந்தது]. அதனைக் கொடுத்தாலும் போரில் இறந்துபடுவானேயாயின், அவனுக்கு
வழங்கப்பட்ட நிலத்தால் என்ன பயன்? அவனுக்குக் கிடைப்பதெல்லாம் மேலுலகத்தில்
குற்றமற்ற மகளிரைத் தழுவும் இன்ப வாழ்வுதான்.
அதாவது போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இது கூறுகிறது. அதனால், குறும்பு
செய்யும் [வம்புப் பிடித்த] பகை வேந்தனுடைய படை வருவதை இங்கிருந்தே காண்பீராக
என்று உற்சாகப்படுத்தினான்.
சோழன் போரவைக் கோப் பெருநற்கிள்ளி, உடல் வலிமை மிக்க ஆமூர் அரசன் மல்லன்
என்பவனுடன் எவ்வாறு திறமையாக போரிடுகிறான் என்பதை மிக அழகாக புறநானூறு 80 எடுத்து
இயம்புகிறது. இங்கு இனிய கள் மிகுதியாக உள்ள ஊர் ஆமூர் ஆகும். சோழன் போரவைக்
கோப் பெருநற்கிள்ளி தந்து ஒரு காலை மண்டியிட்டு மல்லன் மார்பில் மிதித்துக்
கொண்டு மற்றொரு காலால் மல்லனை மடக்கப் போட்டு வளைத்து அவனோடு மற்போர் செய்கிறான்
என இந்த பாடல் மூலம் நாம் காண்கிறோம். இது, பசித்து அதனால் மூங்கிலை வளைத்து முறிக்கும்
யானையைப் போல் அவன் தலையையும் காலையும் பிடித்து
வளைத்துத் தாக்குவது போல இருந்ததாம் என சாத்தந்தையார் என்ற புலவர் பாடுகிறார்.
"இன்
கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு
கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்
போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே."
[புறநானூறு
80]
ஒரு பெண் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், இவன் இளவரசனாக இருந்த போது, இவன் மேல் ஒரு தலைக் காதல் [கைக்கிளைக் காதல்] கொண்டிருந்தாள் என்று புறநானுறு 83,84 & 85 மற்றும் சங்க பாடலில் இருந்தும் நாம் அறிகிறோம். பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். ஆகவே உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக இவள் தந்தை இருக்க வேண்டும். அந்த காதலுக்கு என்ன நடந்தது என்றோ, இவன் எப்படி சோழ அரசன் ஆகினான் என்றோ தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.
0 comments:
Post a Comment