தவறினால் புற்றுநோய் ஆபத்து - மருத்துவ அறிவியல் ஆய்வு
உணவு
பொருள்களை சில முறைகளில் சமைக்கும்போது நச்சு ரசாயனங்களை உருவாக்கி நுரையீரல்
புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன
செய்ய வேண்டும்?
"நாம் பரிணாம
வளர்ச்சி பெற்று மனிதர்களாக உருவெடுத்ததற்கான முழுக் காரணமே நாம் உணவைச் சமைக்கத்
தொடங்கியதுதான்" என்கிறார் ஜென்னா மேசியோச்சி.
"சமைக்காத உணவை
மட்டுமே நாம் உட்கொண்டபோது, தொடர்ந்து
சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அதில் இருந்து ஊட்டச்
சத்துக்களைப் பெற நமது உடல் போராட வேண்டியிருந்தது."
சஸ்ஸெக்ஸ்
பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை எப்படி நோய் எதிர்ப்பு
மண்டலத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்தவர் மேசியோச்சி.
அவரது கருத்துடன் உயிரியலாளர்கள் உடன்படுகின்றனர்.
உண்மையில்
நெருப்புடன் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்பதற்கு
பல சான்றுகள் உள்ளன.
உணவைச் சமைத்து
உண்ணத் தொடங்கியபோது அதில் இருந்து கலோரிகள் மற்றும் கொழுப்பைப் பிரித்தெடுப்பது
எளிதானது. ஜீரணிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆற்றலின் அளவைவிட அதன் மூலம்
கிடைக்கும் ஆற்றலின் அளவு அதிகமாக இருந்தது. நாம் குறைவாக மெல்ல வேண்டியிருந்தது
என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
அது நமது
தாடைகளின் அளவைக் குறைக்க உதவியதுடன் மூளையைப் பெரிதாக்கவும் பயன்பட்டது. பல
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று, நச்சுத்தன்மையிலிருந்து
நம்மைப் பாதுகாக்கவும் சமையல் உதவுகிறது.
இப்படிச் சமைப்பதால்
பல நன்மைகள் இருந்தபோதிலும், உணவை அதிக
வெப்பநிலையில் தயாரிப்பதால் மறைமுகமான சில ஆபத்துகளும் இருக்கின்றன.
சமைக்காத உணவுகளை
உண்ணும் வழக்கம் வளர்ந்து வரும் நிலையிலும், மாறுபட்ட வகையில்
உணவைச் சமைக்கும் வழக்கம் அதிகரித்திருக்கும் நிலையிலும் சமையல் மீது விஞ்ஞானிகள்
பார்வையைக் குவித்திருக்கின்றனர்.
அக்ரிலாமைடு:
அளவுக்கு அதிகமாகச் சமைப்பதால் புற்றுநோய் ஆபத்து
ஒரு உணவைத் தயார்
செய்யும் போது அனைத்து வகையான சமையல் முறைகளும் ஒன்றாக இருக்காது. சில உணவுப்
பொருள்களுக்கு அதிக வெப்ப நிலையைப் பயன்படுத்த வேண்டும். சிலவற்றுக்கு குறைந்த
வெப்பநிலை போதுமானதாக இருக்கும்.
குறிப்பாக மாவு
சத்துள்ள உணவுகளால் அக்ரிலாமைடு என்ற ரசாயனம் உடலில் சேருவதாக பிரிட்டன் உணவுத் தர
நிலை நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது. இந்த ரசாயனம் காகிதம், சாயங்கள் மற்றும்
பிளாஸ்டிக்குகள் தயாரிக்க பயன்படுகிறது. உணவு நீண்ட நேரமோ அல்லது அதிக
வெப்பநிலையிலோ வறுக்கப்படும் போதும் இது உருவாகிறது.
உருளைக் கிழங்கு
போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்தவை, வேரில் உருவாகும்
காய்கறிகள், சுடப்படும் ரொட்டி, காபி, கேக்குகள், பிஸ்கட் போன்றவை
கவனிக்கப்பட வேண்டியவை. அவற்றில் உள்ள ஸ்டார்ச் கருமையாகத் தொடங்கும்போது
எதிர்வினையை கவனிக்க முடியும்.
அக்ரிலாமைடு
புற்றுநோயை உருவாக்கும் சாத்தியமுள்ள காரணியாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேசியோச்சி
போன்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் அதிக அக்ரிலாமைடு கொண்ட உணவுகளை பயன்படுத்துவதைத்
தவிர்ப்பது நல்லது என்று கூறுகின்றனர்.
"இது தொடர்பான
பெரும்பாலான சோதனைகள் விலங்குகளுடன் ஆய்வகத்தில் செய்யப்படுகின்றன, ஆயினும்
அக்ரிலாமைடு மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக நாங்கள்
நினைக்கிறோம்," என்கிறார் அவர்.
அக்ரிலாமைடு
உருவாவதைத் தவிர்க்க, அதிக
வெப்பநிலையில் உருளைக்கிழங்கை சமைக்கும் போது தங்க நிறத்தை இலக்காக வைத்துக் கொள்ள
வேண்டும், அதிக வெப்ப நிலையில்
சமைக்க வேண்டுமெனில் குளிர்சாதனப் பெட்டியில் உருளைக் கிழங்குகளை வைக்கக் கூடாது
என்பன போன்ற பரிந்துரைகளை எஃப்எஸ்ஏ வழங்கியிருக்கிறது.
குளிர்ச்சியான
உருளைக்கிழங்கு சமைக்கும்போது சர்க்கரையை விடுவிக்கிறது. இது அமினோ அமிலங்களுடன்
சேர்ந்து அக்ரிலாமைடை உருவாக்குகிறது. இதைத் தடுக்க, இந்த பொருட்களை
உயர் வெப்பநிலையில், அளவுக்கு அதிமாகச் சமைப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
ஆனால், இதுமட்டுமே
தீர்வல்ல. அக்ரிலாமைடு என்பது நவீன கால உணவுப் பழக்கங்களில் புற்றுநோயை
ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளில் ஒன்றுதான். வேறு பல காரணிகளும் இருக்கின்றன.
சமையலறை
புகையும் நுரையீரல் புற்றுநோயும்
சமையலின்
விளைவுகள் நாம் சாப்பிடுவதன் மூலம் மட்டுமல்லாமல், நாம்
சுவாசிப்பதன் மூலமும் நம்மைப் பாதிக்கின்றன. வளரும் நாடுகளில் பல நோய்களுக்கு
சமையல் அடுப்புகளே முக்கிய காரணம். மரம், பயிர் கழிவுகள்
மற்றும் கரி போன்ற திட எரிபொருட்களைப் பயன்படுத்தும் போது, புகை
உருவாகும். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, இது ஒவ்வொரு
ஆண்டும் 38 லட்சம் இறப்புகளுக்கு
காரணமாகிறது..
நாம் சமைக்கும்
உணவில் உள்ள சில பொருட்கள் வீட்டுக்குள் காற்று மாசுபாட்டுக்கும் வழிவகுக்கும்.
புற்றுநோய்
ஆராய்ச்சி மற்றும் மருத்துவ புற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், சமையல்
எண்ணெயிலிருந்து வரும் புகையைச் சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
ஆபத்து அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது.
சமையல்
எண்ணெயிலிருந்து வரும் புகையில் 'ஆல்டிஹைடு' எனப்படும்
புற்றுநோயை உருவாக்கும் ரசாயன் இருப்பதை தைவானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்தனர்.
சமைத்த
இறைச்சியும் நீரிழிவும்
இறைச்சி
உண்பவர்கள், அதைச் சமைக்கும் விதம்
குறித்தும், எத்தனை முறை
சாப்பிடுகிறோம் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். தீயில் நேரடியாகச் சமைப்பது, பார்பிக்யூ, அதிக வெப்பநிலைப்
பயன்பாடு போன்றவை பெண்களுக்கு நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது ஆண்களுக்கு ஏன்
ஏற்படுவதில்லை என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.
அதிக
வெப்பநிலையில் அல்லது நேரடியாக தீயில் சமைக்கப்பட்ட சிவப்பு இறைச்சி, கோழி மற்றும்
மீன் போன்றவற்றை மாதத்தில் 15 நாள்கள்
சாப்பிடுபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுவதற்கான தொடர்பு இருப்பதாக
மற்றொரு ஆய்வு கூறுகிறது.
உடற்பயிற்சி
அல்லது சர்க்கரை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட உணவின் மற்ற அம்சங்கள் எதுவும் இதில்
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீர் மற்றும்
நீராவியில் வேகவைப்பது போன்ற மாற்று வழிகளில் சமைப்பது நீரிழிவுடன்
தொடர்புடையாகவத் தெரியவில்லை.
மாற்றுச்
சமையல் முறைகள்
கடந்த
நூறாண்டுகளில் சமையல் நுட்பங்கள் விரிவடைந்திருக்கின்றன. பழைய வெப்பப்படுத்தும்
முறைகள் இப்போது அருகிவிட்டன. மைக்ரோவேவ், எலெக்ட்ரிக்
அடுப்பு, டோஸ்டர்கள் போன்றவை பரவலாக இருக்கின்றன.
மைக்ரோவேவை
ஆரோக்கியமான சமையல் முறை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காளான்களை சமைக்கும்
ஆரோக்கியமான வழிகளில் ஒன்று மைக்ரோவேவ் என ஸ்பெயின் ஆராய்ச்சி ஒன்று
கண்டுபிடித்தது.
குறைந்த நீர்
மற்றும் குறைவான நேரத்தைப் பயன்படுத்திச் சமைப்பதன் மூலம் காய்கறிகளில் ஊட்டச்
சத்துகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
" காய்கறிகளை
நீரில் வேக வைப்பதை விட நீராவியில் வேகவைப்பது மிகவும் சிறந்தது. அதிக
வெப்பநிலையில் நீண்ட நேரம் சமைப்பது எதுவுமே ஆபத்தானதாகத் தோன்றுகிறது. ஒன்று
ஊட்டச்சத்தைக் குறைக்கிறது. அல்லது அக்ரிலாமைடு போன்ற ரசாயனங்களை
உருவாக்குகிறது" என்கிறார் மேசியோச்சி.
இதேபோல் சில
எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் சூடாகும்போது அவை உடலுக்கு ஆபத்தாக மாறுகின்றன.
அதே நேரத்தில், சில சமையல்
முறைகள் ஆபத்தானவை என்றாலும் சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது கூடுதல் ஆபத்தை
கொண்டிருக்கின்றன. சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு மாதவிடாய்
குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, இறைச்சியோ, காய்கறியோ சமைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால் எப்படிச் சமைக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
0 comments:
Post a Comment