பூமியின் சுழற்சி விமானப் பயண நேரத்தை மாற்றுகின்றதா?

 


நம் எல்லோருக்கும் தெரியும், நமது பூமியானது (மத்திய இரேகையில்) மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் சுழன்றுகொண்டே இருக்கின்றது என்று.

 

அப்படியானால், 10 கி.மீ. உயரத்தில் கொழும்பில் இருந்து நேர் மேற்கே இருக்கும் பனாமா நகரை நோக்கி  மேற்குத் திசையில், 900 கி.மீ. (தரை) வேகத்தில் பறக்கும் விமானம் ஒன்றுக்கு, அந்த நகர், ஒவ்வொரு மணித்தியாலமும் 1670 கி.மீ. அந்த விமானத்தை நோக்கி சுழன்று வந்து கொண்டு இருக்கின்றது என்று எதிர்பார்க்கலாம். இப்பொழுது, 1670+900=1570 கி.மீ. சார்பு வேகத்தில் அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்றும் கணக்குப் போடலாம்.

 

அதேபோல, விமானம் கிழக்குத்திசையில் பயணம் செய்யும்போது, விமானத்தின் சார்பு வேகம் 1670-900=770 கி.மீ என்றாகிவிட,.அந்த நகரம் விமானத்தை விட்டு சுழன்று விலகிக்கொண்டே போவதாகவும் நினைக்கலாம்

 

அப்படியானால், விமானம் ஓடாமல் மேலே நின்றுவிட்டுக் கீழே இறங்கினால் இன்னொரு இடத்தில் தரை  இறங்கிவிடும் என்றல்லவா வந்துவிடும்?

 

ஆனால் அது உண்மை அல்ல!

 

பூமியின் பாரிய ஈர்ப்புச் சக்தியின் காரணமாக பூமி சுழர்வதோடு சேர்த்து, ஒட்டுமொத்தமாக 16 கி.மீ.உயரம் வரை செல்லும் அடர்த்தியான மற்றும் 480 கி.மீ. வரை செல்லும் செறிவு குன்றிய வளி மண்டலங்களும், இதே ஆரை வேகத்துடன் சுழன்று கொண்டே இருக்கின்றன. இவ்வானத்தில் புவி ஈர்ப்பு எல்லைக்குள் அகப்படும் எந்த ஒரு பொருளும், 30 மீ உயரத்தில் பறக்கும் கிளி, 300 மீ உயரத்தில் பறக்கும் வல்லூறு, 400 கி.மீ. தூரத்தில், 28,000 கி.மீ. வேகத்தில் உந்தி விடப்பட்ட விண்வெளி நிலையம், பல்வேறு தூரங்களில் இருக்கும் செயற்கைக் கோள்கள் எல்லாமே இவ்வாறே சேர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

 

ஒரு 300 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டு இருக்கும் அதி வேக இரயில் வண்டியினுள், உங்கள் முன்னாள் பறந்து வரும் ஈ ஒன்று 301 அல்லது 299 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டு இருக்கவில்லை.

 

அங்கு, போத்தலில் இருந்து கிளாஸினுள் ஊற்றப்படும் பானம் 50 மீ. தள்ளிப் பின்னால் வரும் பெட்டிகளுக்குள் விழுவதும் இல்லை.

 

எல்லாமே ஓடும் பெட்டிக்குள் ஒன்றாகி அடக்கமாய் விட்டன.

 

என்? நாம் தரையில் நின்று ஒரு தொங்கல் தொங்கி, கீழே காலைப் பதிக்கும்போது அதே இடத்தில்தான் விழுகின்றோம்; பூமி சுற்றுவதால் 468 மீ. தள்ளிப் பக்கத்து வீதியில் விழுவதில்லை.

 

ஆதலால், பூமி சுழர்வதால், விமானப் பயணத்தை எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பதுதான் உண்மை.

 

ஆனால், பூமியின் சுழற்சி வேறு காரணத்தினால் பயண வேகத்தைப் பாதிக்கின்றது.

 

பூமியின் மத்திய இரேகையில், பூமி சுற்றலின் கூடிய வேகமும், வெப்பமும், மற்றும் வடக்கு, தெற்கு பாகங்களில் குறைந்த  வேகமும் குளிரும் காரணமாக, விமானம் பறக்கும் பகுதிகளில் ஜெட் ஸ்ட்றீம் என்றழைக்கப்படும் புயல் போன்ற காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 150-200 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இதன் காரணமாக விமானப் பயணம் மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் நேரம், கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் நேரத்திலும் பார்க்க குறைவாகவே இருக்கும்.

 

எனவே, பூமியின் சுற்று எந்த ஒரு இடத்தையும் நம்மை நோக்கிக் கொண்டு வரவோ அல்லது  விலகிப் போகவோ செய்ய மாட்டாது.

 

சுழற்சியால் உருவாகும் புயல்தான் (மேற்கு நோக்கி அல்லாது) கிழக்கு நோக்கி விமானத்தை விரைவாய்க் கொண்டு செல்லும்.

 

ஆக்கம்:செ.சந்திரகாசன்

 

No comments:

Post a Comment