இனிப்பு உண்பதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?

மனிதர்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வதால் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அளவை விட குறைவாக சர்க்கரை சாப்பிடும் போது தலைவலி, சோர்வு, எண்ண மாற்றங்கள் போன்ற சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

 

இதற்கான காரணங்கள் இதுவரை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடும் போது, மனித மூளை எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதோடு அந்த அறிகுறிகள் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

நாம் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரை (Table sugar) என்பது சுக்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கரும்பு, சர்க்கரை, கிழங்கு, போன்ற பொருட்களில் இருக்கிறது.

 

இன்று அபரிவிதமாக உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவின் சுவையைக் கூட்ட, உணவில் சுக்ரோஸ் மற்றும் பல வகையான சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. உணவில் சர்க்கரை சேர்ப்பதால் சுவை கிடைப்பது போக, மனித மூளையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

 

நம் வாய்க்குள் சுக்ரோஸ் சென்ற உடன் இனிப்பு சுவை ரெசப்டார்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. அது மூளையில் டோபாமைன் என்கிற ரசாயனத்தை வெளிப்படுத்துகிறது.

 

டோபாமைன் என்கிற ரசாயனம் ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர். அதாவது மூளையில் இருக்கும் நரம்புகளுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு ரசாயனம்.

 

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், வெகுமதிகள் கிடைக்கும் போதும் இந்த ரசாயனம் வெளிப்படுகிறது. இந்த டோபாமைன் விளைவு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. டோபாமைன் விளைவு, நம்மை அதிக உணவை உட்கொள்ளத் தூண்டும்.

 

மனிதர்கள் மற்றும் விலங்குகள், அதிகம் சுக்ரோஸ் உட்கொள்வதால் ஏற்படும் டோபாமைன் விளைவுகளால் மூளையின் அமைப்பே மாறும், உணர்வு ரீதியிலான விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதத்தை மாற்றும், நடத்தையை மாற்றும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

 

சர்க்கரை மனிதர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது எதார்த்தமானதுதான். ஆகையால் சர்க்கரை உட்கொள்வதை குறைக்கும் போதோ அல்லது சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தும் போதோ ஏற்படும் எதிர்மறை விளைவுகள் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை.

 

சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தும் ஆரம்ப நாட்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்னைகள் எழுவதாகக் கூறுபடுகிறது..

 

உடல் ரீதியாக தலைவலி, சோர்வு, தலை சுற்றல் போன்ற பிரச்னைகளும், மன ரீதியாக மன அழுத்தம், மனச் சோர்வு, உணவு சாப்பிட வேண்டும் என்கிற ஏக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

 

அதாவது சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தும் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கத்தில் உணவு கட்டுப்பாடு திட்டங்களைத் தொடங்கும் போது மிகவும் சிரமமாக இருக்கிறது.

 

சர்க்கரை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும் அல்லது சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தும் மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்குப் பின்னால், பெரும்பாலும் மூளையின் ரசாயன சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இருக்கின்றன.

 

ஒருவரின் உணவில் இருந்து சர்க்கரை நீக்கப்படும் போது, மூளையில் டோபாமைன் விளைவுகள் திடீரென குறைகின்றன, எனவே அது மூளையின் மற்ற செயல்பாடுகளை பாதிக்கலாம்.

 

எனவே எந்த ஓர் உணவுக் கட்டுப்பாட்டின் முதல் சில வாரங்கள் மிகவும் கடினமாவைகளாக இருக்கின்றன. சர்க்கரை கெடுதல் அல்ல, ஆனால் அதை அளவோடும், ஆரோக்கியமான உணவோடும், உடற்பயிற்சிகளோடும் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

பிபிசிக்காக-ஜேம்ஸ் ப்ரவுன்

(ஜேம்ஸ் ப்ரவுன் பிரிட்டனில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் & உயிர் மருத்துவ துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார்.)

No comments:

Post a Comment