பூமி என்னும் சொர்க்கம் 8:

நீண்ட தூக்கம்!

உங்களால் தொடர்ந்து எவ்வளவு நேரம் தூங்க முடியும்? நல்ல குளிர் காலத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு சில மணி நேரம் தொடர்ந்து தூங்க முற்பட்டால் திடீரென்று விழிப்பு ஏற்படும். காரணம் பசி. எழுந்து சாப்பிட்டு விட்டு மேலும் தூங்கலாம். ஆனால் உணவு, தண்ணீர் இல்லாமல் நான்கு நாள், பத்து நாள், முப்பது நாள் என்று தொடர்ந்து உறங்க இயலாது.

 

ஆனால், சில வகைப் பிராணிகளால் உணவு, தண்ணீர் இன்றிப் பல மாத காலம் தூங்கிக்கொண்டு இருக்க முடியும். இதுபோன்ற பிராணிகள் வடதுருவப் பகுதியில் வாழ்கின்றன. அதாவது கனடாவின் வட பகுதி, நார்வே, சுவீடன் நாடுகளின் வட பகுதி, ரஷ்யாவின் வடபகுதி, அலாஸ்கா ஆகியவற்றில் உள்ளன.

 

குளிர் காலம் வந்துவிட்டால் இவை உறங்க ஆரம்பித்து விடுகின்றன. கோடைக் காலம் ஆரம்பிக்கும்போதுதான் விழித்துக்கொள்கின்றன. பிராணிகளின் இந்த உறக்கத்தை ‘நீள் துயில்’ (Hibernation) எனலாம்.

 

குளிர் காலத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே உறை பனியாக இருக்கும். இரை கிடைக்க வாய்ப்பு இருக்காது. எனவேதான் இவை நீண்ட நாட்கள் உறங்க ஆரம்பித்துவிடுகின்றன. இந்த உறக்கம் இவற்றுக்கு இயற்கை அளித்த தகவமைப்பு.

 

இவை இப்படி உறங்கும்போது சுருண்ட நிலையில் இருக்கின்றன. தட்டி எழுப்ப முடியாது. உடல் வெப்பம் குறைந்துவிடும். இந்தப் பிராணியைத் தொட்டுப் பார்த்தால் ஐஸ் கட்டிபோல் இருக்கும். நாடித் துடிப்பு மிகவும் குறைந்து இருக்கும். சுவாசமும் மிகக் குறைவாக இருக்கும். இதுபோன்ற உறக்கத்தின்போது சிறுநீர் கழிப்பதில்லை. மலம் கழிப்பதில்லை. கோடைக் காலம் வந்துவிட்டால் இவை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றன.

 

மரத் தவளைகள், தரை அணில்கள், வவ்வால், சில வகை எலிகள், ஒரு வகைப் பாம்பு முதலியவை இந்த நீள் துயிலில் ஈடுபடுகின்றன. காமன் பூர்வில் என்ற பறவை சுமார் ஐந்து மாத காலம் இப்படி உறங்குகிறது.

 

மனிதனால் நீள் துயிலில் ஈடுபட இயலாது. நாம் விழித்துக்கொண்டிருந்தாலும் சரி, உறங்கிக்கொண்டிருந்தாலும் சரி நமது உடல் வெப்ப நிலையில் பெரிய வித்தியாசம் இருக்காது. இதயத் துடிப்பில் பெரிய மாற்றம் ஏற்படாது. சுவாசமும் கிட்டத்தட்ட அதே அளவில் இருக்கும். எனவே, நமது உடல் இயக்கம் தொடர்ந்து நடைபெற அவ்வப்போது உணவும் தண்ணீரும் தேவை.

 

வட துருவப் பகுதியில் வாழும் துருவக் கரடி போன்ற பெரிய விலங்குகள் நீள் துயிலில் ஈடுபடுவதில்லை. மாறாக இவை அயர் நிலைக்குச் (Torbor) சென்றுவிடுகின்றன. துருவக் கரடி இதுபோன்று உறங்க ஆரம்பித்து விடும். ஆனால், அந்த உறக்கத்தின் போது தட்டி எழுப்ப முடியும். விழித்துக்கொண்ட பிறகு, மறுபடியும் உறக்கத்துக்குச் சென்றுவிடும்.

 

குளிர் பிரதேச விலங்குகளுக்கு மட்டுமன்றி, பாலைவனப் பகுதியில் வாழும் சில வகைப் பிராணிகளுக்கும் இதுபோன்ற திறன் உள்ளது. சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, சில வகைத் தவளைகள் முதலியவை பாலைவன மணலுக்குள் புதைந்துகொண்டு உறங்க ஆரம்பித்துவிடுகின்றன. நிபுணர்கள் இதை வேனில் உறக்கம் (Estivation) என்று குறிப்பிடுகின்றனர்.

 

மனிதரிடம் செயற்கையாக இதுபோன்ற நிலையை உண்டாக்க முடியுமா என்று நிபுணர்கள் நீண்ட காலமாகவே ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் நாஸா ஆய்வு மையம் இதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது. நாஸாவின் சார்பில் ஒரு நிறுவனம் இப்போது ஆராய்ச்சி நடத்திவருகிறது. அதற்குக் காரணம் உண்டு.

 

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதானால் குறைந்தது எட்டு மாத காலம் ஆகும். செவ்வாய்க்கான விண்கலத்தில் எட்டு விண்வெளி வீரர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இருவர் தவிர, மற்ற அனைவரும் நீள் துயிலில் ஈடுபட முடியும் என்றால் எவ்வளவோ வசதியாக இருக்கும். உணவு, குடிநீர் தேவை பெரிதும் குறைந்துவிடும். நடமாடுவதற்குக் குறைந்த இடம் இருந்தால் போதும். பெரிய விண்கலம் தேவைப்படாது. சிறிய விண்கலமே போதும். இப்படிப் பல வகைகளிலும் செலவு குறையும். நீள் துயில் தொடர்பாக இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்:-தொடர்புக்கு: nramadurai@gmail.com

No comments:

Post a Comment