சித்தர் சிவவாக்கியம் -436
இந்தவூரிலில்லை யென்றெங்கு நாடி யோடுறீர்
அந்த வூரிலீசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
இந்த ஊரில் ஈசன் இல்லையென்று எண்ணி எங்கெங்கோ அவனை நாடி தேடி ஓடுகின்றீர்களே! இந்த ஊரில் இல்லாத ஈசன் அந்த ஊரில் மட்டுமா அமர்ந்து வாழ்கிறான். உனக்குள்ளேயே மிகவும் இரகசியமான பத்தாம் வாசலில் உள்ள பொந்தில் உயிரை மேவி நின்ற நாதனை அறிந்து இரகசிய ஒரேழுத்தான சிகாரத்தை உணர்ந்து அது அவ்வெனும் அகாரத்தில் இருப்பதால் அதிலேயே தியானத்தில் வைத்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். .
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 439
விட்டிருந்ததும் முளே விதன மற்றிருக்கிறீர்
கட்டி வைத்த வாசல் மூன்று காட்சியான வாசலொன்று
கட்டி வைத்த வாசலுங் கதவு தாள் திறந்து போய்த்
திட்டமான வீசனைத் தெளியு மாங்கி சத்துளே.
உனக்குள் உள்ள ஞான வீட்டில்தான் இறைவன் இருக்கின்றான். அவனை அங்கேயே எண்ணாமல் விசாரமற்று இருக்கின்றீர்கள். சந்திர சூரிய அக்னி மண்டலங்களாக கட்டி வைத்த வாசல் மூன்று. அதில் காட்சியாகவும் சாட்சியாகவும் இறைவன் இருக்கும் வாசல் ஒன்று. மூன்று மண்டலங் களையும் கட்டி, பத்தாம் வாசலின் பூட்டை உடைத்து, அடைத்த கதவின் தாள் திறந்தால் அங்கே திடமாக இருந்து உலாவுகின்ற ஈசனை தெளிவாக தரிசிக்கலாம். அவன் சதையால் ஆன இவ்வுடம்பின் உள்ளேயே இருப்பதை அறிந்து தெளிந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - - 445
இருப்பனென் எட்டெண்ணிலே இருந்து வேறதாகுவான்
நெருப்பு வாயு நீரு மண்ணும் நீள் விசும்பு மாகுவான்
கருபுகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே
எண்ணாகவும்
எழுத்தாகவும் இருப்பவன் ஈசன், எனக்குள்
எட்டான அகாரத்தில் இருந்து அதற்குள் சிகாரமாகி வேறாகி அதுவாகி நிற்பான். நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம்
என ஐந்து பூதங்களாக ஐ வண்ணமாகி இருப்பான். கருவில் நாம் புகுந்த காலத்திலேயே
அதற்குள் சோதியாகி கலந்த நாதனான அவனே குருவாக நீராக நின்றிருப்பான். குரு கற்றுத்
தந்த யோக ஞான கலைகளை அறிந்து அந்நீரிலேயே நினைவாய் நின்று மூழ்கி
தியானித்திருங்கள். குருவை நமக்குள்ளேயே குறித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
..அன்புடன் கே எம்
தர்மா & கிருஷ்ணமூர்த்தி
0 comments:
Post a Comment