சித்தர் சிந்திய முத்துக்கள் ....... 3/53

 


சித்தர் சிவவாக்கியம் -426

பிரான் பிரான் என்று பினாத்துகின்ற மூடரே

பிரானை விட்டு மெம்பிரான் பிரிந்தவாற தெங்ஙனே

பிரானுமாய்ப் பிரானுமாய்ப் பேருலகந் தானுமாய்ப்

பிரானிலே முளைத்தெழுந்த பித்தர் காணுமும்முடல். 

 

உடம்பை விட்டு பிராணன் போகப்போகும் கடைசி நேரத்தில் எம்பிரானே என பினாத்துகின்ற மூடர்களே! உங்கள் உடம்பிலேயே பிராணனை விட்டுப் பிரியாதிருந்த எம்பிரானை உணராமலேயே இருந்தீர்கள். உடம்பை விட்டு உயிர் எவ்வாறு பிரிந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் பிராணனில் இருந்து எம்பிரானே இந்த பேருலகம் எங்கும் தானாகி நின்ற ஈசனால் முளைத்தேழுந்ததே உங்கள் உடம்பு என்பதைக் கண்டு கொண்டு அவ்வீசன் மீதே பித்தாக இருந்து உணருங்கள்..

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 430

முந்த வோரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்

அந்த வோரெழுத்துளே பிறந்த காய மானதும்

அந்த வோரெழுத்துளே யோகமாகி நின்றதும்

அந்த வோரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.    

 

ஆதிக்கும் முந்தையான சோதியான ஒரெழுத்திலிருந்து முளைத்து எழுந்த செஞ்சுடராகியது நெருப்பு. அந்த ஒரெழுத்திலிருந்தே நீராக வந்து உயிராகி பிறந்து உடம்பு ஆனது. அந்த உடம்பிலேயே ஒரெழுத்தாக இருந்து அதற்குள் ஏகமாக சிவம் நின்றது. இவ்வாறு ஓரெழுத்தாய் உலகிலும் உயிரிலும் இயங்கும் ஈசனாகிய மெய்ப் பொருளையும் நன்கு அறிந்து உங்களுக்குள் உணர்ந்து கொள்ளுங்கள்.  

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 434

ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே

வாசலிற் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீருஞ் சார்த்துறீர்

ஈசனுக்கு வைத்த கல் எந்தக்கல்லு சொல்லுமே. 

 

ஓசையுள்ள ஒரே கருங்கல்லை இரண்டு பாகமாக உடைத்து வாசல்படிக் கல்லாகவும் ஒன்றை செதுக்கி சிலயாகவும் செய்து வைக்கின்றீர்கள். வாசலில் வைத்த கல்லை மழுங்கவே காலால் மிதிக்கின்றீர்கள். பூஜைக்கு வைத்த கல்லில் பல வகையான வாசனைத் திரவியங்களையும் நீரில் கலந்து அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து வணங்கு கின்றீர்கள். இவைகளில் ஈசன் உகந்திருப்பது எந்தக் கல்லில் என்பதை சொல்லுங்கள். அவன் உனக்குள் இருக்கும் அண்டக்கல்லில் அல்லவோ உகந்து உள்ளான் என்பதை உணர்ந்து தியானியுங்கள்.  

***************************************************

அன்புடன் கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment