சித்தர்
சிவவாக்கியம் -417
சுத்தமென்று
சொல்லுவதுஞ் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தனித்த
மாடியே அமர்ந்திருந்த தெவ்விடம்
பத்தி
முற்றி யன்பர்கள் பரத்திலோன்று பாழாது
பித்தரே
இதைக் கருதிப் பேசலா தெங்ஙனே .
எல்லா நூல்களும்
முடிவாகச் சொல்வது இறைவன் பரிசுத்தமான இடத்தில்தான் இருக்கின்றான் என்பதைத்தான்
கூறுகின்றது. இப்படியான இடத்தில் அத்தனாகிய ஈசன் நித்தியமாய் நின்று ஆடிய வண்ணம்
அமர்ந்திருந்தது நம் உடலில் எந்த இடம்? அதுவே பரிசுத்தம். அதனை அறிந்து அதிலேயே பக்தி
வைத்து பற்றி நின்று முக்தி அடையும் மெய்யன்பர்கள் பாழ் என்ற சூன்யமாக நின்ற ஒன்றே
பரம்பொருள் என்பதை அறிந்துகொண்டு அடைவார்கள். பித்தர்களே! இதையே கருதி மெய்ப்பொருளை
அடைவதையன்றி வேறு பேசுவதனால் பயன் இல்லை.
****************************************************
சித்தர்
சிவவாக்கியம் -423
எப்பிறப்பிலும்
பிறந்திறந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும்
பிறந்தென்ன நீறு பூசுறீர்
அப்புடன்
மலமறுத்தே ஆசை நீக்க வல்லிரேல்
செப்பு நாத
வோசையிற் றெளிந்து காணலாகுமே.
எல்லாப்
பிறப்பிலும் பிறந்து இறந்து அழிந்த ஏழைகளே! பெறுதற்கரிய இம்மானிடப் பிறப்பில்
பிறந்த நீங்கள் இறவா நிலைப் பெற்று இறைவனை அடைய நினையாது, நீராக நின்ற
நிலையை உணராது, சாம்பலை திருநீறு
என்று உடம்பு முழுதும் பூசித்திரிகிறீர். நீரால் விளைந்த மும்மலங் களையும், ஞானிகள் செப்பும்
நாத ஓசை உங்களுக்குள் தோன்றி, சோதியில் சேர்வதை உணர்ந்து தெளிவாகக் காணலாம்.
***************************************************
சித்தர்
சிவவாக்கியம் - 424
மந்திரங்கள்
கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள்
கற்று நீர் மரித்த பொது சொல்வீரோ
மந்திரங்களும்
முளே மதிக்க நீறு மும் முளே
மந்திரங்களாவது
மனத்தினைந் தெழுத்துமே.
பற்பல
மந்திரங்களைக் கற்று ஓதியும் உண்மையை உணராமல் மயங்குகின்ற மனிதர்களே! இத்தனையும்
படித்தும் செத்துவிட்டால் அம்மந்திரங்களை உங்களால் சொல்ல முடியுமா? ஆதலால், உடலில் உயிர்
இருக்கும் போதே மந்திரங்களாக உங்களுக்குள் நின்ற ஓங்காரத்தையும், அதனுள் இருந்த
ஊமை எழுத்தையும் அறிந்து கொள்ளுங்கள். உயிர் இருந்தால்தான் யாவரும் மதிப்பார்கள்.
அந்த உயிருள் நீராக நின்ற ஈசனை உணர்ந்து, அவனையே மனத்தில் இருத்தி அஞ்செழுத்தை நினைந்து
தியானியுங்கள். மந்திரங்களாவது உங்கள் மனத்தில் நின்ற ஒரேழுத்தே. அதுவே
அஞ்செழுத்தாக இருப்பது உண்மை.
***************************************************
..அன்புடன் கே எம் தர்மா &கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment