(Tamil Short Story)
அன்று உச்சி வெயில் தலையினைப் பிளந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் செல்வந்தரான சேதுராமன் தனது குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தார். வழக்கம்போல் அவர் பாதணிகள் அணிந்து குடை பிடித்துக்கொண்டே அன்றும் சென்றார்.
வழியில் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு ஏழை வழிப்போக்கன் அவரை இடைமறித்து , ''ஐயா வெயில் என்
காலையும் தலையையும் சுட்டெரித்துக்கொண்டு இருக்கிறது.தாங்க முடியவில்லை.நீங்கள்
குதிரையில் தானே போகிறீர்கள். உங்கள் பாதணிகளை கொடுத்து உதவுவீர்களா? எனக் கேட்டான்.
சற்றுச் சிந்தித்த சேதுராமன் அவன் சொல்வதில் நியாயம் இருப்பதனை உணர்ந்து தன்
பாதணிகளைக் கழற்றி அவனிடம் கொடுத்தார்.
பாதணிகளை தன் காலில் அணிந்துகொண்ட வழிப்போக்கன் சில காலடி எடுத்து வைத்தபின், எதோ நினைவு
வந்தவனாய் சேதுராமன் பக்கம் திரும்பியவன் ''ஐயா, நீங்கள்
குதிரையில் செல்வதால் வேகமாகச் சென்றுவிடுவீர்கள். வெயில் தலையை பிளக்குது, உங்கள்
குடையையும் தந்து உதவ முடியுமா? என்று கேட்டான்.
சற்றுச் சிந்தித்த சேதுராமன் அவன் கூறுவது உண்மைதான் என உணர்ந்து தன்
குடையையும் அவனிடம் கொடுத்தார்.
குடையினை பெற்றுக்கொண்டு சில அடி நடந்த வழிப்போக்கன் மீண்டும் சேதுராமன்
பக்கமாக திரும்பி ''ஐயா'' என்றான்.
சேதுராமனும் ''என்ன பிரச்சனை'' என்று கேட்டார்.
வழிப்போக்கனும் தயங்கியவாறே ''ஐயா நான் அதிக தூரம் போகவேணும். உங்கட குதிரையை
ஒருமுறை தரமுடியுமா''எனக் கேட்டான்.
கோபம்கொண்ட சேதுராமன் குதிரையிலிருந்து இறங்கினார். தனது இடுப்பிலிருந்து
பட்டியினை எடுத்தார்.அவனை ஓங்கி ஓங்கி அடித்தார்.
அழுதுகொண்டே வழிப்போக்கனும் ''அடியுங்க ஐயா அடியுங்க , இல்லாவிட்டால் இந்த பேராசைக்காரனின் மனம் - இன்னும் கேட்டிருக்கலாம், இன்னும் கேட்டிருக்கலாம் என்று காலமெல்லாம் மனசில ஒரே குழப்பமாய் இருந்திருக்கும். நீங்கள் அடிச்சபடியால் நான் தெளிவு பெற்றேன். நன்றி ஐயா'' என்றவாறு அவ்விடத்தினை விட்டு சென்றான் வழிப்போக்கன்.
குறிப்பு:இப்படித்தான் மனிதனும் எவ்வளவுதான் கிடைத்தாலும் திருப்தியின்றி அலைகிறான்.
-செவிமடுத்தது -எழுத்து வடிவில் -செ மனுவேந்தன்
0 comments:
Post a Comment