கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா?

 



முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.

 

இதில் எந்த மாற்றம், கொரோனாவுக்கு எதிராக உடலை சிறப்பாக தயார்படுத்துகிறது?

 

இது போன்ற ஒரு கேள்வியை ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தால்கூட அது கிட்டத்தட்ட ஒரு பாவச்செயலைப் போல இருந்திருக்கும். ஏனென்றால் முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்படுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வயோதிகர்களுக்கும், ஏற்கெனவே சில உடல் நலப்பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஆபத்தானது.

 

ஆனால், இப்போது நாம் கொரோனாவுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் சுத்தமாக இல்லாத நிலையில் இல்லை. நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு கொரோனா நோய் வந்துவிட்டுப் போய்விட்டது.

 

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டுமா? என்பது இப்போது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கேள்வி. அதைப் போலவே ஏற்கெனவே நோய் மூலமாகவோ, தடுப்பூசி மூலமாகவோ நோய்த்தடுப்பாற்றல் ஏற்பட்ட பெரியவர்களுக்கு இந்த தடுப்பாற்றலை எப்படி மேம்படுத்திக்கொள்வது? என்ற கேள்வியும் முக்கியமானது. நேரடியாக வைரஸ் மூலமாகவே இந்த தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்வது சிறந்ததா? அல்லது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் மூலம் நோய்த்தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்வது சிறந்ததா? இந்த இரண்டுமே விவாதத்துக்குரிய பிரச்னைகள்.

 

"கோவிட் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியிருக்கும். நீண்ட காலத்துக்கு இப்படி செய்யவேண்டியிருக்கும் என்று நாம் நினைக்கிறோம். இது போன்ற சூழ்நிலை, நாமே நம்மை ஒரு பொறியில் மாட்டிக்கொள்வது போல ஆகும்," என எடின்பரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோய் எதிர்ப்பியலாளர் பேராசிரியர் எலனோர் ரிலே என்னிடம் கூறினார்.

 

"உலகின் ஒருபுறத்தில் கோவிட் தடுப்பூசியே இன்னும் போட்டுக்கொள்ளாதபோது போட்டுக்கொண்டவர்கள் மேலும் மேலும் அதிக தடுப்பூசி டோஸ்களைப் போட்டுக்கொள்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம். இது சமத்துவமின்மை மட்டுமல்ல, முட்டாள்தனமும்கூட," என்கிறார் பிரிட்டன் அரசாங்கத்தின் தடுப்பூசி ஆலோசகர் பேராசிரியர் ஆடம் ஃபின்.

 

நோய் எதிர்ப்பு ஆற்றல் எப்படி செயல்படுகிறது?

நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் அது எதிர்த்து அழிக்கிற வைரஸ் ஆகிய இரண்டின் அடிப்படைக் கட்டுமானத்தைப் பற்றி நாம் சிறிது தெரிந்துகொள்ளவேண்டும்.

 

நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் மிக்க ஜோடியாக செயல்படுகிறவை ஆன்டிபாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எதிர்ப்பான்கள் மற்றும் டி-செல்கள் ஆகும்.

 

இதில் எதிர்ப்பான்கள், அழிக்கவேண்டிய வைரஸ்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். டி-செல்கள் எப்படி செயல்படும் தெரியுமா?  வைரஸ்கள் கைப்பற்றி பிணைக் கைதியாக வைத்துள்ள நமது உடலின் சொந்த செல்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை அழிக்கும்.

 

சரி. இப்போது வைரஸ்களின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது? பார்ப்போம். இவ்வளவு சிக்கல்களை உண்டாக்கும் இந்த வைரஸ் மிக எளிமையான அமைப்பைக் கொண்டது. இந்த வைரசின் முள்முடி புரதம் மிகவும் பிரபலம். நம்முடைய உடலின் சொந்த செல்களுக்குள் நுழைவதற்கு இந்த முள்முடி புரதமே திறவுகோலாக செயல்படுகிறது.

 

இது தவிர, நமது உடலின் சொந்த செல்களைக் கைப்பற்றத் தேவையான வேறு 28 புரதங்களும் வைரசில் உள்ளன. மனித உடல் இயங்குவதற்கு 20 ஆயிரம் வகை புரதங்கள் தேவை என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த 28 எவ்வளவு குறைவு என்பது புரியும்.

 

இயல்பாக நமது உடலுக்கு ஏற்படுகிற நோய், அதைத் தடுப்பதற்கு நாம் பயன்படுத்தும் தடுப்பூசி இரண்டுமே நோய்த்தடுப்பு அமைப்புக்கு உதவி செய்கின்றன. நான்கு முக்கிய அம்சங்களில் இந்த இரண்டையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 

தாக்கவேண்டிய வைரசை நோய்த்தடுப்பு மண்டலம் எந்த அளவுக்கு புரிந்துகொள்கிறது?

 

தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வைரசை அடையாளம் காணவும், தாக்கவும் நமது நோயெதிர்ப்பு மண்டலம் கற்றுக்கொள்கிறது. ஒரு முறை நோய் வந்துபோனாலும், அந்த குறிப்பிட்ட வைரஸ் தொடர்பாக நமது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஒரு பயிற்சி கிடைக்கிறது.

 

இப்போது குறிப்பிட்ட வைரஸ் உங்கள் உடலைத் தாக்குவதாக வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்றால், அதன் மூலம் கிடைத்த பயிற்சியைக் கொண்டு உங்கள் உடல் அந்த நோய்க்கு எதிராக ஒரு போரைத் தொடங்கும்.

 

அப்படி இல்லாமல், உங்களுக்கு ஏற்கெனவே அந்த வைரஸ் தொற்றி இருக்கிறது என்றாலும், அந்த பயிற்சியைக் கொண்டு உடல் ஒரு போரைத் தொடங்கும்.

 

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உடல் நடத்துகிற போரைவிட, ஏற்கெனவே நோய்த் தொற்றி மீண்டவரின் நோய் எதிர்ப்பு மண்டலம் தொடுக்கிற போர் விரிவானதாக இருக்கும்.

 

மாடர்னாவோ, ஃபைசரோ, கோவிஷீல்டோ... நீங்கள் போட்டுக்கொண்டது எந்த தடுப்பூசியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் மூலம் உங்கள் உடல் கற்றுக்கொண்டது அந்த வைரசின் முள்முடி புரதம் பற்றி மட்டும்தான்.

 

வைரசின் இந்த உறுப்பு மிக முக்கியமானது. இந்த உறுப்பைத் தாக்குவதற்கு ஏற்றபடிதான் நமது உடலில் ஆன்டிபாடிகள் எனப்படும் எதிர்ப்பான்கள் தோன்றுகின்றன. நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனை செல்கிற நிலையில் இருந்து இந்த எதிர்ப்பான்கள் பலரைக் காப்பாற்றுகின்றன.

 

ஆனால், வைரசில் உள்ள வேறு 28 புரதங்களைத் தாக்குவதற்கு நமக்கு டி-செல்கள் தேவை.

 

"எனவே, உங்களுக்கு உண்மையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், வெறும் முள்முடி புரதத்தை எதிர்ப்பதற்கு மட்டுமல்லாமல் விரிவான எதிர்ப்பாற்றல் கிடைத்திருக்கும். இதன் மூலம் ஒப்பீட்டளவில் அந்த வைரசின் புதிய திரிபுகளுக்கு எதிராகவும் சிறப்பான எதிர்ப்பாற்றல் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு," என்கிறார் பேராசிரியர் ரிலே.

 

'தடுப்பை உடைத்த தொற்று'

தொற்றினை எவ்வளவு சிறப்பாக தடுக்கிறது? அல்லது, தீவிர நோய் ஏற்படாமல் எப்படித் தடுக்கிறது?

 

பலருக்கு கொரோனா தொற்று இரண்டு முறை ஏற்படுகிறது. இரண்டாவது முறை இப்படி தொற்று ஏற்படுவதை மறு தொற்று என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை ரீ இன்ஃபெக்ஷன் என்கிறார்கள்.

 

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பலருக்கும் தொற்று ஏற்படுகிறது. இப்படி ஏற்படுகிற தொற்றினை ஆங்கிலத்தில் பிரேக் த்ரூ இன்ஃபக்ஷன் என்கிறார்கள். தமிழில் வேண்டுமானால் நாம் 'தடுப்பை உடைத்த தொற்று' என்று கூறலாம்.

 

"தடுப்பூசி போட்டுக்கொண்டது மூலமாகவோ, ஏற்கெனவே நோய்த் தொற்றிக்கொண்டது மூலமாகவோ வைரசிடம் இருந்து உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிடாது. ஆனால், இந்த இரண்டில் எந்த ஒன்றில் இருந்து கிடைக்கிற நோய் எதிர்ப்பு ஆற்றலும் மேற்கொண்டு தீவிர நோய்த் தொற்று ஏற்படுவதில் இருந்து உங்களைக் காக்கப் போராடும்," என்கிறார் பேராசிரியர் ஃபின்.

 

தொற்று ஏற்பட்டவர்களைவிட, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சராசரியாக ஒரு மாதம் கூடுதலாக எதிர்ப்பான்கள் அதிகம் இருக்கும். அதே நேரம், அறிகுறி இல்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கிடைத்த எதிர்ப்பான்கள் அளவுக்கும், தீவிர கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த எதிர்ப்பான்கள் அளவுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கும்.

 

கோவிட் தொற்று ஏற்பட்டு பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் பெரிய அளவுக்கு நோய் எதிர்ப்பு வினை தூண்டப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டு பிறகு தொற்று ஏற்பட்டவர்கள் உடலில் எத்தகைய எதிர்வினை தூண்டப்படுகிறது என்பது பற்றிய தரவுகள் இன்னும் வரவேண்டியிருக்கிறது.

 

கால அளவு

எவ்வளவு காலத்துக்கு பாதுகாப்பு நீடிக்கிறது?

 

உடலில் உண்டாகும் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பான்களின் அளவு காலப்போக்கில் குறைகிறது. தீவிர நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்றபோதும்.

 

வைரசையும், தடுப்பூசியையும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நினைவில் வைத்திருக்கும். நோய்த் தொற்று ஏற்படும்போது அந்த நினைவைக் கொண்டு விரைவாக எதிர்வினையாற்றும்.

 

"நினைவு டி-செல்கள்" உடலில் நீடித்து இருக்கும். தேவை ஏற்படும்போது பி-செல்கள் வெள்ளம்போல எதிர்ப்பான்களை உற்பத்தி செய்யும்.

 

தொற்று ஏற்பட்டு ஓராண்டுக்குப் பிறகும்கூட நோய் எதிர்ப்பு வினைகள் தூண்டப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. தடுப்பூசி பரிசோதனைகள்கூட நீண்டகால பலன்கள் இருப்பதைக் காட்டியுள்ளன.

 

"எவ்வளவு காலத்துக்கு நோயெதிர்ப்பு நீடித்திருக்கும்? என்பதைப் பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது," என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா.

 

இடம்

உடலில் எங்கே நிகழ்கிறது நோய் எதிர்ப்பு?

 

இது முக்கியமானது. மூக்கிலும், நுரையீரலிலும் காணப்படுகிற இம்யூனோகுளோபுலின் ஏ வகை எதிர்ப்பான்களுக்கும் ரத்தத்தில் நாம் அளவிடுகிற இம்யூனோகுளோபுலின் ஜி வகை எதிர்ப்பான்களுக்கும் வேறுபாடு உண்டு.

 

இயற்கையாக ஏற்படுகிற நோய்த் தொற்றைத் தடுப்பதில் முக்கியமாக செயல்படுவது முதல் வகை. மூக்கின் வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையான நோய்த் தொற்று மூக்கு வழியாக ஏற்படுகிறது. தடுப்பூசியை நாம் கைகளில் போட்டுக்கொள்கிறோம். எனவே, மூக்கில் இருக்கிற எதிர்ப்பான் முக்கியப் பங்காற்றுகிறது.

 

"வைரஸ் அதேதான் என்றபோதும், அது எந்த இடத்தில் தொற்றுகிறது? என்பது முக்கியமானது. எனவே, தடுப்பூசி ஏற்படுத்துகிற எதிர்வினைக்கும், நோய்த் தொற்று ஏற்படுத்துகிற எதிர்வினைக்கும் இடையில் வேறுபாடு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்." என்கிறார் பேராசிரியர் பால் கிளனர்மேன். இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் டி-செல்கள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்.

 

வைரஸ் தொற்று - தடுப்பூசி இரண்டையும் எப்படி கையாள்வது?

 

இதுவரை தடுப்பூசியே போட்டுக்கொள்ளாத வயது வந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும் என்று சொல்வதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அவர்களுக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும்கூட அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்ல பாதுகாப்பைத் தரும். ஆனால், இரண்டு பெரிய கேள்விகள்:

 

1. தடுப்பூசி போட்டுக்கொண்ட வயது வந்தவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவேண்டுமா? அவர்கள் உடலுக்கு வைரஸ் தொடர்பாக ஏற்பட்ட அறிமுகம் போதுமானதா?

 

2. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தேவையா?

 

ஆயுள் முழுவதும் அவ்வப்போது நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது என்பது வேறு சில வைரஸ் விஷயத்தில் அவ்வளவு புதுமையானது அல்ல. எடுத்துக்காட்டாக கூறுவதென்றால், ஆர்.எஸ்.வி. (respiratory syncytial virus), தற்போது பெருந்தொற்றை ஏற்படுத்தியிருக்கும் நாவல் கொரோனா வைரஸ் அல்லாத சாதாரண சளியை ஏற்படுத்தும் வேறு நான்கு வகை கொரோனா வைரஸ்கள் ஆகியவற்றை சொல்லலாம்.

 

இந்த நோய்கள் விஷயத்தில், ஒவ்வொரு முறை வைரசை எதிர்கொள்ள நேரிடும்போதும் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறிதளவு மேலும் வலுவானதாக மாறும். வயோதிகம் வரை இது தொடரும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கும். மீண்டும் அப்போது நோய்த் தொற்று பிரச்சனையாக மாறும்.

 

"இது நிரூபிக்கப்பட்டது அல்ல. ஆனால், எப்போது பார்த்தாலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதைவிட மலிவானதும், எளிமையானதும் ஆகும்," என்கிறார் பேராசிரியர் ஃபின்.

 

தேவையா என்று தெரியாமலே மீண்டும் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சுழலில் நாம் சிக்கிக்கொள்வோம் என்று எச்சரிக்கிறார் அவர்.

 

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதா? என்பது தொடர்பான விஷயத்தில் விவாதம் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறும் அவர், "40-50 சதவீதம் குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. அல்லது குறிப்பான நோய் எதுவும் ஏற்படவில்லை," என்று கூறுகிறார்.

 

இதற்கு எதிரான வாதங்களும் உள்ளன. லாங்-கோவிட் என்று அழைக்கப்படும் கோவிட் தொற்றின் நீண்ட காலத் தொடர் அறிகுறிகள் குழந்தைகளிடம் தோன்றுவதை குறிப்பிடுகிறார் பேராசிரியர் ரிலே. உடலின் பல பகுதிகளைப் பாதிக்கும் இந்த வைரசின் நீண்ட கால விளைவுகள் தொடர்பான பதற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஓபன்ஷா.

 

ஆனால், கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு நோய் எதிர்ப்பு எதிர்வினையை விரிவுபடுத்துவதற்கு தடுப்பூசியைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரிலே.

 

"தங்கள் வாழ்க்கையை வாழ மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்குப் பதில் சும்மா அவர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறோமா என்பது குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். மக்களை வெறுமனே கவலைப்பட வைக்கும் நிலைக்கு அருகே நாம் வந்திருக்கிறோம்," என்கிறார் அவர்.

 

தொடர்ந்து தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் வேறு தேர்வுகள் இல்லை என்பது உண்மைதான்.

ஜேம்ஸ் கல்லெகர் (BBC - தமிழ் )

No comments:

Post a Comment