அச்சம் வேண்டாம்… விழிப்புணர்வு போதும்!

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை கடந்த ஒன்றரை வருட காலங்களாக உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன  மூடி என்பது போல் எத்தனை லாக் டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் நோயின் தாக்கம் கடுமையாக பரவி வருகிறது. கொரொனா வைரஸைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் முக்கிய சவால் அதன் உருமாறும் தன்மை. இப்படி உருமாறிய தன்மையினால் நோய் தொற்று மீண்டும் ஆரம்பிக்கிறது.

 

 இந்த வைரஸ் இந்தியாவில் மற்றொரு மரபணு உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் என்ற பெயரிடப்பட்டு பல நாடுகளில் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. ஆனாலும் நாம் அச்சமடைய தேவையில்லை.

 

 நமக்கு கிடைக்கும்   இருமுறை  தடுப்பூசிகளுமே உருமாறிய கொரொனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் உள்ளவையே. எனவேதான் உயிர்ப்பலி அதிகமாயிருந்த இரண்டாம் அலையின்போதும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய்ப்பரவல் மட்டுப்பட்டிருந்தது. அப்படியே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறப்பு இல்லாமல் இருந்தது.

 

தற்போதைய தரவுகளின்படி18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட பின்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் சதவிகிதம் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 70%  என்ற இலக்கை தடுப்பூசி போடுவதில் நாம் அடைந்துவிட்டால் நோய் தொற்றின் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய்தொற்று வராது என்று கூறுவதற்கில்லை.

 

எனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்தால் மூன்றாம் அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி மூன்றாம் அலையில் நோய்பரவல் மிக அதிகமாக இருப்பினும் மருத்துவமனையில் அனுமதி வேண்டுவோர் எண்ணிக்கை மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இறப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்வது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விழிப்புடன் கடைப்பிடித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

 

கொரோனாவால் ஏன் உயிரிழப்பு ஏற்படுகிறது?

 

பொதுவாகவே வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய் தொற்றானது உடலின் பிற பகுதிகளை பாதித்தாலும் அதிகம் சேதத்தை கொடுப்பது நுரையீரலுக்குதான். ஏனெனில், இவை உடலில் முதலில் நுழைவதே சுவாசக்குழாயேதான். இங்கு நுழையும்போது அந்த குழாயின் சுவற்றில் உள்ள சிலியா (Cilia) எனும் பகுதிகளில் படிந்து அதனை தாக்கி தொண்டை வலி, புண், குரல் கரகரப்பு,எச்சில் விழுங்க சிரமம் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

 

அதன்பின் அது சுவாசிக்கும் செயலினால் நுரையீரலின் உள்ளே சென்று தங்குகிறது.  நுரையீரல் என்பது அல்வியோலை(Alveoli) என்று அழைக்கப்படும் அடிப்படை அலகினால் ஆனது. பல ஆல்வியோலைகளின் கூட்டமைப்பு நுரையீரலாகும். உள்ளே நுழைந்த வைரஸ் இந்த அடிப்படை கட்டுமானமான ஆல்வியோலார் செல்களை தாக்கி அழிக்கிறது. வைரஸ் நோய்த் தொற்றினால் நுரையீரல் பாதிப்படைந்து பிராண வாயு அளவு குறைந்து நிமோனியா போன்றே நோயை உருவாக்குகிறது. மருத்துவ நிபுணர்கள் இதனை கோவிட் நிமோனியா என்றே அழைக்கின்றனர்.

 

சாதாரண வைரஸ்/பாக்டீரியாவின் தாக்கத்தினால் வரும் நிமோனியாவை விட கோவிட் நிமோனியா அதி விரைவில் நுரையீரலை தாக்கி செயலிழக்க செய்கிறது. இதனால் ஏற்படும் மூச்சுத்திணறலாலேயே உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன. மேலும் கொரொனா வைரஸ் இதயம், ரத்த நாளங்கள், கண் போன்ற பிற பகுதிகளையும் பாதிப்பதாலும் மரணம் சம்பவிக்கிறது.

 

எனவே தொடர்ந்து சமூக இடைவெளியினையும், முகக்கவசமிடலையும் கடைப்பிடிப்போம். அச்சங்களை தவிர்ப்போம்

-நுரையீரல் மருத்துவர் ராமச்சந்திரன்


No comments:

Post a Comment