கைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)

கதை

அது நடந்தது 1975ம் ஆண்டு.

 

அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கடமைகளை முடித்து வந்துகொண்டிருந்தது.

அதேவேளையில் அன்று  மாலையில்   கலஹா லெவலன் தோட்ட பகுதி மட்டும் பரபரப்பாக  இருந்தது.காரணம்..இரண்டு

 

நிறஞ்சி.இன்று அவளுக்கு   திருமணம்.அது முதலாவது.  அவளின் சம்மதத்துடன் தான் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டதாக இருந்தாலும்  சந்தோசமாக இருக்கவேண்டிய அவள் மனம் இன்று கலங்கி நிற்பதன் காரணம்  அவள் சற்றுமுன்  அறிந்த செய்தி....

 

அதுதான் இரண்டாவது

 

இலங்கையில் வேறு மாகாணம் சென்று  வீட்டில் வேலை செய்த மலையகச்சிறுமி, அவளது நண்பி, வீட்டு எஜமானர்களால்  கொடுமைக்கு உள்ளாகி,   தற்கொலை செய்த கொடுமை நாட்டையே அதிரவைத்ததுடன் , மலையக நெஞ்சங்களில் பெரும் காயமாக்கிவிட்ட செய்தி.

 

கலங்க வைத்த அச்செய்திக்கு மத்தியிலும் நல்ல காரியங்கள் நின்றுவிடக்கூடாது என்று மூத்தோர்கள் வேண்டுகோளினை ஏற்று நிரஞ்சியின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

 

இப்படியே     மலையகத்தின்   சிறுவர்கள் பாதிக்கப்படும் கொடுமை ஒரு தொடர்கதையாகிய வேளை- அவள் கதை...  

 

மலையகத்  தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும்  பெற்றோர்கள் மிகவும் குறைந்த வேதனத்தின் கொடுமையால்  குடும்ப சுமை தாங்காது தம்   பிள்ளைகளை, பள்ளிக்கு அனுப்பாது   வீட்டு வேலைகளுக்கு என்று ஏனைய மாகாணங்களுக்கு அனுப்புவது  வழமையான கதைதான்..  ஆனால் அவளுக்கு.....

 

உறவுகள் கூடியிருக்க , அவளை மணமகளாய் அலங்காரம் செய்து அங்கு உறவுகளால் அமைக்கப்பட்ட மணவறையில் அமர்ந்திருந்த மணமகன் அருகில் அழைத்துச் சென்று அவளை  இருத்தினார்கள் அவளின் இரத்த உறவுகள். மணமகன் அருகில்  ஒரு சிலைபோல் இருந்த   அவளுக்கு ஐயரின் மந்திரங்களோ ,உறவுகளின் வாழ்த்தொலிகளோ எதுவுமே கேட்கவில்லை. வந்திருப்பார் எவரையும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.அவளின் எண்ணங்கள் பின் நோக்கிச் சென்றன..

 

அப்பொழுது அவளுக்கு 10 வயது இருக்கும்.  மலையக தோட்டத் தோட்டமே உலகம் என்று [லயான்] குதிரைக் கொட்டில்களில் சுற்றம் சூழ வாழ்ந்த   அவளுக்கு ஒரு நாள்  கொழும்பிலிருந்து அவளின் தாய் மாமன் வருவது அறிந்து மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள் . அவர் வந்ததே, கண்டியில் அவர்கள்  வாழ்ந்திருந்தும், அவளும் அவளது  பெற்றோரும் , அதுவரையில் அறிந்திடாத ,பார்த்திடாத கண்டியில் வருடாந்தம் நடக்கும் 'கண்டிப் பெரஹரா '(Esala Perahera) பெளத்த தெரு விழாவுக்கு அவர்களை  அழைத்துச் செல்வதற்காகத்தான், என்று அறிந்தபோது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அறிந்ததும் ஏனைய கொட்டில்களுக்கு ஓடிச்சென்றவள்தன்  மகிழ்ச்சியினை  எல்லா லயான் பிள்ளைகளுக்கும் தேடித் தேடித் கூறி வந்தபோதும்அவள் நினைக்கவில்லை தனக்கு இப்படி நடக்குமென்று.....

 

கண்டிப் பெரஹராவுக்கு பேருந்தில் அவர்களை  அழைத்துச்சென்றார்  அவளது மாமா.  பெரஹரா ஊர்வலம் வரும் தெருவெல்லாம் , பல்வேறு வடிவங்களில் மின்சாரக் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்கள் ,சோடனைகள், தோரணங்கள்   கண்டு வியப்பில் அவர்கள்  மூழ்கியிருக்க,தெருவின்  ஒரு கரையோரத்தில் ''இதிலை நிற்போம்'' என்று  அவளது மாமா கூறியபடிதான்   அனைவரும் ஒரு இடத்தில் நின்றார்கள்.

 

ஊர்வலம்  ஆரம்பமானது. குழுக்கள் குழுக்களாக ,மின்சார குமிழ்களாலும் மினுங்கும் பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன், தீநடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு நடனமாடிவரும் காட்சி, கண்கொள்ளாக் காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தது. அதிலும் சிறுவர் கூடி ஒரு குழுவாக தீ நடனம் புரிந்து நடந்து சென்ற காட்சி அவளைப்   பெரிதும் கவர்ந்து இழுத்துக்கொண்டது. எப்படி அவர்களைப்    பின் தொடர்ந்தாள்  என்பது  அவளுக்கே  தெரியாது.

 

''எங்க பிள்ளை தனியா போறாய்' என்ற ஒரு பெரியவரின் குரல் கேட்டு திடுக்கிட்டவள், தன் உறவுகளை தான் தொலைத்ததை உணர்ந்து ஏங்கியவளாய்விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

''ஓ! அம்மா, ஐயாவை தொலைச்சிட்டியா? அழாத பிள்ளை,அழாத ,வா! நீ வந்த பக்கமாய் தேடுவம்'' என்ற அப்பெரியவர் அவளை அழைத்துக்கொண்டு நீண்ட தூரம் நடந்தும் அவர்கள், அவள் கண்களில் எட்டிடவே இல்லை.

 

''சரி பிள்ளை ,களைச்சுப்போயிடுவாய், வா,இந்த கடையில உணவு உண்டுகிட்டு தேடுவோம்''என்ற அந்த பெரியவரின் உணவு  உபசரிப்பு அவளுக்கு புதுமையாகவே இருந்தது.

 

''பிள்ளை கவலைப்படாதேம்மா, நானும் உன் மாமா  மாதிரி. இப்ப என்கூட என்  வீட்டுக்கு   வா. அப்புறம் அம்மா, ஐயாவையும் தேடுவோம்'' என்று அப்பெரியவர் கூறிய போது ,என்றும் இல்லாத வகையில் அவளது நாவும் வயிறும்  நிரம்பிய நிலையில், அவருடன்  ஒத்துப் போவதைத் தவிர வேறு எதுவும் அந்த பிஞ்சு வயதில் தெரியவில்லை.

 

கொட்டிலில் பெற்றோர்களுடன் படுத்து எழும்பிய அவளுக்கு  அப்பெரியவரின் சிறிய வீடு மிகவும் பிடித்திருந்தது. இரு நாட்கள் கடந்திருக்கும்.  பயணம் என்று அவர்கள் இருவரும்  பேசிக்கொண்டதை புரியாமல் பெரியவரை பார்த்த அவளை, தன் மடியில் இருத்திய அப் பெரியவர், ''பயப்பிடாதை அம்மா ,விடியகாலையில  நீயும் என் நண்பரும்  யாழ்ப்பாணம் றெயினில  போறியள் .என் நண்பர் ஒரு ஆயுள்வேத வைத்தியர்.அங்க தான் அவருடைய   வீடு.அது இத விடப் பெரிய வீடு. அங்க உனக்கு ஒரு அம்மா  , உனக்கு அக்கா அண்ணண் எல்லாம் இருக்கிறாங்க. அவங்கள் ஒனக்கு உதவி செய்வாங்கள்'' என்று அவளை அரவணைத்து அவர் மேலும் கூறிக்கொண்டு  போனாலும் அவள் வாழ்க்கையில் முதல் முதலில் றெயினில் ஏறுவதை எண்ணி, அவள் மனம் வானில் பறக்க ஆரம்பித்ததால்அவர் கூறியவற்றில், றெயினை தவிர வேறு  எவையும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

 

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் ரெயில் பயணம் ஒரு நாள் எடுத்தது. வைத்தியரும்  உணவு, தேனீர், பலகாரம் என்று சந்திக்கும் வேளையிலெல்லாம்  என்று வாங்கி அவளுக்கு கொடுத்து, தானும் சாப்பிட்டுக் கொண்டார். அன்றையகாலப்  புகைவண்டி ஆகையால் யாழ்ப்பாணம் சென்று இறங்கும் போது உடை,முகம் முழுவதும் ரெயிலின் கரும்புகை படிந்திருந்ததை வைத்தியர் நகைச்சுவையாக கூறிக்கொண்டு, இது தான் யாழ்ப்பாணம் என்று கூறியவாறே அவளை அழைத்துக்கொண்டு பஸ் நிலையம் வந்தார். பஸ்ஸில் ஏறி யன்னல் கரையில் இருந்த அவள் வெளியினை பஸ் ஜன்னலூடு ஆவலுடன் பார்த்துக்கொண்டு வந்தாள்.

 

''ஐயா ,இங்க மலைகள்,தேயிலைத் தோட்டங்கள் இல்லிங்களா?

 

சிரித்துக்கொண்ட வைத்தியர் ஒரு தகப்பனைப்போல வெளியில் உள்ளதைக் காட்டி ஒவ்வொன்றையும் விளங்கப்படுத்திக்கொண்ட முறை அவளுக்குப் பெரிதும் பிடித்துக்கொண்டது.

 

பெரியவர் கூறியதுபோன்று வைத்தியர் வீடு பெரிதாகவே இருந்தது.இது பழங்காலத்து நாற்சார வீடு என்று வைத்தியர் கூறியது அவளுக்குப் புரியாவிடினும் புன்னைகைத்துக்கொண்டாள் . இருவரும் கிணற்றடியில் குளித்து புகைக்கரிகளை கழுவியபின் வைத்தியரின் மனைவி இருவருக்கும் உணவினைத்தந்து வைத்தியருடன் இடையிடை  அவள்  முறைத்துக்கொள்வது   நிறஞ்சி  அங்கு வந்திருப்பது அந்த அம்மாவுக்கு விருப்பமில்லை என்பது புரிய அவளுக்கு சில நாட்கள் எடுத்தது.

 

வைத்தியரிடம் தினசரி பல நோயாளிகள் வருவார்கள். அப்படி வந்தவர்களில், ஒரு நாள் வெள்ளை வேட்டியும்,சேட்டும் அணிந்த    ஒரு ஆசிரியர். அவர்  வைத்தியரிடம் ''வல்வெட்டித்துறையில் நர்ஸாக வேலை செய்யும்  தன் மகளின் 3 வயதுப் பிள்ளைக்கு வீட்டில் துணையாக இருக்க ஒரு பிள்ளை ஒன்று உதவிக்கு தேவை.எங்கையும் சந்தித்தால் சொல்லுங்கோ!'' என்று கூறிட, வைத்தியரும் இதுதான் தருணம் என்று ''என் தங்கையின் பிள்ளை ஒன்று இருக்கிறா.நீங்கள் உங்கள் பண்டைத்தரிப்பு  விலாசத்தை தாருங்கோ.2 நாட்களில் கொண்டுவந்து விடுகிறேன்'' என்று. தன் மனைவியின் முறுகலுக்கு ஒரு முடிவினை தேடிக்கொண்டார் வைத்தியர்.

 

தன்னை அவளின் சொந்த மாமன் என்று அறிமுகம் செய்த வைத்தியர் அவளையும் அப்படியே சொல்லவேண்டும் எனப் புத்திகூறி ,ஆசிரியரிடம் கூறியபடியே 2 நாட்களில் பண்டைத்தரிப்பு கொண்டுசென்று ,அவளுக்கு  கூலியும் பேசி, அவளை அவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டார் வைத்தியர்.

 

வாத்தியாரின்  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று அவ்வீடு கலகலப்பில் என்றும் நிறைந்தே இருந்தது. அப்பிள்ளைகள் அவளையும் சேர்த்து விளையாடியது அவளின் நெஞ்சை நெகிழச்செய்தது. அந்த மகிழ்ச்சி சிலநாளே நீடித்தது. வல்வெட்டித்துறையிலிருந்து வாத்தியாரின் மகள் நர்ஸ் அம்மா வந்து அவளை அழைத்துக்கொண்டு அவ்வூர் சென்றுவிட்டார்.

 

அந்த அம்மாவும் ,ஐயாவும் மிகவும் அன்புடன் அவளை இன்னொரு பிள்ளையாகவே நடத்தினர். பக்கத்து வீட்டுக்காரி ''யாரது வேலைகாரியோ என்று முதல்நாள் அம்மாவை கேட்டதுக்கு 'இல்லை இது எனது மூத்த மகள் என்று அவளை அறிமுகம் செய்ததுஅவளுக்கு அவர்கள் மேல் பெரும் பக்தியை பெருக்கியது. அங்கு வேலை அதிகம் அவளுக்கு  இருக்கவில்லை. அம்மா வேலைக்குப் போகும்போது அந்த 3 வயதுப்பிள்ளைக்கு தேவையான உணவை செய்து வைத்துவிட்டுப் போவார். அதனைக் பிள்ளைக்குக் கொடுப்பதுவும்,பார்ப்பதுவும்வீட்டினை ஒருமுறை கூட்டுவதுவும் தான் அவள் வேலை. அவர்கள் உணவு உண்ணும்போது அவளையும் சேர்த்துக்கொள்வது அவளுக்கு அவர்கள் மேல் மதிப்பினையே மேலும் உயர்த்தியது.

 

மாதத்தில் ஒருநாள் வல்வெட்டித்துறையில் இருந்து  பண்டத்தரிப்பில் உள்ள அந்த அம்மாவின் தந்தை(வாத்தியார்) வீடு நால்வரும் சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்தது அவளுக்கு மேலும் மகிழ்வினைக் கொடுத்தது. ஆனால் அந்த வாழ்வுக்கும் ஒரு வில்லன் (என அன்று நினைக்க வேண்டி இருந்தது) வருவான் என கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

 

வழக்கம்போல் பண்டத்தரிப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கிய நால்வரும் அங்கு இருந்த பொன்னையா உணவுக்  கடைக்குள் சென்று பால்த்தேனீர் குடித்துக்கொண்டு இருந்தபோது , அவளால் அதை சுவைக்க முடியாதவாறு ஒருவனின் பார்வை அவள்மேல் முறைப்பாக விழுந்துகொண்டு இருந்ததை  அவள் அவதானிக்கத் தவறவில்லை. 'பிராக்குப் பாராமல் டீயை குடியம்மா'' என்ற  அந்த அம்மாவின் குரல் கூட அவளுக்கு ஏறாதபடி, அவன் தொடர்ந்து  அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

கடையிலிருந்து வெளியேறி, வாத்தியார் வீடுநோக்கி நடந்து கொண்டிருந்தபோது அவளின் பயந்த முகத்தினையும் நடையையும் அவதானித்த அந்தம்மா ''என்னமா ஏதன் சுகமில்லையோ?'' எனக் கேட்டார்.

 

 அவள் தான் கடையில் ஒருவன் முறைத்துப் பார்த்ததனை கூறியபோது

 

''அவனாரோ பார்த்தால் பாக்கட்டு, நாங்கள் போலீஸ்காரர் இருக்க நீயேனம்மா பயப்பிடுறாய்,பேசாமல் வா ''என்று நகைச்சுவையாகவே  சமாளித்துக்கொண்ட அந்தம்மா தன் கணவன் போலீஸ் என்பதனை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டார்.

 

மூன்றாம் நாள் காலையில வாத்தியார் வீட்டு படலையடியில் நாய்கள் அதிகமாக குரைக்கவே என்னவோ எதோ என்று அனைவரும் எட்டிப் பார்த்தார்கள்.. என்ன இது ! அவளை  முறைத்துப் பார்த்த அதே மனிதன் முதலில் காரைவிட்டு இறங்கினான்.   அவள் பயத்தில் அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள். ஆனால் அடுத்து அவளுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

 

காரிலிருந்து அவளின் சொந்த அம்மாவும் ,ஐயாவும் இறங்கினர். அவர்களைக் கண்டதும், பெற்றவைக்கும், பாசம் காட்டியவர்க்கும் இடையில்  அவள் நிலத்தில் வீழ்ந்து ஓ வென்றுகதறி அழுதுவிட்டாள் நிறஞ்சி. எதுவும் புரியாமல் விழித்த அனைவர்க்கும் புரியும்படி வாத்தியாரிடம்  விளக்கம் கூறினான் அந்த மனிதன்

 

''மாஸ்டர் , குறை நினையாதேங்கோநம்ம  இடம் கண்டி. இவங்க  நிறஞ்சியியை பெத்தவங்க. கண்டிப் பெரஹர விலை அவையுங்க மகளை தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்காங்க. நான் பண்டத்தரிப்பு சந்தியில ரக்சி வைச்சு தொழில் பண்ணுறன் பாருங்க. நிரஞ்சியை பொன்னையா கடையில பார்த்தன்.அடையாளம் கண்டுகொண்டன். கடையில உங்க விலாசத்தை தெரிஞ்சுகொண்டன். இவங்களுக்கு தந்தி அனுப்பி அவங்களை வரவழைச்சன். பொன்னையா உங்களைப்பற்றி நல்லாவே சொன்னாரு.அதனால நம்பிக்கையோட அவுங்களை அழைச்சு  வந்திருக்கேன்.'' என்று அவனுடைய தமிழில் கூறினான்

 

கதையினைக்கேட்டவாத்தியாரும், அவரது  குடும்பத்தினரும் நிரஞ்சியின் மாமனாக நடித்த பரியாரியாரை  எண்ணி  அதிர்ச்சியடைந்தனர். பரியாரியாரை சங்கானை போலீஸ் நிலையம் வரச்செய்து   ,போலீஸ் முன்னால்  நிறஞ்சியை அவளின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பெற்றோரும் ஆனந்தக்கண்ணீருடன் வாத்தியார் குடும்பத்திற்கு நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டார்கள்.

 

அவள் அறியா வயதில் தொலைந்தாலும், தான் சந்தித்த அந்த நல்ல உள்ளங்களை, அவள் நன்றியுடன் நினைவு கூர்ந்தாள். கடின வேலைகளோ,தப்பான நெருங்கலோ , பாலியல் தொல்லைகளோ இல்லாத அந்த உலகத்தினை எண்ணியபோது அவளை அறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தரையாக ஓடத்தொடங்கியது. குடும்பத்தின் கஷ்டம் தாங்காது வீட்டுவேலைக்கு அனுப்பப்பட்ட  , எத்தனை மலையகத்துப் பிள்ளைகள் சீரழித்த எஜமானர்களுக்கு மத்தியில்   இப்படியும் இருக்கும் உள்ளங்களை  ஒருமுறை மனதில் நினைந்து , முகம் பதித்து வணங்கிய அவளை..

 

''தாலியை   கட்டுற நேரம்பாருங்கோநிமிர்ந்து இருங்கோ'' என்ற ஐயரின் குரல் கேட்டு, சுய நினைவுக்கு வந்து நிமிர்ந்துகொண்ட அவள் ' ''ஓமோம், மீண்டும், இனி நான் இன்னொருவன் கையில்'' என்று எண்ணியவள், தன்னை எண்ணித்  தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.

-மனுவேந்தன் செல்லத்துரை [கல்யாணக் காட்சியும் பெயர்களும்   கற்பனை]




0 comments:

Post a Comment