பூமி என்னும் சொர்க்கம் 4:

பூமியைக் காக்கும் போர்வை

பூமி தோன்றியதைத் தொடர்ந்து எண்ணற்ற எரிமலைகளிலிருந்து வெளிப்பட்ட வாயுக்களே பின்னர் பூமியின் காற்று மண்டலமாக உருவெடுத்தன. ஆரம்பகாலக் காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுதான் அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.

 

பின்னர் கடல் வாழ் நுண்ணுயிரிகள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிட ஆரம்பித்தபோது, காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் சேர ஆரம்பித்தது.

 

காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் கணிசமான அளவுக்குச் சேர ஆரம்பித்த பிறகுதான் நிலப் பகுதியில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அது ஏன்?

 

சூரியனிலிருந்து எப்போதும் ஆபத்தான கதிர்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று புறஊதாக் கதிர்கள். நுண்ணுயிர்களை அவை எளிதில் அழித்துவிடும். காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் சேர ஆரம்பித்த பின்னர் பூமியில் மிக உயரத்தில் ஆக்சிஜன் அணுக்களைப் புறஊதாக் கதிர்கள் தாக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக ஓசோன் என்னும் வாயு தோன்ற ஆரம்பித்தது. ஓசோனுக்கும் ஆக்சிஜனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது ஆக்சிஜனைப் போன்றதே. பொதுவில் ஆக்சிஜன் வாயு என்பது இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்டதாக இருக்கும். ஓசோன் வாயு என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் அடங்கியது.

 

 

 

காற்று மண்டலத்தில் சுமார் 10 முதல் 50 கிலோ மீட்டர் உயரத்தில் தோன்றிய ஓசோன் வாயுப் படலமானது பூமிக்கு பாதுகாப்புக் கேடயம் போலச் செயல்பட ஆரம்பித்தது. இந்தப் படலம் தீங்கான புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வந்து சேராதபடி தடுக்க ஆரம்பித்தது. இன்னமும் இந்த ஓசோன் படலம் அந்தப் பணியை விடாமல் செய்துகொண்டிருக்கிறது.

 

ஓசோன் படலம் ஏற்பட்ட பிறகு பூமியின் நிலப்பகுதியிலும் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது. முதலில் சிறிய உயிரினங்களே காணப்பட்டன. பின்னர் விதவிதமான உயிரினங்கள் தோன்றின.

 

நவீன காலத்தில் மனித இனம் தனது வசதிகளுக்காகப் புதுப் புது செயற்கை வாயுக்களை உண்டாக்கிக்கொண்டது. குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி சாதனங்கள், ஸ்பிரே குப்பி போன்றவற்றில் பயன்படுத்த இந்தச் செயற்கை வாயுக்கள் உருவாக்கப்பட்டன. கருவிகளிலிருந்து தற்செயலாக அல்லது கவனக் குறைவு காரணமாக வெளியேறும் இந்த வாயுக்கள் உயரே சென்று ஓசோன் படலத்தைச் சிதைக்கின்றன என்பது தெரியவந்தது.

 

1987-ம் ஆண்டில் உலக அளவில் மாநாடு நடத்தப்பட்டு, இது போன்ற செயற்கை வாயுக்களை உற்பத்தி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. குளிர்சாதனப் பெட்டி உட்பட அனைத்திலும் ஓசோனைப் பாதிக்காத மாற்று வாயுக்களைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

ஏற்கெனவே வெளியேறிய அந்தத் தீங்கான வாயுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு நம் தலைக்கு மேலே பல இடங்களில் அந்தப் படலம் மெலிந்துபோனது. இந்த ஓசோன் வாயுப் படலம் பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம்.

 

தரைமட்டத்தில் சாதாரண நிலைமைகளில் ஓசோன் வாயு தோன்றுவது கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் கார் புகை, தொழிற்சாலைப் புகை போன்றவற்றின் மீது சூரிய ஒளி ஏற்படுத்தும் விளைவுகளால் ஓசோன் வாயு தோன்ற வாய்ப்பு உள்ளது. அப்படியான நிலைமைகளில் ஓசோன் வாயுவைச் சுவாசிப்பது நல்லதல்ல. ஓசோன் நுரையீரலில் எரிச்சலை உண்டாக்கும். தலைவலியை ஏற்படுத்தும். தவிர, ஓசோன் வாயு பயிர்களைப் பாதிக்கும்.

 

இவை ஒருபுறம் இருக்க, கிருமிகளைக் கொல்வதில் ஓசோன் தனித் திறன் கொண்டது. எனவே, நீச்சல் குளத்தில் அவ்வப்போது தண்ணீரைச் சுத்தப்படுத்திக்கொண்டிருக்க ஓசோன் வாயுவைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கென்றே ஓசோன் வாயுவைத் தயாரித்து அளிக்கச் சிறியதும் பெரியதுமாகக் கருவிகள் உள்ளன. வசதி இருப்பவர்கள் இந்தக் கருவிகளை நீச்சல் குளத்துக்கு அருகே நிறுவுகிறார்கள். நீச்சல் குளங்களைத் தூய்மையாக வைத்திருக்க ஓசோன் வாயுதான் சிறந்த ஏற்பாடாகக் கருதப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் அறைகளிலும் அறுவை சிகிச்சைக்கூடங்களிலும் கிருமிகளை நீக்க ஓசோன் வாயு பயன்படுத்தப்படுகிறது.

 

பலரும் ஓசோன் வாயுவைச் சுவாசித்திருக்கலாம். இடி மின்னலுடன் நல்ல மழை பெய்து ஓய்ந்த பின்னர் நாம் சுவாசிக்கும்போது, காற்றானது மிகவும் சுத்தமானதாக இருப்பது போன்று தோன்றும். காரணம் ஓசோன்தான். காற்றின் வழியே மின்னல் பாயும்போது ஓசோன் தோற்றுவிக்கப்படுகிறது. நீங்கள் அதைச் சுவாசிக்கும்போது அது வித்தியாசமாகத் தெரியும்.

 

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

0 comments:

Post a Comment