சித்தர் சிவவாக்கியம் -408
வேணுமென்ற
ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தானுவுண்டங்
கென்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தானுவொன்று
மூலநாடி தன்னுள் நாடியும்முளே
கானுமன்றி
வேறியாவுங் கனா மயக்க மொக்குமே.
ஞானம் அடைய வேண்டும் என்று விரும்பி அது சொல்லப்படும் நூல்களை எல்லாம் படித்து
விட்டு மட்டும் தாணுவென்ற ஈசன் தனக்குள்ளே ஆதாரமாக இருக்கின்றான் என்று
சொல்லுகின்றீர்கள். ஆனால் தன்னை அறிந்து தனக்குள் இறையை உணர்ந்து தன்னை மறந்து
தியானித்து ஈசனை தரிசித்து இன்புறாமல் இருக்கின்றீர்கள். தானாகி நின்ற ஒன்று நானாக
மூல நாடியில் இருப்பதை தனக்குள் தேடி நாடி அது உகாரத்தில் சிகாரமாய் உள்ளதை
உணர்ந்து காணுங்கள். அது மெய்ப்பொருளாக இருந்து உனக்குள்ளே இறை காட்சி என்பதையன்றி
மற்றவை யாவும் கற்பனையேயன்றி கனாவில் தோன்றும் மயக்கமாகவே இருக்கும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -409
வழக்கிலே
யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உலக்கிலாது
நாழியான வாறு போலு மூமைகாள்
உழக்கு
நாலு நாழியான வாறு போல மும்முளே
வழக்கிலே
யுரைக்கிறீர் மனத்துளீசன் மன்னுமே.
வெளியில் பல கதைகளையும் தத்துவங்களையும் வழக்காகப் பேசி தனக்குள்ளே இறைவனை
அறிய உபதேசிக்கிறீர்கள், ஆனால் உண்மையில் அவன் இருக்கும் இடம் அறியாது
மனதிற்குள்ளேயே மறுகித் தவிக்கிறீர்கள், கடல் நீரைச் சுருக்கி உப்பாக்கி அளப்பது போல்
உண்மையை உணராமல் ஊமைஎழுத்தை அறியாமல் இறைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் மனதிற்குள்
ஊமைகளாய் உழல்கின்றீர்கள். கடல் நீரிலிருந்து உப்பாக பரவியிருந்து உப்பான பொருளாக
ஆனது போல் கடவுள் தன்மையிலிருந்து உங்கள் உடலுக்குள்ளே உப்பான மெய்ப் பொருளாய்
இறைவன் இருப்பதை உணர்ந்து 'உம்' என்று உள்ளுக்குள் வாசி ஏற்றி வழக்கமாக
தியானிக்க மனமே வாசியாகி அதற்குள்ளேயே ஈசன் மறைந்து ஆடிக்கொண்டு உள்ளதை அறிந்து
கொள்ளலாம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 410
அறத்திறங்களுக்கு
நீ அண்டம் எண்திசைக்கும் நீ
திறத்திறங்களுக்கு
நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கு
நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத
நின்கழல் மறப்பினுங் குடிகொளே .
தர்ம காரியங்கள் யாவும் நீ. உலகமும் எண்திசைகளும் நீ. திறமை நிறைந்த செயல்கள்
யாவும் நீ. உண்மையை தேடுகின்றவர்களின் சிந்தையில் அறிவாக நிற்பவன் நீ. உறக்கமும்
நீயே, உணர்வும் நீயே.
என் உட்கலந்து உறையும் சோதி நீ. எக்காலத்திலும் மறக்க முடியாத நின் திருவடிகளை
அறியாது மறந்துபோனாலும் என் தலையில் நீ மறக்காமல் குடிகொண்டு விளங்கவேண்டும் ஈசனே.
***************************************************
..அன்புடன் கே எம் தர்மா &கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment