சித்தர் சிவவாக்கியம் -356
சோதி
சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி
ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி
வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர்.
சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 365
ஆறுமூலைக்
கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறு
மென்று நங்கையான நாவியுந் தெரிந்திடக்
கூ
றுமென்று ஐவரங்குக் கொண்டு நின்ற மோனமே
பாறு கொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.
ஆறு ஆதாரங்களும், கூடிய ஒன்பது வாசல்கள் கொண்ட இந்த உடம்பு இருக்கும்போதும், இறக்கும்போதும் நாற்றமடிக்கின்றது. அப்படி நாறுகின்ற இவ்வுடம்பில் நாறாத வாசலில் நங்கையான வாலையாக நம் ஆவியில் உள்ளது வாலை. அதிலேயே ஐந்து பூதங்களும் இணைந்து ஐவண்ணமாக கொண்டு நிற்கும் மோனமே திருவடி. அத்திருவடியை நம் சென்னியில் வைத்து இவ்வுலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களிலும் பரந்து நின்று இயக்குவது சிவமே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 370
வாயில்
கண்ட கோணமில் வயங்கு மைவர் வைகியே
சாயல்
கண்டு சார்ந்ததுந் தலை மன்னா யுரைந்ததுங்
காயவண்டு
கண்டதுங் கருவூரங்குச் சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.
வாயிலாக விளங்கும் கோயிலைக் கண்டு அக்கோனாகிய இடத்திலேயே ஐந்து பூதங்களும் இருந்து கொண்டு அவ்வீசனின் சாயலான சோதியைக் கண்டு அதிலேயே தியானித்து நில்லுங்கள். தலையில் மன்னனாக உறைந்து நின்ற அதாலேயே காயமாகிய உடம்பு தோன்றி கருவாக வளர்ந்தது. அவ்வுடம்பில் இருந்த உயிர் போனதும் பறந்து நின்ற சிவம் பாய்ந்து மறைந்தது.
***************************************************
அன்புடன் கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment