பூமி என்னும் சொர்க்கம்:(06)

 


 டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் இருந்தது. உலகின் எல்லா கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து இருந்ததால் அதற்கு சூப்பர் கண்டம் என்று பெயர். அந்த சூப்பர் கண்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன. அது மனிதன் தோன்றாத காலம். அப்போது டைனோசர்கள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தின.


டைனோசர் என்றால் ’பயங்கரமான பற்களைக் கொண்ட பல்லி’ என்று அர்த்தம். இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஓவன் 1842-ம் ஆண்டில் அந்தப் பெயரை வைத்தார். ஆனால் அது பொருந்தாத பெயர் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டைனோசர்களில் கோழிக்குஞ்சு அளவு டைனோசரும் இருந்தது. 100 அடி நீள டைனோசரும் இருந்தது. தாவரங்களை உண்ணும் டைனோசர்களும் இருந்தன. விலங்குகளை வேட்டையாடி உண்ணும் டைனோசர்களும் இருந்தன.

 

எப்போதோ இறந்து போன டைனோசர்களின் புதை படிவங்களை வைத்துதான் விஞ்ஞானிகள் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளனர். டைனோசர்களின் தலை, கால் போன்ற உறுப்புகளின் புதை படிவங்கள் நிறையவே கிடைத்துள்ளன. அபூர்வமாக டைனோசரின் முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

 

தமிழகத்திலும் டைனோச்ர்கள் இருந்துள்ளன. ஒரு வகை டைனோசருக்குத் திராவிடோசாரஸ் என்று பெயர். பிற விலங்குகளை உண்ணும் டைனோசர்களில் ஸ்பைனொசாரஸ்தான் மிகப் பெரியது. ஐந்து மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரம் கொண்ட அதன் எடை சுமார் 20 டன்.

 

சுமார் 19 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி டைனோசர்கள் சுமார் 5 கோடி ஆண்டுகள் பூமியில் வாழ்ந்துள்ளன. சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அவை அழியத் தொடங்கின.

 

ஒரு சிறிய விண்கல் பூமியில் வந்து விழுந்தால் அமெரிக்காவில் உள்ள பாரிஞ்சர் பள்ளம்போல பள்ளம் தோன்றும். ஆனால் பெரிய விண்கல் பயங்கர வேகத்தில் வந்து மோதும்போது பெரும் வெப்பம் தோன்றும். விண்கல் என்பது பெரிதும் பாறையே. அது உருகும். மோதிய இடத்தில் பெரும் நெருப்பு தோன்றும். பயங்கரமான அளவுக்குப் புழுதி தோன்றும்.

 

இந்தப் புழுதியானது உயரே சென்று பூமியை ஒரு படலம்போல போர்த்திக்கொள்ளும். பின்னர் அந்தத் தூசு அனைத்தும் கீழே வந்து விழும் என்றாலும், நீண்ட காலம் உயரே தங்கியிருக்கும்போது சூரியனை மறைக்கும். பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறையும். இதனால் பூமியில் பருவ நிலைகள் பாதிக்கப்படும். தாவரங்கள் பாதிக்கப்படும்.

 

இப்படியான சூழ்நிலையில் தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் முதலில் மடிந்திருக்கலாம். அதைத் தொடர்ந்து விலங்குகளை உண்ணும் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். டைனோசர்கள் மெல்ல அழிவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.

 

சுமார் 15 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட பெரிய விண்கல் மணிக்கு சுமார் 60 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து பூமியின் மீது மோதியதால் ஏற்பட்ட பல விளைவுகள் காரணமாக டைனோசர்கள் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த லூயி ஆல்வாரஸ் தலைமையில் விஞ்ஞானிகள் இதே காரியமாகப் பல பகுதிகளிலும் தேடினார்கள். விண்கற்களில் இரிடியம் என்ற உலோகம் கணிசமான அளவில் உண்டு. பூமியில் உள்ள பாறைகளில் இரிடியம் அதிகம் கிடையாது.

 

விண்கல் எரிந்து பொடியானபோது அதன் தூசு மெல்ல பூமியில் வந்து படிந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்தத் தூசில் இரிடியம் இருக்க வேண்டும். பூமியில் ஆங்காங்கு தோண்டிப் பார்த்து இரிடியப் படிவுகள் இருக்கிறதா என்று தேடலாம். விண்கல் பூமியில் வந்து மோதிய வட்டாரத்தில் நிலத்துக்கு அடியில் இரிடியப் படிவு கணிசமாகவே இருக்கலாம் என்று விஞ்ஞானி லூயி ஆல்வாரஸ் கருதினார்.

 

ஆல்வாரசுக்குப் பல துறையைச் சேர்ந்தவர்களும் உதவினர். அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் கச்சா எண்ணெய் ஊற்று உள்ளதா என்று கண்டுபிடிக்க வானிலிருந்து விமானம் மூலம் சர்வே எடுப்பார்கள். அப்படி சர்வே எடுத்த ஒருவரும் இதில் உதவினார்.

 

கடைசியில் மெக்சிகோவின் ஒரு பகுதியான யூகாட்டன் அருகே கடற்பகுதியில் ஒரு பெரிய பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே விண்கல் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

 

பூமியின் மீது ஏதேனும் ஒரு விண்கல் வந்து மோத இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் பூமிக்கு அருகே வந்து செல்லும் விண்கற்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,803 விண்கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கட்டுரையாளர், எழுத்தாளர்--தொடர்புக்கு: nramadurai@gmail.com

0 comments:

Post a Comment