"மிருகங்களிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி: 04



9] "அதிகம் கேளுங்கள், குறைவாக பேசுங்கள்" : 

நிறைய பேசாமல் பேச்சை மட்டுப்படுத்தினால், நமக்கு நம் வாழ்வில் நிம்மதி மற்றும் பல நன்மைகளும் கட்டாயம் வந்து சேரும். ஏன் என்றால், பொதுவாக, நமக்கு பல பிரச்சனைகள் எங்கிருந்து வரும் என்று பார்த்தால் அது நம்முடைய தேவையற்ற அதிகமான பேச்சில் தான் என்பது புலப்படும்.

 

சும்மா இல்லாமல் எதையாவது தெரிந்தும் தெரியாமலும் அதிகப்பிரசங்கியாக பேசிவிட்டு, அப்பறம் அதனால் வரும் கேடுகளை, விரோதங்களை பொறுக்க  முடியாமல் நீங்கள் தவித்து இருக்கலாம். ஒரு கூட்டத்தில் பேசும் போதோ அல்லது நண்பர்களுடன் பேசும் போதோ, நமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று அதிகமாக பேசினால், அங்கே தான் நமக்கு ஆப்பும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள், எப்போதும் நமக்கு தெரியாத விடயங்களை  பற்றி தலையிட வேண்டாம்.

 

ஒரு சில நேரங்களில் மனம் விட்டு பேசுவதால் நம்முடைய பாரம் குறையும் என்பது முற்றிலும் சரியாக தோன்றினாலும், அதற்காக நிறைய மணிக் கணக்காக பேசவேண்டாம். இதனால், நம்மை பற்றிய ஒரு தவறான எண்ணமே மறவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும். நம்மை எளிதில் எடை போட்டு பின் நம்மை பற்றி மற்றவர்களிடமும் [வேறு நண்பர்களிடமோ அன்றி நபர்களிடமோ] சொல்லுவார்கள். ஆகவே அதில் எமக்கு எந்த நன்மையையும் வராது, அதனால், சில வேளை எம்மேல் வெறுப்பும் மற்றும் நாங்களும் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகலாம்.

 

எனவே எப்போதும் அளவோடு பேசுங்கள் , தேவையானதை மட்டும் பேசுங்கள், அதிலும் உங்களுக்கு தெரிந்ததை மட்டும் பேசுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் !

 

டால்பின்கள் [ஓங்கில்கள் / Dolphins] பொதுவாக விசில் [whistling noises] மற்றும் ஒலிகளின் வரிசை மூலம் தங்கள் சகாக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியவை. அது மட்டும் அல்ல, ஒவ்வொரு டால்பின்னும் தமக்கே உரிய பிரத்தியேக ஒலியை எழுப்பி, மற்ற டால்பின்களுக்கு  தம்மை யார் என அடையாள படுத்துகிறது [each one makes a distinctive sound that other dolphins can immediately recognize]. மேலும் இந்த பரந்த சமுத்திரத்தில், ஒருவருக்கொருவர் இருப்பிடத்தைப் புரிந்துகொள்ள, அவை கட்டாயம், கூர்மையாக கேட்க வேண்டும். எனவே எல்லாம் ஒரே நேரத்தில் விசிலடித்து ஒலி எழுப்பினால், ஒருவரும் மற்றவர்களின் இருப்பிடத்தை காண முடியாமல் போய்விடும். எனவே தமது கேட்கும் ஆற்றலை அவை திறம்பட  பயன்படுத்த பழக்கப்பட்டுள்ளன. ஆகவே மனிதர்களும் டால்பின் மாதிரி, குறைவாக பேசி, அதிகமாக கேட்கும் பழக்கத்தை கடைப்பிடித்து, அதனால் நன்மை பெறவேண்டும்.

 

 

10] "மன்னிப்பதற்கு பழகுங்கள்" : --- 

 

யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” 

(பரிசுத்த வேதாகமம் ரோமர் அதிகாரம் 12)

 

மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட. நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதை விட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்தி விட்டீர்கள் என்று சொல்லாமல், ’இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது’ என்று சொல்லுங்கள்.

 

கோபமும், வெறுப்பும் நம்மை சுயமாக தண்டித்து கொள்வதை போன்றது. நாம் பிறரை மன்னிக்க பழகுகிற போது, உண்மையில் நம்மை நாமே மன்னித்து கொள்கிறோம். மன்னிப்பின் மூலம் பிறர் மீதான பரிவை விடவும் நமக்கு நம் மீதான அக்கறை வளர்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

 

எனவே, மன்னிக்க பழகுங்கள்!

 

யானையை எடுத்து கொண்டீர்கள் என்றால், யானைகள் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலும் வேட்டையாடுவதற்கு பலியாகின்றது அல்லது மனிதர்களால் எதாவது  வன்முறைக்கு [fall victim to poaching or other violence inflicted by humans] ஆளாகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளால், அவை தமது குடும்ப உறுப்பினரை இழக்கின்றன.  யானைகள் மனிதர்களைப் போலவே, சிறந்த புத்திசாலித்தனத்தைக் கொண்டிருபத்துடன் சிக்கலான உணர்ச்சிகளையும் [complex emotions] உணரக்கூடியவை. தமது குடும்ப உறுப்பினர்கள் மனிதர்களால் கொல்லப்பட்டதை அல்லது காயப்படுத்தப்பட்டத்தை பார்த்த அனாதை யானைகளை, பல விலங்கு பாதுகாப்பு நிறுவனங்கள் எடுத்து பாதுகாப்பு கொடுக்கின்றன. என்றாலும் இந்த  யானைகள் தமது கோபத்தை காட்டாமல், மனிதர்களை மன்னித்து, தம்மை அவர்கள் கையாள அல்லது வளர்க்க ஒத்து உதவுகின்றன. எனவே யானைகள் எமக்கு, எந்த சூழ்நிலையிலும் மன்னிக்கக் கூடிய இயல்பை போதிக்கின்றன எனலாம்.

 

நான் இங்கு வெவ்வேறு விலங்குளிடம் இருந்து பெறக்கூடிய பத்து பாடங்களை மட்டும் கூறி இருந்தாலும், இன்னும் பல பாடங்கள் மற்றைய விலங்குகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, சிலந்தி ஒன்றை கவனத்தில் எடுத்தால், அது தனது வலையை உருவாக்குவதில் மிகவும் உறுதியாக இருப்பதைக் காணலாம். இது ஒருபோதும் ஒரே ஒரு முயற்சியிலிருந்து அதன் வலையை உருவாக்குவதில்லை. வலை பின்னி முடியும் வரை தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றுகிறது. எதோ ஒரு காரணத்தால், அது இடையில் அழிந்தால், அது மீண்டும் மீண்டும் வலை பின்ன தொடங்கும், என்றும் அதை கைவிடாது. இதை கட்டாயம் மனிதன் சிலந்தியில் இருந்து கற்க வேண்டும். அதே போல, பொறுமைக்கு சிறுத்தை, கடினமான நிலையில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒட்டகம், ... இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். 

குறிப்பு:ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள்  Theebam.com: "மிருகங்களிலிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 01

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முற்றிற்று

1 comment:

  1. மனுவேந்தன்Friday, August 27, 2021

    மிருகங்களிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ளக்கூடிய நற்குணங்களை ஒவ்வொரு உப தலைப்புகளுடாக அவற்றிற்குரிய மிருகங்களை எடுத்து அலசிய விதம் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete