4]
"என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் கடந்து
செல்லுதல்" : ---
"சிலர்
சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்"
"பொய்த்திரள்
வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்" - பாரதியார்
"இடுக்கண்
வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்"
[குறள்
621]
எம்மை சூழ நடைபெறும் அனைத்தையும் மறந்து புன்னகைக்கும் பொழுது, மனம் ஆழ் கடல்
போல் அமைதியடைவதை நாம் உணரலாம்.
உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்தாலும் தர முடியாத நன்மையை புன்னகை
செய்துவிடுகிறது. துன்பத்திலும் புன்னகை செய்ய பழகவேண்டும் என கூறுவதை கேள்வி
பட்டு இருப்பீர்கள். இதனால் தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல்
வெள்ளிக்கிழமை ‘உலக புன்னகை
தினம்’ கடைப்பிடிக்கப் படுகிறது. இது மனிதனை
புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் என்பவர் 1963-இல் ‘புன்னகை முகம்’ என்ற குறியீட்டை
1963 இல் அறிமுகம்
செய்தார் [Harvey
Ball, a commercial artist from Worcester, Massachusetts created the smiley
face]. இதனைத் தொடர்ந்து ‘உலக புன்னகை
தினம்’ 1999-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
எதிரிகளைக் கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை ஆகும்.
கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வாழும் விலங்கான, மிகக் குறுகிய
வாலை கொண்டுள்ள குவாக்கா [Quokka] ஒரு சாதாரண வீட்டு பூனையின் அளவை மட்டுமே
கொண்டுள்ளது. இது புல், இலைகள், தளிர்கள் மற்றும் பழங்களை உண்கிறது. குவாக்காவின் பொதுவான வாழ்விடம் அடர்த்தியான
புதர்களைக் கொண்ட வறண்ட புல்வெளி வயல்கள் ஆகும். இந்த நட்புள்ள மகிழ்ச்சியான
விலங்கின் அதிசயமான,
மக்களின் மனதை
தொடும், பார்ப்பவர்களை
சிரிக்கச் செய்யும் புன்னகை [infectious smile], சுற்றுலாப்
பயணிகளை கவர்ந்து விடுகிறது, இதனால் அதனுடன் சேர்ந்து அற்புதமான அந்த காட்சியை புகைப்படம் எடுக்க, பலரை தூண்டுவதை
நாம் இன்று காண்கிறோம். அவைகள் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை இந்த அற்புத புன்னகை எமக்கு
புலன்படுத்துகிறது. ஆகவே மனிதர்களும் இந்த அற்புத புன்னகையை கற்றுக்கொண்டால், ஆக்கபூர்வமான
அணுகுமுறையை புன்னகையால் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல பல பிரச்சனைகள் உண்டு. பிரச்சனை இல்லா
மனிதன் உலகில் இல்லை என்றே கூறலாம். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் பொழுதே, எம் ஆற்றலும் மன
வலிமையையும் வெளிப்படுகிறது. இதற்க்கு
புன்னகை துணை புரிகிறது. ஏன் என்றால், மனம் மகிழ்வுடன் இருந்தால், எவ்வளவு
பிரச்சனையையும் எதிர்த்து போராடும் மனத்தையிரியம் உண்டாகும். நீங்கள் உண்மையில்
ஒரு துக்ககரமான நாளில் இருக்கிறீர்கள் என்று வைத்தாலும், இந்த குவாக்கா
விலங்கை ஒரு முறை சிந்தித்தீர்கள் என்றால், அது உங்களுக்கு ஒரு தெம்பையும். ஊக்கத்தையும்
வலிமையையும் கொடுத்து உங்களை புன்னகைக்க வைக்கும்.
5]
"ஒன்றிணைந்து செயல்படுதல் [கூடி வேலை
செய்தல்]" : ---
"எறும்பு
ஊற கல்லும் தேயும்" - பழமொழி
"சோம்பேறியே, நீ
எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக்
கற்றுக்கொள்." - நீதிமொழிகள்:6-6,9
எறும்புகளை நீங்கள் உற்று நோக்கினால், அவை ஒரு அதிசய பிறவிகள் என்பதை உணர்வீர்கள்.
தம்மை விட உருவத்தில் பெரிய பூச்சிகளை, தாம் உண்பதற்காக, கூட்டமாகச்
சேர்ந்து அல்லது ஒன்றிணைந்து மெல்ல மெல்ல கூட்டுக்கு நகர்த்தி செல்லும். இந்தச் செயல்பாடுகள் எமக்கு
ஒரு நல்ல பாடத்தை கற்பிப்பதை உணரலாம். ஆமாம், எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை.
இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி
கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம்
செய்வது, கூட்டை சுத்தம்
செய்வது, எதிரிகளிடமிருந்து
பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன.
இதையும் மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
"உடலினை
உறுதி செய்
அறிவை விரிவாக்கு
கொள்கை வகுத்து நில்
கூடி வேலை செய்"
என யாரோ கூறியது என் நினைவுக்கு வருகிறது. உதாரணமாக, எறும்புகள் அழுக்குகளின் சிறிய துகள்களை ஒரு குழுவாக நிலத்தடிக்கு கொண்டு சென்று, அங்கே ஒரு
சிக்கலான சுரங்கங்களை உண்டாக்கி தம் வாழ்விடத்தை உண்டாக்குகின்றன. ஒரு அணியாக
இரையை தேடி கண்டுபிடித்து சமாளிக்கின்றன. அது மட்டும் அல்ல, அவையை தமது இருப்பிடத்துக்கு
ஒரு அணியாக, ஒரு வரிசையில்
ஊர்ந்து எடுத்து செல்கின்றன. மிகவும் கடுமையாக, ஒற்றுமையாக ஒரு
குழுவாக, எல்லோரும் அங்கு
பங்கு செலுத்துகின்றன. அங்கு யாரும் எல்லா எடையும் தனியாக சுமக்கவில்லை. யாரும்
ஒரு ஓரத்தில், ஒரு சுமையையும்
தூக்காமல், விலகி நிற்கவில்லை.
இதைத் தான் மனிதன் கட்டாயம் கற்கவேண்டும்.
தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில்
நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை;
உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை.
அப்படியிருந்தும்,
ஏன் சக்திமிக்க ஓர் இனமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய
நாம், குறிப்பாக
கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத்
திட்டத்தின் கீழ்,
ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ
கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு
பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக
இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும்
சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக்
காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள்.
ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
"கூடி வேலை செய்" என்ற
பண்பையும் காணோம்!!. ஏன் இவர்கள் தம் காலில் மிதிபடும் இந்த எறும்பின் வாழ்வையாவது
ஒரு முறை சிந்திக்கக் கூடாதா?
குறிப்பு:ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள்
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 03 வாசிக்கத் தொடுங்கள் Theebam.com: "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 03
No comments:
Post a Comment