"மிருகங்களிலிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி: 01


 

நடைபாதைகளில் எம் காலில் மிதிபடும் சின்னஞ்சிறிய வண்டுகளில் இருந்து, ஆப்பிரிக்க சவன்னாக்களில் [African savannah] அலைந்தது திரியும் வலிமை மிக்க சிங்கம் வரை, எல்லா மிருகங்களும் எதோ ஒரு வகையில், எமக்கு மிகவும் தேவையான, பெறுமதியான பாடங்களை போதிக்கின்றன என்பதை, அவைகளின் நடமாட்டங்களை, வாழ்க்கையை உற்று நோக்கின் நாம் இலகுவாக அறியலாம். 

 

உண்மையில் நீங்கள் மிருகங்கள் வாழ்வில் கவனம் செலுத்துவீர்களானால், நாம், இந்த அவசர உலகில்  மறந்த பல பண்பாடுகளை, அவை எமக்கு நினைவூட்டுவதை நீங்கள் உணர்வீர்கள். அது மட்டும் அல்ல, மிருகங்களுடன் நீங்கள் கொஞ்சம் நெருக்கமாக தொடர்பு கொள்வீர்கள் என்றால்,  நம் சக மனிதர்களிடமிருந்து ஒருபொழுதும் கற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.  உதாரணமாக, நீங்கள் உணராமலே, ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களை, உங்கள் சொந்த செல்லப்பிராணி, உங்களுக்கு கற்பிப்பதை காணலாம். அப்படி நாங்கள் கற்ற சில பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக இனி நாம் பார்ப்போம்.

 

1] "தற்போதைய தருணத்தில் வாழ்தல்" : ---

"கடந்த காலத்தில் வாழாதீர்கள். எதிர்காலத்தை கனவு காணாதீர்கள். உங்கள் மனதை தற்போதைய தருணத்தில் ஒருமுகப்படுத்துங்கள்" [Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment. – Buddha] என்று புத்தர் கூறியது ஞாபகம் வருகிறது.

 

மனிதன் பெரும்பாலும்  தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் முற்றிலும் மூழ்காமல்,  ஒரு சிந்தனையில் இருந்து அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றும் ஒன்றிற்கு தாவக்கூடியவன். அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்பர். ஆனால் மிருகங்கள் இன்று, இந்த தருணத்தில், தனக்கு தேவையான உணவு, நீர், தங்கும் இடம்  மற்றும் அவர்களின் அடுத்த துணையை பற்றியே [food, water, shelter as well as their next mate] சிந்திக்கின்றன. உதாரணமாக ஒரு மானை எடுங்கள், அது தனது ஒரு செயலிலிருந்து, அதாவது சதைப் பழங்களை [கொட்டையில்லா பழங்களை, உதாரணம் berries] தேடுவதில் இருந்து இன்னொரு செயலுக்கு, அதாவது நன்னீர் அல்லது தன் தற்போதைய தருணத்தில் உள்ள சுற்றுப்புறங்களை அனுபவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அமைதியாக மாறுகிறது. 

எனவே நீங்கள் இப்படியான அழகான உயிரினத்தை உற்று நோக்குவீர்கள் என்றால், நீங்கள் கட்டாயம் தற்போதைய தருணத்தைத் தவிர எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.

 

2] "நிபந்தனையற்ற அன்பு" : ---

பண்டைய கிரேக்கத்தில் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia) காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் நிபந்தனையற்ற அன்பு [அகபே / Agape: unconditional love, the highest form of love] என்ற வார்த்தையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது கட்டுப்பாடு அற்ற அன்பு என்பது விளைவுகளை அல்லது ஏமாற்றங்களைப் பொருட்படுத்தாமல் நேசிப்பதாகும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். அதில், எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாதது தான் உண்மைக் காதல் என்கின்றனர் நிபுணர்கள். ஆகவே, 'அகபே' [Agape] என்பது, நிபந்தனையற்ற அன்பு அல்லது காதல் மற்றும் தியாகம் போன்றவற்றை உள்ளடக்கி பைபிளில் அல்லது கிரேக்கத்தில் வரையறுக்கப்பட்ட  நான்கு விதமான அன்பின் உச்சமாகும். இதை தெய்வீக காதல் என்று தமிழில் கூறுவதையும் ஒப்பிடுக.

 

நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளை பற்றி சிந்திக்கும் பொழுது, உங்கள் மனதில் முதலில் தோன்றுவது இந்த நிபந்தனையற்ற அன்பு ஆகும். உதாரணமாக, ஒரு வளர்ப்பு நாயை எடுத்து கொண்டால்,  தன்னை தழுவத் தூண்டும் [cuddly] இந்த அன்பான விலங்கு, தனது எஜமானுக்கு, எந்த வித ஆதரவையும் புரிதலையும் வழங்குவதற்க்கு என்றும் தயார் நிலையிலேயே உள்ளதையும், அதில் நீங்கள் கோபப்பட்டால் அல்லது எரிச்சல்பட்டால் கூட, அதை மறந்து, தடையின்றி அது உங்களுக்காகவே செயல் படுவதையும் காணலாம். நாயின் அழியாத விசுவாசம், உண்மையான பற்று, மற்றும் தன்னை வளர்க்கும் மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் இயல்பு போன்றவற்றால், இது மனிதனின் சிறந்த நண்பராக வர்ணிக்கப் படுகிறது. இதை பார்த்து மனிதனும் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துவது என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.

 

நிபந்தனையற்ற அன்பின் வரையறை நீங்கள் தற்காலிக காரணங்களுக்காக வேறொருவரை நேசிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் யாரும் உங்களை நிபந்தனையின்றி நேசிக்கவில்லை என்றால், வாழ்க்கை மிகவும் கடினமானதாகவும் குழப்பமானதாகவும் உங்களுக்கு தோன்றலாம். நீங்கள் யாருக்கும் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள்  உணரலாம். எனவே ஒருவேளை மனச் சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளை நீங்கள் உருவாக்கலாம். எனவே, முற்றிலும் நேசிப்பதாக உங்களுக்கு உணர்த்தும்  நிபந்தனையற்ற அன்பு, பல வழிகளில் கட்டாயம் உங்களுக்கு நன்மை அளிக்கும். உதாரணமாக, நீங்கள் இன்னும் ஒருவருக்கு மதிப்புமிக்கவர் என்று அது உணர்த்துவத்தின் விளைவாக, நீங்கள் மிகவும் கடினமான சவால்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொண்டு தைரியமாக இருக்க முடியும் என்பதேயாகும். 

 

3] "ஓய்வுக்கான ஒரு நேரத்தை வைத்திருங்கள்" : --- 

"Eight hours for work, eight hours for rest and eight hours for what you will."

" எட்டு மணித்தியாலம்  வேலை, எட்டு மணித்தியாலம் ஓய்வு, எட்டு மணித்தியாலம் உங்கள் எண்ணப்படி கழிக்க"  

--A slogan of the Eight-hour Day movement / எட்டு மணித்தியால இயக்கத்தின் ஒரு முழக்கம்

 

ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக பெரியவர்களுக்குத் தேவையான தூக்க நேரம் ஒவ்வொரு நாளும் 7-8 மணி நேரம் ஆகும். இதனால் உங்கள் ஆரோக்கியமும் சகிப்புத்தன்மையும் பராமரிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு கூட நேரம் வேலை செய்வதையும், குறைந்த நேரம் ஓய்வு எடுப்பதையும்  தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்ற உயிர் இனங்கள் தேவைக்கு அதிகமாக வேலை செய்வதில்லை. அவைகள் வேலையில்லா நேரத்தின் ஒவ்வொரு தருணத்தையும், தங்கள் வாழ்க்கையினை உற்சாகப்படுத்தவும் மகிழ்விக்கவும் பயன்படத்துகின்றன. உதாரணமாக ஒரு பன்றியை பாருங்கள். அவைகள் நாள் முழுவதும், மீண்டும் பசி வரும் வரை  சேற்றில் உருளுகின்றன, கிடக்கின்றன! அவைகள் சோம்பேறி போல் தோன்றினாலும், உண்மையில் அவற்றில் இருந்து ஒன்று அல்லது இரண்டு பாடம் கற்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக ஓய்வெடுக்க கற்றுக்கொள்வதை கூறலாம்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 02 வாசிக்க தொடுங்கள் Theebam.com: "மிருகங்களிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி...

No comments:

Post a Comment