உயிரினங்கள் வாழும் கிரகம்!
பூமியின் அருமை பலருக்கும் தெரியாது. பூமியை விட்டுக் கிளம்பி வேறு கிரகங்களுக்குப் போய் வாழ்ந்திருந்தால் ஆகா, நம் பூமி சொர்க்கம் போன்றது என்று கூறுவோம். ஆனால், மனிதன் இதுவரை பூமியை விட்டு வேறு எந்த கிரகத்துக்கும் வாழச் சென்றது கிடையாது.
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் அனுப்பியுள்ள ஆளில்லா விண்கலங்கள்
சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளன.
மனிதன் என்றாவது ஒருநாள் போய், தங்கி வாழக்கூடிய ஒரு கிரகம் உண்டு என்றால் அது
செவ்வாய் கிரகம்தான். ஆனால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் இயல்பாக
சுவாசிக்க முடியாது. செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. ஆனால் அந்தக் காற்று
மண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயுதான் அதிகம். மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜன்
வாயு மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. எனவே, ஆக்சிஜன் அடங்கிய குப்பியை முதுகில்
கட்டிக்கொண்டு, மூக்கில் குழாயை
மாட்டிக்கொண்டுதான் நடமாட வேண்டும்.
செவ்வாயில் தண்ணீர் கிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் ஐஸ் கட்டியை உருக்கிப் பயன்படுத்தியாக வேண்டும். விருப்பம்போல நடமாட முடியாது. விண்வெளியிலிருந்து பயங்கர வேகத்தில் வரும் விண்கற்கள் எந்த நேரத்திலும் தலை மீது வந்து விழலாம். தவிர, விசேஷ காப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும். சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்கள் தாக்கலாம்.
செவ்வாயின் கதை இப்படி என்றால் சூரியனுக்கு மிக அருகே உள்ள புதன்
கிரகத்துக்குப் போவது பற்றிச் சிந்திக்கவே முடியாது. பகலில் 427 டிகிரி
செல்சியஸ் அளவுக்குக் கடும் வெயில். இரவில் மைனஸ் 173 டிகிரி
செல்சியஸ் அளவுக்குக் கடும் குளிர்.
பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும்
வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய்
இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும். சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய
கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.
பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் (15 கோடி கிலோ
மீட்டர்) உள்ளது. எனவே, புதன் கிரகத்தில் உள்ளது போல கடும் வெயில் இல்லை. பூமியில்
போதுமான ஆக்சிஜன் அடங்கிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீரும் உள்ளது. எனவே, பூமியில்
உயிரினம் சாத்தியமானது. செவ்வாய் போல இல்லாமல் பூமியானது தகுந்த பருமன் கொண்டது.
எனவே, அது காற்று
மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. வடிவில் சிறியது என்பதால்
செவ்வாய் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது.
பூமியின் காற்று மண்டலமானது சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும்
ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. அதுவும்
இதுபோன்ற கதிர்களைத் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வரும் விண்கற்கள் பூமியின்
காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பிடித்து அழிந்துவிடுகின்றன. செவ்வாய்
கிரகத்தில் அப்படி இல்லை.
பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. அதனால் கடும் குளிரோ கடும்
வெப்பமோ இல்லை. புதன் கிரகத்தில் பகல் என்பது மிக நீண்டது. இரவும் அப்படித்தான்.
செவ்வாயிலும் பூமியைப் போல ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம்.
ஆனால், பூமியுடன்
ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. எனவே, குளிர் அதிகம்.
பூமியின் காற்று மண்டலம் தகுந்த அடர்த்தி கொண்டது என்பதால் பூமியில் தண்ணீர்
இருக்கிறது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் மிக அவசியம். செவ்வாய் கிரகத்தில்
என்றோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால், இன்று செவ்வாயில்
தண்ணீர் இல்லை.
பூமியானது இயற்கையாக இதுபோன்ற பல சாதக நிலைகளைப் பெற்றுள்ளதால்தான் பூமியில்
மனிதனும் பல்வகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் வாழ
முடிகிறது. அந்த அளவில் சூரிய மண்டலத்தில் பூமி ஒன்றுதான் உயிரினங்களின்
சொர்க்கமாகத் திகழ்கிறது.(….தொடரும்...)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:
nramadurai@gmail.com
No comments:
Post a Comment