பூச்சிய உடல் அளவு பண்பாடு [Size zero culture]



இன்று உலக அழகி போட்டி [beauty queen competition], உடை அலங்கார காட்சி [fashion show] மற்றும் நடிகைகளின் தேர்வில், உலகளாவிய ரீதியில் 'உடல் அளவு' முதலிடம் வகுப்பதை காணுகிறோம். அது மட்டும் அல்ல, வரலாற்றில் ரோமில் [Ancient Rome] இருந்து பண்டைய தமிழ் நாடுவரை அது ஆதிக்கம் செலுத்தியும் உள்ளது.

 

உடல் அளவைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் மற்றும் பொதுவாக, பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பெரிதாக இருப்பதையும் காண முடியும். அது மட்டும் அல்ல, உதாரணமாக,  பெண்ணுக்கு  36", 24", 36" [bust vs waist vs hip / மார்பளவு vs இடை vs இடுப்பு] போன்ற ஒரு நாழிகை அளக்கும் கருவி வடிவில் [hourglass shape] இருப்பதையே சிறந்ததாகவும், அதேபோல, ஆணுக்கு ஆங்கில எழுத்தான 'வி' (V) வடிவம் சிறந்ததாகவும் கருதப் படுகிறது. இதில் பூச்சிய உடல் அளவு என்பது  30 22 32 அங்குலத்துக்கும் 36 28 36 அங்குலத்துக்கும் இடையில் எங்கேயாவது இருக்கலாம். 

 

உதாரணமாக "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லதுஎல்லா உருவும் தெரிந்தாம்" [பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது] - என்ற கம்பராமாயணம் பாடலும் மற்றும்  "மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்" [உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்] - என்ற சிலப்பதிகாரம் பாடலும் இதை சாட்சி பகிர்கின்றன. அது மட்டும் அல்ல, திருக்குறளும் தனது குறள் 1115 இல்,   "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" என்று கூறுகிறது. அதாவது, அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடை முறிந்து அவள் விழுந்து இறந்து விடுவாள். எனவே மங்கலமாக பறைகள் இனி ஒலியா என்கிறது. பெண்ணின் இடையை அத்தனை மெலிதாக வள்ளுவர் காட்டுவதை காண்கிறோம். அதே போல , இன்றைய காலத்திலும், கவிஞர் வாலி 1963 இல்  எழுதிய ஒரு பாடல் ஒன்று " ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய்" என்று பாடுகிறது. 

 

தமிழ் இலக்கிய நுால்களில், இடையை கவர்ச்சியான உறுப்பாக வர்ணித்துள்ளதுடன், அதை மெல்லிடை [மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க (கந்த புராணம்)], கொடியிடையெனவும் [கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து `குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை] கவிகளில் பாடுகிறது. மேலும் பண்டைய தமிழரும் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய புட்டப் பாகம் / இடுப்பு  (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதை அன்றைய அல்லது பண்டைய  பெண் அல்லது இறைவி உருவ சிலைகளில் இருந்து அறியலாம்.  அன்று "உண்பது நாழி; உடுப்பவை இரண்டே"; என உடை இரண்டு துண்டுகளையே [கீழாடை, மேலாடை] கொண்டிருந்தது. அது படிப்படியாக ஆண்களுக்கு வேட்டி, சால்வையாகவும், பெண்களுக்கு சேலையாகவும் பரிணமித்தன. இது  ஒரு பெண்ணின் இடையை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப் படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடை மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டக் கூடியதாக இருந்தது, 'இடை'யின் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது.

 

அதேபோல ரோமானிய குடியரசில் வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நாடக ஆசிரியர் பப்லியஸ் டெரென்ஷியஸ் அஃபர் அல்லது டெரன்ஸ் [Publius Terentius Afer or Terence (c. 190–159 BC)], தனது புகழ்மிக்க ஒரு நாடகத்தில், She is a girl who doesn’t look like the girls of our day whose mothers strive to make them have sloping shoulders, a squeezed chest so that they look slim. If one is a little plumper, they say she is a boxer and they reduce her diet. Though she is well endowed by nature, this treatment makes her as thin as a bulrush. And men love them for that!  என்கிறார். அதாவது தாய், தன் மகளுக்கு சாய்வான தோள்களையும் அழுத்தமான மார்பையும் கொண்டு மெலிதாக காட்சி அளிக்க முயற்சிசெய்வதுடன், மகள் கொஞ்சம் குண்டாக இருந்தால், அவர்கள் அவளுடைய உணவைக் குறைக்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும் தாய்மார்களின் சிகிச்சையானது அவளை ஒரு நீரில் வாழும் நாணல் போல மெல்லியதாக ஆக்குகிறது. அந்த மெல்லிய தோற்றத்தில்  ஆண்கள் அவர்களை நேசிக்கிறார்கள் என்று சாட்சி பகிர்கிறார்.

 

மேலும் மெலிந்த உடல் நிறை அல்லது சதைப்பற்றற்ற உடல்திரள் [lean body mass] பல நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, இது நீரிழிவு நோய் [Diabetes] மற்றும் இன்சுலின் எதிர்ப்பு [Insulin Resistance] போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கொடுப்பதுடன், நோயிலிருந்து மீளவும் [Illness or Disease], மற்றும் எலும்புகள் வலிமையானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் [Bones Strong and Healthy] வைத்திருக்க உதவுகிறது.

 

இனி நாம் கோவலன் தன் காதலி மாதவியை பார்த்து பாடும் சிலப்பதிகார பாடலை கொஞ்சம் விரிவாக பார்ப்போமாயின்,

 👧

"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்

உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்

மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்

இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 

 👧

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை

நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்

வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல

நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 

 👧

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்

கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்

பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து

வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." 

 

இதன் பொருள்:

 

"உன்  தமையன்மார் கடலில்  அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்!

 

நீ என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .

 

உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும். இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே

 

உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்;

 

நீ  அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய்

 

நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை  வளைந்து முறியும்  அவ்விடையை நீ இழந்துவிடாதே

 

உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார் 

 

நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும்  உன் புருவத்தால் கொல்வாய்

 

இப்பொழுதே உனது பெரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது . அதனையும் இழந்துவிடாதே"

 

என்று எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார் பாருங்கள். அது மட்டும் அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் , மாதவியின் இடையின்  மெல்லிய தன்மையை வலியுறுத்துவதையும் காண்கிறோம். மேலும் இடை முறிந்து [ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை  என்பதை அறியலாம். பருமன்  பூச்சியத்தை  அடைந்தத பின் தானே முறியலாம் ?

 

இவைகளில் இருந்து பண்டைய தமிழர், மற்றும் ரோமர் போன்றோர்கள் மெல்லிய இடையை பெண்ணுக்கு விரும்பியதை காண்கிறோம். மேலும்  இவ்வாறான அழகு பற்றிய கருத்து [perception of beauty], அப்படியே தொடர்வதை, கி பி 900 ஆண்டு சோழ நாட்டு வெண்கல சிலைகளிலும் [Bronze idols of the Cholas], மற்றும் இன்றைய பூச்சிய உடல் அளவு பண்பாட்டிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது ஒரு புதிய கருத்து அல்ல. பண்டைய அழகு பற்றிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட புது விளக்கம் ஆகும்    

✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment