முதியோரின் "காதும் கேட்டாலும்"

   "காதும் கேட்டலும்"

ஒரு அலசல்: 

 


உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய  கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும்  ஆண்- பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும்,மற்றும்  நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், முதியோர்கள் தனிமையை உணர தொடங்குவதையும், தாம் தனித்து விடப்பட்டு விடுவார்கள் என ஏங்க தொடங்குவதையும் காண்கிறோம். இது அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியுமாகும். இந்த நிலையில் ஐந்து புலன்களில் முக்கியமான காது கேட்டலையும் இழந்தால், அவரின் நிலை மேலும் விரக்தியை தான் ஏற்படுத்தும். ஆகவே இன்று நாம் "காதும் கேட்டாலும்" பற்றி சிறுது அலசுவோம்.    

 

காது வழியாக நாம் ஒலியை கேட்பதால் தான், எங்களால்  பேச முடிகிறது. குழந்தைகள் முதலில் ஒலியை உணர்கின்றன. அதனால் தான் குழந்தைகள் பேசவே ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. எனவே, மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது எனலாம். தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது இந்த காது தான் ! அதேபோல், விழிக்கும் பொழுது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் இதுவே தான் ! எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று நாம் கூறலாம். 

 

உதாரணமாக, காது கேட்காமல் வாழ்வதும் [செவிடனாக] அல்லது குறிப்பிடத்தக்க அளவு, கேட்கும் சக்தியை அல்லது திறனை இழந்து வாழ்வதும் கட்டாயம், ஒரு மனிதனில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கேட்கும் உணர்வை இழப்பது அவனை தனிமைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு மனச்சோர்வை அவனில் ஏற்படுத்தலாம். அது மட்டும் அல்ல சில ஆய்வுகள் இது பாரதூரமான நோய்களுக்கும், உதாரணமாக மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வித மறதிநோயை [டிமென்ஷியா] ஏற்படுத்தலாம் என்று உறுதி படுத்துகிறது.

 

ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும் என கூறலாம். இது ஒரு வித சக்தி ஆகும். இது ஒரு ஊடகத்தினூடாக பயணிக்கும் பொழுது, ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை [அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் / atoms and molecules] அதிர்வுறச் செய்கிறது. அதன் மூலம் ஒலி பரவுகின்றது. உதாரணமாக, மத்தளத்தை தட்டியவுடன், மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது. அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் [வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம்] உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன. அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து,  அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும்.  ஆனால் இது வெற்றிடத்தின் [vacuum]  ஊடாக செல்லாது. அதிர்வினால் ஒலி அலைகள் ஏற்படுகின்றன. எல்லா ஒலி அலைகளும் மனிதனால் கேட்க முடியாது. உதாரணமாக, மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளை விட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. மனிதனை விட, ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும்.

 

காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது கடவுளால் அல்லது பரிணாம வளர்ச்சியால் அல்லது படிவளர்ச்சியால் வடிவமைக்கப்பட்ட  ஒரு பொறியியல் பகுதி என்று கூறலாம். இதனால் நாம் எல்லாவிதமான ஒலிகளையும் கேட்டு இன்று மகிழ்கிறோம். அது மட்டும் அல்ல, ஒலி பிறந்ததால் தான் எழுத்தும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடன் ஒருவர் கலந்து பேசவும், தொடர்பு கொள்ளவும் இதுவே வழிசமைத்தது எனலாம். மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். உதாரணமாக, காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது ஆகும். நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிப்பது ஆகும். அங்கு மூன்று சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன. உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கிறது. அதில் சிறு சிறு நரம்புகள் ஒன்றாக இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடைகின்றன. ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த திரை மிருதங்கம் போல் மெலிதான தோலாகும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு மூளையைச் சென்றடையும். மூளை ஒரு அதிநவீன கணினி போல், இதை ஒலியின் உணர்வாக எமக்கு மாற்றி தருகிறது. அதாவது இது மின்சார ஒலிபெருக்கி [மைக்ரோஃபோன்] போல் தொழிற்படுகிறது எனலாம். 

 

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். உதாரணமாக காது கால்வாயை [ear canal] துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேலும் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் [காது, மூக்கு, தொண்டை / வாய்] ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உதாரணமாக செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதியான நடுச் செவியில் (Middle Ear) தான் நடுச்செவி குழாய் [Eustachian Tube or middle ear tube] உள்ளது. இது மூக்குக்கும் தொண்டைக்கும் நீண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் தடை அல்லது அடைப்பு, காதின் கேட்கும் திறனை பாதிக்கக் கூடியது. 

 

மனிதர்கள் மூப்படைய, செவிப்பறையும் ['eardrum' காது நடுச் சுவர்] தடிப்பாகவும் மற்றும் அதிர்வது கடினமாகவும் மாறுகிறது. நடுச்செவியின் உள்ளே உள்ள எலும்புகளும் ஒன்றுக்கொன்று இணைந்து [get fused]  தன்பாட்டில் அதிராமல் [vibrate] விடலாம். இதனால், உட்செவியின் நரம்பு தொகுதி [inner ear nervous system] சரியாக தொழிற் படாமல் போகலாம். அது மட்டும் அல்ல வேறு செயலிழப்புகளும் [malfunction] ஏற்படலாம்.

 

காது கேளாமைக்கு ஒரு மாற்று வழியாக கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] இன்று பயன் படுத்தப் படுகின்றன. இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். கேட்கும் திறனை மேம்படுத்துவதற்காக இக்கருவி மூன்று கட்டங்களினூடாக அல்லது பகுதிகளினூடாக ஒலியினை  பெருக்குகிறது. காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி [microphone ] ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக  மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது [amplifier] அதிகரிக்கச்செய்கிறது. அதன் பின் ஒலிபெருக்கி [speaker] ஒன்று காதுக்குள் பெருக்கப்பட்ட ஒலியை [amplified sound] ஏற்படுத்துகிறது. இவ்வாறு காது குறைபாட்டை செவிப்புலன் உதவி சாதனம் நிவர்த்தி செய்கிறது.

காது கேளாத்தன்மையில் , கடத்தல் வகை கேளாமை, உணர்தல் வகை கேளாமை, கலப்புக் கடத்தல்வகை கேளாமை, நரம்புக் கோளாறுகளால் கேளாமை எனப் பலவகை குறைபாடுகள் உள்ளன.

 

அவற்றுள், காக்லியாவில் உள்ள மயிரிழை செல்கள் பாதிக்கப்பட்டால் உண்டாவது, உணர்தல் வகை கேளாமையாகும்.  முற்றிலும் எதையுமே கேட்க முடியாமல் இருப்பது போன்ற நிலைகள் இதனால் உருவாகின்றன. இதுவொரு நிரந்தரமான குறைபாடாகும்.இதற்கு கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] பயன் கொடுக்க மாட்டாது.

 

[மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம், மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]  

No comments:

Post a Comment