''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....''

 (Tamil Short Story)

போர் முடிவுக்கு வந்துவிட்டது.

 

ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது.

 

அந்நிய தேசத்தில் குண்டு மாரி பொழிந்தது போல் உள்நாட்டினுள் போரிட்டு பல்லுயிர்களை காவிச்சென்ற யுத்த விமானங்கள் ஓய்ந்துவிட்டன. பக்கம் திசை பாராது, பல்திசையும் விசில் கூவி வந்து வீழ்ந்து வெடித்து பல உடல்களை சிதறடித்த ஏறிகணைகளும் ஓய்ந்துவிட்டன.

 

ஆனால் பார்வதியம்மாள்......

 

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவள் ஒருமுறை தன் வீட்டினை நிமிர்ந்து பார்த்தாள் .துக்கம் அவள் தொண்டையினை அடைக்க விம்மியவாறே, பழைய நினைவுகளை மீட்டவண்ணம்   அந்த வீட்டினை ஒருமுறை சுற்றி வந்தாள் பார்வதியம்மாள்.

 

பார்வதியம்மாளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தில் எறிகணை வீச்சில் வீட்டினையும், கணவனையும் இழந்த பார்வதியம்மாள் , தன் இரு பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வந்து சிறு குடிசையில் குடியேறினாள்.  அச்சமயம்  கனடாவில் இருக்கும் தனது தம்பியின் உதவியினால் மூத்தமகளை குவைத்  நாட்டிற்கு அனுப்பி வைத்தாள் பார்வதியம்மா.

 

''அம்மா! எமது குடும்ப நிலையால் என் படிப்பினை தொடர முடியவில்லை. தங்கச்சியாவது படிக்க வேணும். அவள்  படிப்புக்கும் ,திருமணத்திற்கும் என்னால் இயன்றவரையில் உழைப்பேனாம்மா, கவலைப்படாதே அம்மா.''என்று அவள் மகளின் கடிதத்தின் வரிகள் பலமுறை படித்து அவள் கண்ணீர் விட்டிருக்கிறாள். தன்னுடைய கல்வி, கல்யாணம் என்ற குறிக்கோள்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு ஆண்மகன் போல் உழைக்கும் தன் மகளை நினைத்து எத்தனைநாள் நித்திரையிலாது புலம்பியிருக்கிறாள்.

 

''நாங்கள் வாழுறதுக்கு ஒரு வீடு வேணுந்தானே அம்மா'' என்று அவளின்  ஆசைப்படிதானே இந்த சின்னஞ்சிறிய மாளிகையினை கட்டி நானும் இளையவளும் வாழ்ந்து வந்தோம்.

 

1990 (ஆகஸ்ட்-பெப்ருவரி)இல் நடந்த வளைகுடாப் போரினுள்  குவைத்தும் சிக்குப்பட, அன்றிலிருந்து மூத்தவளின் தொடர்புகளும் அற்றுப்போய்விட்டது பார்வதியம்மாளின் நெஞ்சில் மேலும் இடி வீழ்ந்தது  போலானது. மகள் வருவாள், வருவாள், அவள் கடிதமாவது வரும் என்று ஏங்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தவளுக்கு இத்தனை வருடங்கள் கழிந்தும், ஏமாற்றம் தான் எஞ்சியது.


''அக்கா வந்தபின் நாங்கள் இந்த வீட்டில மூன்று பேரும் சந்தோசமாய் இருப்போமம்மா'' என்று இளையவள் ஆசையோடு கூறுவாளே'' கடைசியில அவளும்....

 

2009 இல் புலிகளுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலின் காலத்தில்  ஒருநாள்,

 

''அம்மா ,கவலைப்படாமல் இருங்கோ.  ஆமிக்காரர் கிளிநொச்சிப் பக்கம் வந்துகொண்டிருக்கிறான்கள். பெட்டையள்  முல்லைத்தீவு பக்கமாக சென்றுகொண்டிருக்கினம். அவர்களுக்கு உதவியாக  நானும் போகிறேன். மோசமாய் அடிக்கிறாங்களாம். புலியள்  முல்லைத்தீவு பக்கம் நகர்ந்ததாலஎங்கட சுனாவில் பக்கம் ஆமி வரமாட்டான்கள். என்னைத்தேடி வீட்டைவிட்டு வெளிக்கிடாதயனை.   நிலைமை வழமைக்கு திரும்பியபின்  மீண்டும் வருவேன் அம்மா .பயப்படாதை அம்மா '' என்ற குறிப்புத் தாளினை படித்தபோது மயங்கியே வீழ்ந்துவிட்டாள்  பார்வதியம்மா.

 

போன இளையவளும் போனவள் தான். திரும்பி வரவேயில்லை.

 

வீதியில் நாய்கள்  குரைக்கும் சத்தம் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டவள் , வழக்கம் போல் வீதியினை நோக்கி ஓடிச் சென்றாள். வீதியின் தொங்கல் வரையில்  அவளின்   கண்கள் ஆவலுடன்  வேகமாக சுழன்றது.. இருவரில்  ஒரு மகளாவது தன் கண்ணில் தென்பட மாட்டார்களா என்ற ஏக்கத்தின் மத்தியில்  அவளின் தாய்ப்பாசத்திற்கு மீண்டும்  ஏமாற்றமே கிடைத்தது.

 

இருந்தாலும் தாயல்லவா அவள்.அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. வீதியில் வருவோர் போவோரிடம் வழக்கம்போல்  ''என்ர குஞ்சுகளைக்  கண்டால் சொல்லுங்கோ.... இந்தத்  தாய்  என்ர குஞ்சுகளுக்காக இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறன் எண்டு". இப்போதெல்லாம் இதைத் தவிர வேறொரு வார்த்தையும்  அவள் வாயிலிருந்து வெளிவருவதில்லை.

 

அவளின் துயரமும் புலம்பலும் வேற்று மனிதர்களுக்கு பைத்தியமாகத் தெரியலாம். ஆனால் இன்றும்  இப்படிப்  பல பார்வதியம்மாக்களின் நெஞ்சங்கள்குண்டுகளாகவும், எறிகணைகளாகவும் வெடித்துக் கொண்டு தான்   கொண்டுதான் இருக்கின்றன.

 

.................................போர் இன்னும் ஓயவில்லை!

 

ஆக்கம்:செ.மனுவேந்தன்





No comments:

Post a Comment