சித்தர் சிவவாக்கியம் -331
வழுத்திடான்
அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான்
வெகுண்டிடான் கால கால காலமும்
துவண்டிடான்
அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான்
உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே.
ஈசனை வழுத்தி நின்றே ஆன்மா உடலுக்குள் உறைகின்றது. ஆதலால் அது அழியாதது. மாய
ரூபம் ஆகி நமக்குள் அது நின்றது. உடலை விட்டு கழன்றிடாது இருப்பது. பொறாமை
கொள்ளாது வெகுளியாய் இருப்பது. காலா காலமும் சாகாக்காலாகவும் போகாப்புனலாகவும்
வேகாத்தலை யாகவும் நித்தியமாக உள்ளது. எந்நிலையிலும் துவண்டிடாது ஒரே நிலையில்
இருப்பது. அசையாத தூய தீபமாக நின்றது. ஒரே அளவில் அனைத்திலும் சுவன்றிடாது
இருப்பது. அது வெளியாக உரைக்கப்படாதது. அது இரகசியமாக மிகவும் சூட்சுமமாக உள்ள
சூட்சம் ஆன்மா.
சித்தர் சிவவாக்கியம் -333
கோடி
கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடி
நாடி நாடி நாடி நாலகன்று வீணதாய்
தேடி
தேடி தேடி தேடி தகமும் கசங்கியே
கூடி
கூடி கூடி கூடி நிற்பார் கோடி கோடியே.
உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதி என்றால் என்ன? அதனை அடைந்தால் இறவா வரம் பெறலாம் என்பதை உணர்ந்து அதனை நாடி பூஜைகள் செய்து நாட்கள் கழிந்து வீணாகியதேயன்றி, ஆதியை அறியாமலேயே உள்ளார்கள். பலர் பல வழிகளிலும் பற்பல காடு மலை கோயில் என்று தேடி அலைந்தும் அவர்கள் தேகம் மெலிந்து வாடியதே யன்றி ஆதியை அறிந்தாரில்லை. அந்த ஆதியான மெய்ப்பொருள் தன்னிடம் உள்ளதை உணராமல் தனக்குள்ளேயே நாடி தேடாமல் கூடிக் கூடி ஏங்கி நிற்பவர்கள் எண்ணற்ற கோடியே.
சித்தர் சிவவாக்கியம் - 335
வாதி
வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி
ஊதி ஊதி ஊதி ஒளி மழுங்கி உளறுவான்
வீதி
வீதி வீதி வீதி விடை ஏறுப் பொறுக்குவோன்
சாதி
சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான்.
வாத வித்தை செய்யும் வாதிகள் அமுரியான
வழலையிலிருந்து காய்ச்சி எடுக்கும் வண்டலாகிய உப்பையும் அதை முப்பு ஆக்குவதையும்
முறையாக அறியமாட்டார்கள். வாதம் செய்கின்றேன் என்று செம்பை பொன்னாக்க முயற்சித்து
உலையில் வைத்து ஊதி ஊதி தனக்குள் உள்ள ஒளி மழுங்கி ஏதேதோ உளறுவார்கள். வீதி
வீதியாக சென்று புடம் போடுவார்கள். இப்படி பல வகைகளிலும் முயற்சித்து பத்து மாற்று
தங்கம் செய்ய ஆசைப்பட்டு உழன்றும் அதனை காண முடியாது நெஞ்சம் புண்ணாகி மாள்வார்கள்.
சொக்கத் தங்கமாக தனக்குள் விளங்கும் சோதியை உணர்ந்து வாசியோகம் செய்து கற்பம்
உண்டு முப்பு முடித்த ஞானிகளே இந்த வாத வித்தையை செய்ய வல்லவர்கள்.
கே எம் தர்மா AND
KRISHNAMOORTHY
No comments:
Post a Comment