சித்தர் சிந்திய முத்துகள்...............3/44

 


சித்தர் சிவவாக்கியம் -321

உதித்த மந்திரத்திலும் ஒடுங்கும் அக்கரத்தினும்

மதித்த மண்டலத்திலும் மறைந்து நின்ற சோதி நீ

மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின்

சிரித்த மண்டலத்துளே சிறந்ததே சிவாயமே.   

 

அஞ்செழுத்து மந்திரத்தால் உதித்த உடம்பினுள் ஒரேழுத்தாகி ஒடுங்கி யாவரும் மதிக்கும் இடமாகிய சூரிய மண்டலத்தில் மறைந்து நின்று இருக்கும் சோதியே ஈசனாகிய நீ. அந்த மதித்த மண்டலமாகிய சூரியனுக்குள்ளேயே அறிவு, உணர்வு, மனம் ஆகிய மூன்றையும் இணைத்து ஒடுக்கி செத்தாரைப் போல் ஒன்றி தியானத்தில் இருந்தால், சிற்றம்பலம் ஆகிய சிகாரமான அக்னி மண்டலத்தில் உள்ளே சோதியாக விளங்கி சிறந்திருந்த அது சிவம் என்பதைக் கண்டு தெளிந்து சேருங்கள்.

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் -322

திருத்தி வைத்த சர்குருவைச் சீர் பெற வணங்கிலீர்

குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரே

குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும்

பருத்தி பட்ட பாடித்தான் பன்னிரெண்டும் பட்டதே.

 

எங்கெல்லாமோ அலைந்தும் திரிந்தும் ஆசைக்கடலில் வீழ்ந்தும் பழி பாவங்களுக்கும் ஆளாகியும் இருந்த இப்பிறவியை திருத்தி அறிவை அறிய வைத்து உண்மையை உணர வைத்து இறை சொரூபத்தை நமக்குள் காட்டிய சற்குருவை சீர் பெற வணங்குங்கள். அவ்வாறு உண்மை குரு உபதேசிக்கும் மெய்ஞானத்தை உணர்ந்து யோக தியானம் செய்து இப்பிறவிக் கடலை நீந்தி கடந்து இறைவனடி சேர வாருங்கள். குரு கற்றுக் கொடுத்த வண்ணம் சாதகம் செய்து பித்தராகிய சிவனை தனக்குள் குருவாக உள்ளதை அறிந்து சீவனையும் சிவனையும் ஒன்றிணைத்து தியானியுங்கள். பருத்தி பஞ்சானது பலபாடுகள்பட்டு ஆடை ஆவது போல ஒவ்வொரு அனுபவங்களையும் கடந்து மெய்நிலை அடைந்து ஈசனைச் சேருங்கள்.  

 

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -323

விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும்

மேருவும் கடந்த ஆண்ட கோலமுங் கடந்து போய்

எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே

யானும் நீயுமே கலந்த தென்ன தன்மை ஈசனே.

 

தியானத்தில் இருந்து விழித்த கண்கள் உன்னையே துதித்திருந்தது. அங்கே விந்துவாகிய ஒளியும் நாதமாகிய ஒலியும் கலந்து நின்று பிரணவ ஓசை கேட்டது. மனம் மேரு எனும் சகஸ்ரார தளத்தையும் கடந்து அண்டங்கள் கோளங்கள் என யாவையும் கடந்து போய் மோனமாகிய எழுத்தெல்லாம் அழிந்துவிட்ட இந்திர ஞால வெளியிலே ஒன்றுமில்லாத எல்லாம் உள்ளடக்கிய ஆகாயத்தலத்தில் ஞானத்தால் சூட்சமத்தால் யானும் நீயும் கலந்து இருந்த தன்மையை என்னவென்று எடுத்துரைப்பது ஈசனே!!    

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 325

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதாய்

நன்புலன்களாகி நின்ற நாதருக்கது ஏறுமே

ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்

வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே.   .

 

ஐம்புலன்களையும் வென்று தியான தவத்தில் இருக்கும் யோகிகளுக்கும் தவசிகளுக்கும் அவர்கள் இருக்கும் இடம் தேடிக் கண்டு அன்னதானம் செய்து தர்மம் கொடுப்பதுவே சிறந்தது. அது நற்புண்ணியமாக அவர்களுக்குள்ளே நின்ற நாதனாகிய ஈசனைச் சேரும். அது நமக்கும் புண்ணிய பலனைக் கொடுக்கும். அதைவிடுத்து ஐம்புலன்களை அடக்கத் தெரியாத காவி வேடம் பூண்டு பிச்சையெடுத்து ஏமாற்றித் திரியும் வம்பர்களுக்கு யோகி, ஞானி என எண்ணி அவர்களுக்கு தர்மம் செய்வதும் தானம் கொடுப்பதும் வீணான பாவமே.

*****அன்புடன் கே எம் தர்மா & KRISHNAMOORTHY

No comments:

Post a Comment