சித்தர் சிந்திய முத்துகள் .....................3/43

 


சித்தர் சிவவாக்கியம் -308

தத்துவங்கள் என்று நீர் தமைக்கடிந்து போவீர்காள்

தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ

முத்தி சீவனாதமே மூல பாதம் வைத்த பின்

அத்தநாறும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 

 

இறை உயிர் உடற் தத்துவங்களை அறியாமல் தன்னையும் உணராமல் தம்மையே கடிந்து நொந்து போவீர்கள். தத்துவங்கள் சிவம் அதுவானால் தற்பரம் ஆனது நீங்களல்லவோ! இந்த உண்மையை உணர்ந்து நீயே அதுவானால் முக்தி என்பது சிவனாகிய உயிரிலும் நாதமான உடம்பிலும் உள்ள மூலபாதமாக வைத்த சோதியில் சேர கிட்டும். எல்லா உயிர்களுக்கும் அம்மையப்பனாய் விளங்கும் ஈசன் உனக்குள்ளே இருப்பதை அறிந்துணர்ந்து அவனையே சிக்கெனப் பிடித்து யோக ஞான தவம் செய்து இறைவனைச் சேருங்கள்.

 

 

சித்தர் சிவவாக்கியம் -312

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய்

செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வப்பு நான்குமாய்

ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை

சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே.

இவ்வுடம்பில் அஞ்செழுத்தாக ஈசன் பஞ்ச பூதங்களாய் ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று மூச்சாக வெளிச்சுவாசம் உட்சுவாசம் என்று இரண்டு வகையாகவும், நெருப்பு அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்ற மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என்ற நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என்ற ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக பரவி அமர்ந்திருந்த நாதனை சிந்தையில் நினைந்து மாயை தெளிந்து ஞானம் நிரந்து தியான தவம் புரிந்து காண வல்லவர்கள் யார்?  

 

 

சித்தர் சிவவாக்கியம் -316

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்

சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றில் என்

புறம்புமுள்ளும் எங்கணும் பொறுந்திருந்த தேகமாய்

நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. 

 

உறங்கினாலும் விழித்தாலும் உணர்வு சென்று அறிவில் ஒடுங்கி இருந்தாலும் சிறந்த ஐம்புலன்களையும் அடக்கி எல்லாத் திசைகளும் ஒன்றென ஒன்றி இருந்தாலும் புறத்திலும் உள்ளிலும் பார்க்கும் இடம் எங்கணும் ஒரே மெய்ப்பொருளாக பொருந்தி இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் தேகத்திலே அம்மெய்ப்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே. அதுவே சிவம் என நினைந்து தியானியுங்கள்.

 

***********கே.எம்.தர்மா&கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment