முதியோருடன் ஒரு அலசல்:/ பகுதி 02

மனித பார்வை [Human vision] 


உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது. பார்வைக் குறைபாடுகள் (Visual impairment) தொடங்கும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் [diabetes] இருப்பவர்கள் கட்டாயம் ஒரு ஒழுங்காக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.  

 

பார்வைக் குறைபாடுகளில் (Visual impairment) பொதுவானதும் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சினைகளை பற்றி இனி ஆராய உள்ளோம். அவைகளில் முதன்மையானவை

 

1] வெள்ளெழுத்து அல்லது  கிட்ட பார்வைக் குறைவு [Presbyopia],

2] கண் அழுத்த நோய் (Glaucoma),

3] வறண்ட கண்கள் [dry eyes],

4] வயதுசார் விழித்திரை தேய்மானம் அல்லது சிதைவு [age related macular degeneration],

5] கண்புரை [cataract], &

6] தற்காலிக தமனி அழற்சி [ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ்  / temporal arteritis or Giant cell arteritis] ஆகும்.

 

முதியோர்களின் கண் பார்வையை பாதிக்கும் இவைகளின் தாக்கங்களை சுருக்கமாக பார்ப்போம்

 

1] வயதுசார் விழித்திரை தேய்மானம் [age related macular degeneration] -- மங்கலான பார்வை, விம்பத்திரிவு [image distortion], விழித்திரையின் நடுவிலுள்ள குருட்டுத்தன்மை [central scotoma].

 

2] கண் அழுத்த நோய் [Glaucoma] -- பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இதனால், சிறிது சிறிதாக  கண்பார்வை குறைவு ஏற்படுகிறது

 

3] கண்புரை [cataract] --  நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம். மங்கலான பார்வை, கண் பிரதிபலிப்பு அல்லது கூசுதல் [glare],  ஒரு கண்ணில் மட்டும்  ஏற்படும் இரட்டை பார்வை அல்லது இரட்டை நோக்கு குறைபாடு [monocular diplopia] ஆகும்

 

[டிப்ளோபியா [diplopia] நோயாளி என்பது, அவர் அருகில் உள்ள பொருள் இரண்டு உருவங்களாக தோன்றும் ஒரு காட்சி குறைபாடு ஆகும். இது இரண்டு வகையாகும். அதில் ஒன்றுதான் ஒரு கண்ணில் மட்டும்  ஏற்படும் இரட்டை பார்வை குறைபாடு ஆகும்]

 

4] நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறு [diabetic retinopathy] -- மங்கலான பார்வை, வீரியமான ஒளிபுகாநிலைகள் [கண் மிதவைகள் / floaters], காட்சி புலம் இழப்பு அல்லது குறைபாடு [உங்கள் காட்சி புலத்தில், ஒரு பகுதியை இழத்தல், உதாரணமாக பக்கப்பார்வையிழப்பு / Visual field loss is when you have lost an area of vision in your visual field], மோசமான இரவு பார்வை.

 

[உங்கள் கண்களில் மிகவும் சிறிய புள்ளி போன்ற மிதவைகள் (Floaters), கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும். சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். இதனால் உங்கள் பார்வை பாதிக்கப்படும். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம்]

 

 

கண் தனக்கு வேண்டிய பிராணவாயுவை [ஆக்ஸிஜன் / oxygen] கண்ணில் உள்ள நீர் கலந்த திரவத்தின் [aqueous] மூலம் பெறுகிறது. மேலும் கண்ணின் கருவிழிக்கும், வில்லைக்கும் மற்றும் விழித்திரைப்படலத்துக்கும் [கதிராளி; கருவிழித்திரை] உணவூட்டுதல், [கார்னியா, லென்ஸ் மற்றும் ஐரிஸ்], வில்லையினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை அகற்றுதல், உள்விழி அழுத்தத்தை [intraocular pressure] கட்டுப்படுத்துதல் அல்லது சீர்செயிதல்,

நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கண்ணின் வடிவத்தை பராமரித்தல் போன்றவை இவைகளின் வேலைகளாகும்.

 

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், மூளையில் இருக்கும் பகுதிகளில் கண் ஒன்றே, நேரடியாக பார்க்கக் கூடியது. உதாரணமாக, கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, 'டைலடேஷன்' [Dilatation] எனப்படும் விரிவாக்கம் செய்து,  ஒரு கண்அகநோக்கி [ஆப்தல்மஸ்கோப் / ophthalmoscope] மூலம் நேரடியாக  கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக கண் மருத்துவரால் பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை இப்படித்தான் கண் பரிசோதனை செய்து அறிகிறார்கள்.

 

நீங்கள் பூமியை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு மைலுக்கும் எட்டு அங்குலம் வளைகிறது. எனவே உங்கள் கண், தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது என்று வைத்தால், நீங்கள் பார்க்க கூடிய ஆக்க கூடுதலான தொலைதூர பூமியின் விளிம்பு மூன்று மைலாகும்.

 

எமது கண்ணில் உள்ள வில்லை ஒரு குவி வில்லையாகும் [convex lens]. இது நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும். மனிதர்கள் பலதரப்பட்ட பொருட்களை, நிறங்களை பார்க்கும் இயல்பு உள்ளவர்கள். கட்புலனாகும் நிறமாலை [visible spectrum] என்பது, மின்காந்த நிறமாலையில் [electromagnetic spectrum] உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும். இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic radiation] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" [visible light or simply light] எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண், வளியில் 380 தொடக்கம் 780 நானோமீட்டர் [nanometres / 0.000000001 m] அலைநீளம் கொண்ட கதிர்வீச்சுக்களைப் பார்க்கக் கூடியது. ஆகவே ஒரு பொருளில் இருந்து இந்த அலை நீளத்தில் வெளியிடப்படும் ஒளி, எங்கள் கண்ணில் நுழைந்து, கண் வில்லையினூடாக கடந்து, எங்கள் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் விழும் பொழுது, நாம் பொருட்களை காண்கிறோம் எனலாம். 

 

ஆகவே விழித்திரையில் பொருட்களின் விம்பம் முதலில் சரியாக விழவேண்டும். அப்ப தான் பொருட்கள் எமக்கு தெரியும். எனவே தான்,  கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பொதுவாக கண்ணாடி அணிகிறோம். உதாரணமாக, கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி வில்லை (கான்கேவ் லென்ஸை / concave lens) இதற்கு பயன்படுத்தப் படுகிறது. அதே போல, தூரப் பார்வை எனும் குறைபாட்டில், விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி வில்லை (கான்வெக்ஸ் லென்ஸ் / convex lens) அணிய வேண்டும்.

 

மனிதன் பெறத்தக்க அறிவுகளுள் ஒன்று கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதை  தொல்காப்பியர், தனது நூற்பாவில்,

 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”

 

 

என்று 'நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே' என குறிப்பிடுகின்றார். அதே போல,  மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதை திருவள்ளுவர், கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர் என

 

கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்”

(திருக்குறள்  393)

 

என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலனை “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது.

 

வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி

கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே

மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்”

(சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76)

 

அதேபோல, தாலாட்டு பாடல் ஒன்று

 

கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என்

கானகத்து வண்டுறங்கு”

 

என கூறுகிறது. இப்படி பெருமை பெற்ற கண்ணை, அறிவின் நுழைவாயில் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். ஆகவே, உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள் ஆகையால், அதை முழுமையாக அறிந்து பாது காப்பது மிக மிக அவசியம். 

 

[மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம், மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]   

No comments:

Post a Comment