பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை


















👈பிரான்சு (France)👉

பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும்.

 

இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும்.

 

உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு.

 

உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது.

 

 பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

 

பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது.

நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடற் காலநிலை நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய பெருங்கடற் காலநிலை காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட கண்டக் காலநிலை உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும்.

பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர்.

 

தமிழ்ப் பின்புலம் உடைய பிரான்ஸ் வாழ் மக்களை பிரான்சியத் தமிழர் அல்லது பிரெஞ்சுத் தமிழர் எனலாம். பிரான்சில் 80,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

 

இந்நாட்டில் உல்லாசப்பிரயாணிகளை கவர்ந்த இடங்களாக (Eiffel Tower, Louvre Museum, Palace of Versailles, Mont Saint-Michel, Côte d'Azur, Loire Valley Châteaux, Cathédrale Notre-Dame de Chartres,  Brittany,  Provence, Chamonix-Mont-Blanc, Alsace Villages, Carcassonne, Biarritz, Rocamadour, Prehistoric Cave Paintings in Lascaux) ஈபிள் கோபுரம், லோவுர் அருங்காட்சியகம், வெர்சாய்ஸ் அரண்மனை, மாண்ட் செயிண்ட்-மைக்கேல், கோட் டி அஸூர், லோயர் வேலி சாட்டாக்ஸ்,கதீட்ரல் நோட்ரே-டேம் டி சார்ட்ரெஸ், பிரிட்டானி, புரோவென்ஸ், சாமோனிக்ஸ்-மாண்ட்-பிளாங்க், அல்சேஸ் கிராமங்கள், கார்கசோன், பியாரிட்ஸ், ரோகாமடோர், லாஸ்காக்ஸில் வரலாற்றுக்கு முந்திய குகை ஓவியங்கள் எனப்பல காட்சியளிக்கின்றன.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


தமிழரும், குலதெய்வங்களும்

 

தமிழ் மக்கள் குலதெய்வங்களை விரும்புவது ஏன்?

 


ஆரிய முற்றுகைக்கு முன்பிருந்தே, இந்து வெளி நாகரிக காலம் தொடங்கி தமிழ் மக்கள் தங்களுக்கென்று சொந்தமான பலவிதமான தெய்வங்களைத் தங்கள், தங்கள் இரசனைகளுக்குத் தகுந்தால்போல் உருவம் கொடுத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த தெய்வங்களின் வடிவங்களும், நோக்கங்களும் காலத்திற்கேற்ப மாற்றம் அடைத்துக்கொண்டு வந்திருக்கின்றன.

 

 காலம், காலமாக, தமிழர், முக்கியமாக கிராம வாசிகள், அவரவர் ஊருக்குத் தேவையான குலதெய்வம் என்றும், காவல் தெய்வம் என்றும் வடிவமைத்து, ஊரில் உள்ளோர் எல்லோரும் ஒன்று சேர்ந்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்வர்.

 

முருகன் என்றால் தமிழ் கடவுள் என்றும், அய்யனார் ஊர் காவல் தெய்வம் என்றும், மாரியம்மன் கொடிய நோய்களை தடுப்பவர் என்றும், கருப்புசாமி தேவர்களுக்கே காவலன் என்றும் போற்றி வழிபடுவர். மேலும், முனீஸ்வரன், இடும்பன், கண்ணகி, சுடலை மாடன் என்று எல்லாம் ஊர்களுக்கான சிறுதெய்வங்களில் ஒரு சிலவே.

 

இவற்றைவிட பெருதெய்வங்களும், அவற்றைச் சார்ந்தவைகளான சிவன், விஷ்ணு, பராசக்தி, மீனாட்சி, அம்மன் போன்ற கடவுள்களும் கிராமம், நகரம் எங்கும் வழிபடப் படுகின்றனர்..

 

இந்தக் கடவுள்மார்களின் உருவம், முகம் , தோற்றம் எல்லாம் தமிழர்களின் சாயலில் ஆக்கப்பட்டிருந்ததனால்தான் அவர்கள் எல்லாம் 'நம்ம கடவுள்' என்ற ஒரு ஆத்மாத்தமான உணர்வு ஏற்பட்டது.

 

ஆண் தெய்வங்களுக்கு ஒரு வேட்டி கட்டி, தேவையாயின் ஒரு கொடுக்குக் கட்டி, குடுமி வைத்து, மேலுடை இன்றி, ஒரு முறுக்கு மீசையையும் வைத்து, திருநீற்றுக் குறியுடன், சந்தணப் பொட்டினையும் வைத்துச்  சிலை அமைத்து விட்டால், கிராமத்தில் ஆலமரத்தின் கீழ் இருந்து தீர்ப்பு சொல்லும் நம்ம நாட்டாண்மை போலவே அவர்களுக்குத் தென்பட்டு மரியாதை ஏற்படும்.

 

பெண் தெய்வங்களுக்கு, மிகவும் அழகிய சேலை உடுத்து, கண் கவரும் மேலாடைகள் அணிந்து, பெண்கள் விரும்பும் அனைத்து நகைகளையும் உடம்பெல்லாம் சாத்தி, 'இலக்சுமிகரமான' ஒரு தோற்றத்தில் சிலை அமைத்தால் எவருக்கும் பார்த்தால் கை எடுத்துக் கும்பிடவே தோன்றும்.

 

அத்தோடு, நம்மை நம் தெய்வங்கள் எந்த எதிரிகளில் இருந்தும், என்ன கஷடங்களில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பதற்காக, தெய்வங்களின் கைகளில் ஆயுதங்களையும் கொடுத்து வைத்துள்ளதால், இத்தெய்வங்களை வணங்கினால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று மனோதத்துவ ரீதியாக திருப்திப்படுகிறார்கள்.

 

(வேற்று மதக் கடவுள்கள் தங்களைக் காப்பாற்றச் சொல்லி, தங்களை வணக்காதவர்களை கொன்றொழிக்குமாறு மக்களை ஆயுதம் ஏந்தக் கூறியுள்ளார்கள் என்பதைக் கவனிக்கவும்)

 

அத்தோடு, தமிழ் மக்கள் கடவுளுக்குப் பலம் கூட்டுவதாக எண்ணி பல தலைகள், பலகைகளையும் கொடுத்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

போதாதற்கு, எங்கள்  கடவுள்மார் செய்த அற்புதங்கள், திருவிளையாடல்கள் எல்லாம் நமக்கு தெரிந்த, போய்வந்த, புகழ் பெற்ற  'நம்ம' ஊர்களில் நடைபெற்று இருப்பதை அறியும்போது நம்ம கடவுள், நம்முடனேயே, நமது  பக்கத்திலேயே எப்பொழுதும் இருக்கிறார், அருள் புரிகிறார்  என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்படுகிறது.

 

ஆதலால், இவர்கள் புறச் சமயங்களில் இலகுவில் நாட்டம்  செலுத்த முடியவில்லை.

 

5-6 ஆயிரம் தூரத்தில் உள்ள எங்கோ ஒரு சில ஊர்களில், ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாகக் கூறப்பட்ட ஒரு சிலரைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்ல, உலகம் என்றாலே அங்குள்ள ஒரு நதியைச் சுற்றியுள்ள சில ஊர்களை மட்டும்தான் கொண்டது என்று விளங்கி வைத்திருந்த வேறு சிலரால், அந்த ஊர்களில் உள்ளவர்களுக்காகவே, அவர்களை பற்றி மட்டுமே எழுதப்பட்ட சில நூல்களை வைத்துக்கொண்டு, தமிழ் மக்களுக்கு வாய்க்குள் நுழையமுடியாத பெயர்களை உச்சரிக்கும்படி சொன்னால் எவருக்குத்தான் ஒரு பிடிப்பு வரும்?

 

மதம் மாறிய தமிழ் மக்களும் இருந்தார்கள். என்னமாதிரி, என்ன காரணங்களுக்காக அவர்கள் எல்லோரும் பிடிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

 

அவர்களுக்கு பூமியின் இந்தப் பகுதியில் தமிழ் மக்கள் இருந்தார்கள் என்பதே தெரியாது (இன்னமும்) தான்!.

 

அந்த புத்தகங்களில் இரண்டொரு தமிழ் பெயர்கள் பொன்னைய்யா, கந்தையா என்றும். தமிழ் ஊர்கள் திருவூர், மதுரை என்று வந்திருந்தால் என்றாலும் ஒரு பிடிப்பு வந்திருக்கும். அவர்களின் உருவமோ, உடைகளோ நம்மைப் போல ஒன்றும் இல்லாத போது எப்படித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு பற்று வரும்?

 

அதனால்தான் நம்மவர் நம்மளை ஒத்த கடவுள்களை நம்ம குலதெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர்.

 

புறச் சமயத்தவர்கள் ஒரே ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், ஒரே ஒரு தூதுவர் சொன்னதையே மதிக்கவேண்டும் என்றும் மிகவும் கண்டிப்பான கட்டளை இட்டு, தவறுவோருக்கு மரண தண்டனை வரை கொடுத்துவிடுவார்கள். அப்படி சொல்லப்பட்டுள்ளவை சரியோ, பிழையோ அல்லது, உண்மையோ, பொய்யோ அல்லது ஒத்துக்கொள்ளப்படக்கூடியவையோ அல்லது ஒதுக்கப்படவேண்டியவையோ என்று அறிவு பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்து விலகி இருக்க அனுமதி இல்லை. எது உண்மையான தூதுவர் என்ற பிரச்சனையின் நிமித்தம் சமயங்களுக்கிடையில் எதிர் வாதங்கள் எழுந்துகொண்டு இருக்கும்.

 

ஆனால், நம் சமயத்தில் எவரையும் வணங்கலாம், எப்படியும் வணங்கலாம் என்று பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

ஆனாலும், இந்தச் சுதந்திரம் மக்களைப் பிழையான வழிகளுக்கும் திரும்பத் தூண்டுகின்றது.

 

நினைத்தவர்கள் எல்லோருமே சுவாமிகளாகின்றனர்; கடவுளின் அவதாரம் என்று தங்களை அறிவித்துக் கொள்ளுகிறார்கள். பலவிதமான வேறு, வேறு பெயர்களோடு மனித சுவாமிகள் புதிது, புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.  இவர்கள் தெய்வ விரோதக் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பல முட்டாள் கூட்டத்தினரைத் தம் வயப்படுத்தி, நமப வைத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

ஆதலால்தான் சொல்கிறேன், சைவ சமயம் நம்பிக்கையுள்ள ஒன்றாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் குலதெய்வங்களோடு நிறுத்தவேண்டும், பெரும் தெய்வங்களை மதிக்கவேண்டும். மேலும், மேலும் புதிய கடவுள்கள் அவசியமில்லை. ஏற்கனவே உள்ள தெய்வங்கள் போதும்.

 

புசித்து மலம்கழிக்கும்  பாவப்பட்ட மனித தெய்வங்கள் ஒன்றும் அறவே தேவை இல்லை.

எழுத்து:செல்வதுரை சந்திரகாசன்

சித்தர் சிந்திய முத்துகள் .....................3/43

 


சித்தர் சிவவாக்கியம் -308

தத்துவங்கள் என்று நீர் தமைக்கடிந்து போவீர்காள்

தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ

முத்தி சீவனாதமே மூல பாதம் வைத்த பின்

அத்தநாறும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 

 

இறை உயிர் உடற் தத்துவங்களை அறியாமல் தன்னையும் உணராமல் தம்மையே கடிந்து நொந்து போவீர்கள். தத்துவங்கள் சிவம் அதுவானால் தற்பரம் ஆனது நீங்களல்லவோ! இந்த உண்மையை உணர்ந்து நீயே அதுவானால் முக்தி என்பது சிவனாகிய உயிரிலும் நாதமான உடம்பிலும் உள்ள மூலபாதமாக வைத்த சோதியில் சேர கிட்டும். எல்லா உயிர்களுக்கும் அம்மையப்பனாய் விளங்கும் ஈசன் உனக்குள்ளே இருப்பதை அறிந்துணர்ந்து அவனையே சிக்கெனப் பிடித்து யோக ஞான தவம் செய்து இறைவனைச் சேருங்கள்.

 

 

சித்தர் சிவவாக்கியம் -312

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய்

செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வப்பு நான்குமாய்

ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை

சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே.

இவ்வுடம்பில் அஞ்செழுத்தாக ஈசன் பஞ்ச பூதங்களாய் ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று மூச்சாக வெளிச்சுவாசம் உட்சுவாசம் என்று இரண்டு வகையாகவும், நெருப்பு அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்ற மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என்ற நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என்ற ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக பரவி அமர்ந்திருந்த நாதனை சிந்தையில் நினைந்து மாயை தெளிந்து ஞானம் நிரந்து தியான தவம் புரிந்து காண வல்லவர்கள் யார்?  

 

 

சித்தர் சிவவாக்கியம் -316

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்

சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றில் என்

புறம்புமுள்ளும் எங்கணும் பொறுந்திருந்த தேகமாய்

நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. 

 

உறங்கினாலும் விழித்தாலும் உணர்வு சென்று அறிவில் ஒடுங்கி இருந்தாலும் சிறந்த ஐம்புலன்களையும் அடக்கி எல்லாத் திசைகளும் ஒன்றென ஒன்றி இருந்தாலும் புறத்திலும் உள்ளிலும் பார்க்கும் இடம் எங்கணும் ஒரே மெய்ப்பொருளாக பொருந்தி இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் தேகத்திலே அம்மெய்ப்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே. அதுவே சிவம் என நினைந்து தியானியுங்கள்.

 

***********கே.எம்.தர்மா&கிருஷ்ணமூர்த்தி

"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"

 mm


"சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா

சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி

சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி

சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!"

  

"சோர்வாக இருக்கே என்று பின்போடாமல்

சோதனை வருகுதென மனம் தளராமல்

சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை

சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!"

  

"கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா

கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது

கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது

கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!"

  

"உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும்

உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும்

உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும்

உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!"

 

"போகும் பாதையை தெளிவாக அறிந்து

போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல்

போவார் வருவார் சொற்களை கேட்காமல்

போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!"

 

"வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள்

வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல்

வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது

வெளிச்சம் காட்டி உன்னை கூப்பிடாது!"

 

"நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள்

நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள்

நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது

நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!"

 

"சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும்

சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை

சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும்

சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!"

 

"எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி

எங்கு விடாமுயற்சியோ  அங்கு வளர்ச்சி

எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி

எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!"

  

"திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால்

தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும்

திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது

திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!"

  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

[1] Don’t make excuses, make improvements

2] Don’t stop when you’re tired, stop when you’re done

3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people

4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise

5] Don’t get side-tracked by people who are not on track

6]Behind every successful person are a lot of unsuccessful years

7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it

8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs

9]Just because you are struggling does not mean you are failing

10] The hardest thing to open is a closed mind]