"என் இறுதி சடங்கில் என்னை
எரிவனம் எடுத்து
சென்று எரிக்க
என் நேரடி
தொடர்பை அறுக்க
எல்லோரும் கூடி
கதைப்பது கேட்குது"
"ஓய்வு எடுக்க பெட்டியில்
வைத்து
ஒளி தீபங்கள்
சுற்றி வைத்து
ஒதுங்கி இருந்து
தமக்குள் கதைத்து
ஒழுங்கு
படுத்துவது எனக்கு தெரிகிறது"
"சிறந்த ஆடைகளை தேர்ந்து
அணிவித்து
சிறப்பான அலங்கார
பாடை தருவித்து
சிறார்கள் கையில்
பந்தம் கொடுத்து
சிரிப்பு இழந்து
தவிப்பதை பார்க்கிறேன்"
"நரம்பு நாடி தளர்ந்து
போகையில்
நம்மைநாடி நோய்
வந்து சேர்கையில்
நமக்கு
பிடித்தவர் இல்லாமல் போகையில்
நல்வரமாய் தான்
இறப்பு இருக்குது"
"மன்னனாய் பிறந்தாயென்று
கர்வம் கொள்ளாதே
மன்மத அழகனென்று
லீலைகள் செய்யாதே
மதுபோதையில் தவழ்ந்து
முட்டாளாய் வாழாதே
மரணத்தை நினைத்து
அஞ்சியும் சாகாதே"
"நான் தீயில் சங்கமிக்கும்
பொழுது
நாடகம்
ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது
நான் என்னை சற்று
பார்த்தேன்
நாமம் மறந்த
சடலமாக கண்டேன்"
"உறவினர் நண்பர்கள்
முகங்களைப் பார்த்தேன்
உவகை இழந்த சிலரை
கண்டேன்
உறக்கம் துறந்த
பிள்ளைகளை கண்டேன்
உரிமை காட்டிட
வந்தோரையும் கண்டேன்"
"உடம்பு கெட்டால்
உயிருக்கு மரியாதையில்லை
உயிர் பிரிந்தால்
உடம்புக்கு மரியாதையில்லை
உலகத்தை விட்டு
நான் போகும்தருவாயில்
உண்மையை நான்
இன்று அறிகிறேன்"
"காமம் தெளித்த உடலும்
படுத்திட்டு
காதல் தந்த மனதும் உறங்கிற்று
காதற்ற ஊசியும்
வர மறுக்குது
காலனின் வருகையால்
எல்லாம் தொலைந்திட்டு"
"என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன்
என் பெயரை மறக்க
வேண்டாம்
என் பெயர் எம்
அடையாளம்
எங்கள் இருப்பு
இனத்தின் வாழ்வு"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
இறுதிச் சடங்கின் இயல்பு நிலையினை, இறுதி காலம் உணர்த்தும் தெளிவினை .தத்துவம் தெளிக்கும் பங்கினை உள்ளடக்கி அருமையான தொகுப்பின் கவி வரிகள் நன்று ,
ReplyDelete