சித்தர் சிவவாக்கியம் -263
என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே.
என் அகத்தில் நான் ஆக இருந்த என்னை நான் அறியாத காரணத்தால் என் மனதிலேயே நான்
என்றாகி நின்ற ஈசனை எங்கெங்கோ சென்று நாடி ஓடித் தேடினேன். என் அகத்திலேயே நானாக
இருக்கும் ஈசனையும் நான் முழுமையாக அறிந்து உணர்ந்து தெரிந்து கொண்டதற்கு பின்
என்னுள்ளே நானாக நின்ற என் உயிரில் சிவமாகிய மெய்ப்பொருளே அனைத்துமாய் இருப்பதை
அன்றி வேறு யாதுமொன்றும் இல்லை என்பதை தெளிவாக அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 264
விண்ணின்று மின்னெழுந்து மின்னொடுங்குமாறு போல்
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யானறிந்து இல்லையே.
விண்ணில் நின்றெழும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்குகின்றவாறு போல
எனக்குள் ஆகாயமான நினைவில் நின்று நினைக்கும் ஈசன் நானாக என் அகத்தில்
இருக்கின்றான். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் என் ஈசனை கண்ணைப் பற்றிய அறிவை
அறியாத தன்மையினால் என்னுள் நின்று ஆட்டுவிக்கும் ஈசனை யான் அறிந்து கொள்ளாமல்
இருக்கின்றேன். உன்னில் நின்ற நான் ஆகிய என்னை அறிந்து உணர்ந்து தியானியுங்கள்.
நான் என்பது என்ன என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 265
அடக்கிலும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கிலும் இடைவிடாத நாத சங்கொலிக்குமே.
எவ்வளவு அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை வாசியினால்
சிற்றம்பலமாகிய உள்ளத்தின் உள்ளே செலுத்தி அதிலேயே நிறுத்தி அடக்க, அடங்காத மனதை
அன்பினால் உருக்கி அன்பே சிவம் ஆக இருக்கும் ஒன்றான மெய்ப் பொருளையே நின்றும்
இருந்தும் கிடந்தும் நினைந்து தியானம் செய்யுங்கள். மனம் உதிக்கும் இடத்திலேயே
மனமானது ஒடுங்கும். அறிவு பிரகாசிக்கும், அவ்வமயம் காமம், குரோதம், லோபம் ஆகிய
கிலேசங்கள் நீங்கும். இந்த ஞான யோகத்தை தொடர்ந்து அப்பியாசம் செய்யும்
சாதகர்களுக்கு தியானத்தில் அமர்ந்திருந்தாலும் நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள்
உள்ளே வாசிலயமாகி இடைவிடாத நாதம் சங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
****************கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி