சித்தர் சிவவாக்கியம் -276
பொய்யுரைக்க
போதமென்று பொய்யருக் கிருக்கையால்.
மெய்யுரைக்க
வேண்டுதில்லை மெய்யர் மெய்க் கிலாமையால்
வையகத்தில்
உண்மை தன்னை வாய் திறக்க அஞ்சினேன்
நையவைத்தது
என்கொலோ நமசிவாய நாதனே.
இப்பூவுலகில் தங்களையே சாமி என்றும், ஞானிகள், சித்தர்கள் என்றும் அவதாரம் எடுத்து வந்த
ஆச்சாரியார், குருவென்றும்
சொல்லிக் கொண்டு, ஏமாறுவோர்களை
ஏமாற்றி, பொய்யான உபதேசங்களைக் கொடுத்து, அந்தப் பொய்யாலேயே பணம், பொருள்
போன்றவைகளை சம்பாதித்து சகலவித சௌபாக்கியங்களோடு வளமாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். இப்படி பொய் வேடமிட்டு பொய்யையே பிதற்றி திரிந்து
இறந்துபோய் எரிகின்ற தீக்கும் மண்ணில் புதைந்து நாய் நரிக்கும் புழுவுக்கும்
இரையாக வேண்டும் என்பதே அவர்களுக்கும் விதியாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட
சிலரிடம் உண்மையை விரும்பும் சில நல்லவர்கள் கூட உண்மை ஞானத்தை உணராமல்
அடிமைப்பட்டு இறைப்புகழை மறந்து சாகப்போகும் மனிதரை கடவுளாக்கி துதி பாடி
இவ்வுடம்பில் கொண்டிருக்கின்றார்கள். உண்மையை அறிந்துணர்ந்த ஞானிகளும்
உண்மையானவர்கள் யாரும் உண்மையில் இல்லை என்று உண்மையை உபதேசிப்பது இல்லை. இதனால்
இறைவனைத் தவிர எதற்கும் அஞ்சாமல் இருந்த நான் மெய்ப்பொருள் உண்மையை வெளிப்படையாக
சொல்ல முடியாமல் அஞ்சினேன். நமசிவாய என்பது என்ன என்பதை எனக்கு ஞானம் போதித்து
கற்றுத் தந்து தெளிவித்த என் குருநாதனே! என் மனம் நொந்து போகச் செய்வது ஏனோ?
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -278
மச்சகத்துளேயிருந்து மாயை பேசும் வாயுவை
அச்சகத்துளேயிருந்து அறிவுணர்த்தி கொள்வீரேல்
அச்சகத்துளேயிருந்து அறிவுணர்த்தி கொண்ட பின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே.
இருந்து உயிரில்
மறைவாய் இயங்கும் பிராணனான காற்றானது வெளியேறி உயிர் போக காரணமாகிறது. இதை
உணர்ந்து அப்பிரானை அங்கேயே ரேசக பூரக
கும்பகம் எனும் பிராணாயாம பயிற்சியினால் காற்றைப் பிடித்து உயிரை வளர்க்கும் வழியை
அறிந்து கொள்ளுங்கள். அவ்வுடம்பிலேயே பிராணாயாமத்தை அப்பியாசித்து ஆன்மாவை அறிந்து
கொண்டு அறிவை உணர்ந்து பின்னால் எல்லாம் ஒன்றாக பொருத்தி எந்த ஆசையும் இல்லாத
ஈசனே எங்கும் பிரமமாய் ஆகி நிற்பதை எல்லா உயிரிலும் கண்டு கொள்ளுங்கள்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 279
வயலிலே
முளைத்த செந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும்
வன்மை கூறில் உய்யுமாறது எங்ஙனே
விறகிலே
முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே
பிறந்திருந்த நாடு பட்ட பாடதே.
வயலிலே முளைத்த செந்நெல்லே சரியான கவனிப்பின்றி களையாக மாறுகின்றது. அது போல
பிறவி எடுத்த நோக்கம் அறியாது உயிர் இறைவனை அடையாது பிறவிப் பிணி அடைகிறது.
உலகிலுள்ள மனிதர்கள் இவ்வுண்மையை உணராது நான் எனது என்று வண்மைகள் பேசிக்
கொண்டிருந்தால் இப்பிறவிப் பிணியிலிருந்து உய்யும் வழி எங்கனம். விறகிலே முளைத்து
எழுகின்ற தீயைப் போல் நமது உடம்பிலேயே சோதி மெய்யாக இருப்பதை உணராமல் மெய்யாகிய
உடலே பொய்யாகி மாண்டு நரகத்திலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறந்து இருந்து
இறப்பதே இவ்வுலகில் துன்புற்றும் இன்புற்றும் மறைவதே நடந்து வருகின்றது.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 280
ஆடுகின்ற
எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற
பாவிகாள் தெளிந்த தொன்றை ஒர்கிலீர்
காடு
நாடு வீடு விண் கலந்து நின்ற கள்வனை
நாடியோடி
உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
உங்கள் உடலுக்குள்ளேயே நின்று நட்டம் புரிந்து ஆடிக் கொண்டிருக்கும் ஈசனை
அறியாமல் அங்கும் இங்கும் இருப்பதாகக் கூறி தேடுகின்ற பாவிகளே!! தெளிந்த
மெய்ப்பொருளாக விளங்கும் ஒன்றை அறிந்து அதனையே ஒரே நினைவுடன் தியானிக்கத்
தெரியாமல் இருக்கிறீர்கள். காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும், ஆகாயத்திலும்
என்று பார்க்குமிடமெங்கும் பரந்து நின்ற கள்வனான ஈசனை அறிந்து அவனையே நாடி ஓடி
தனக்குள்ளேயே நயந்து உணர்ந்து தியானித்துப் பாருங்கள்.
************அன்புடன்
கே எம் தர்மா.
No comments:
Post a Comment