சித்தர் சிந்திய முத்துகள் ..........3/38



சித்தர் சிவவாக்கியம் - 254

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்

பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ

ஆதி பூசை கொள்ளுமோ அநாதி பூசை கொள்ளுதோ

காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

 

பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அதற்கென பூசைகள் போடும் பேய்க் குணம், கொண்டோர்களே! பேய்கள் பூசைகளை ஏற்றுக் கொள்ளுமோ? பிடாரி பூசையை ஏற்றுக்கொள்கின்றதா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றதா? உடலெடுத்து உலாவும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் பணமும் பொருளும் பறித்து ஏமாற்றி வாழ்ந்து சாகிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.   

 

சித்தர் சிவவாக்கியம் - 255

மூலமண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்

நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்

கோலி எட்டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்

மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.

 

நம் உடலில் மூலமண்டலமான உயிரில் மூச்சானது முக்கோண வட்டச் சக்கரத்தில் சதுர்முகமாக ஆதியாக வாலையாய் அமைந்து இயங்குகின்றது. நான்கு வாசல் எனும் வித்து, புழுக்கம், முட்டை, கர்ப்பம் ஆகிய வகைகளிலும் வரும் உயிர்கள் அனைத்திலும் எம்பிரான் ஆனா ஈசன் நடுவில் அமர்ந்து ஒரேழுத்து மந்திரமாய் உள்ளான். அதுவே வளர்ந்து எண்சாண் உடம்பாகவும் இரண்டான உயிராகவும் குளிர்ந்தலர்ந்த தீட்டாகவும் உள்ள காவியில் கலந்து சோதியான சிவமாய் உறைந்து நிற்கின்றது. இதைத் தவிர வேறு இறைவணக் காண்கிலேன். இதுவே அனைத்துமாய் விளைந்து இப்பூமியெங்கும் சிவமயமாய் இருக்கின்றது.    

 

சித்தர் சிவவாக்கியம் -258

புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை

மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை

அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்

கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பது இல்லையே.

 

புண்டரீகம் - இருதயத் தாமரை;

இருதயத் தாமரையாக விளங்கும் ஆன்மாவின் நடுவில் உதித்து எழுந்து நிற்கும் சோதியே ஈசன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் சந்திர, சூரிய, அக்னி என்ற மூன்று மண்டலங்களிலும் பின்னிப் பிணைந்து மாயையால் மறைந்து நின்று கொண்டிருக்கின்றான் . அண்டத்தில் உள்ளவை யாவும் தன் பிண்டத்திலும் உள்ளதை உணர்ந்து அச்சோதியை சார்ந்து மெய்ப்பாடுடன் தியான தவம் செய்பவர்கள் கண்டதே கோயில் என்பதயும், உள்ளே நடுவாக இருக்கும் சோதியே தெய்வம் என்பதையும், தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டு பிறவற்றை கையெடுத்து வணங்கமாட்டார்கள்.

கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி


0 comments:

Post a Comment