"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 06

எதாவது ஒரு கோட்பாடு அல்லது அறிவியல் ஊகம் என்றால், அதன் கருத்து தர்க்கரீதியாகவும்  சீரானதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு யோசனை சீரற்றதாக இருக்கிறது என்றால், அது உண்மையில் எந்தவொரு விடயத்தையும் சரியாக விளக்குகிறதா என காண்பது மிக கடினம். மற்றது தர்க்கரீதியாக இருந்தால், விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருக்க வேண்டும், உதாரணமாக ஒன்றுடன் இரண்டு கூட்டினால், அது மூன்றாகும், யார் கூட்டினாலும் மூன்று தான் வரவேண்டும். ஆனால், சோதிடம் அப்படி இல்லை. சோதிடம் என்பது எந்த அளவுக்கு உண்மைத் தன்மை கொண்டது என்று கூறுவது மிகவும் கடினமானது, ஏனென்றால் சோதிட  சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளவை மிகவும் தெளிவற்றவை. சோதிடர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் முரண்படுவது கூட இதனால்தான். ஆமாம் இங்கு ஒன்றும் இரண்டும் எப்பவும் மூன்று இல்லை ? இதனால் தான் சோதிடம் என்பது உண்மையா ?, அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா ? போன்ற கேள்விகள் இன்று புத்திஜீவன்களிடம் எழுகின்றன.  நாம் முன்பு விளக்கியது போல சோதிடத்தில் பரவலாக வேறுபட்ட வடிவங்களும் உள்ளன. உதாரணமாக, வேத சோதிடம், சீனா சோதிடம் மற்றும் மேலை நாட்டு சோதிடங்களை சொல்லலாம். மேலும் பண்டைய காலத்தில், உயர்ந்த கலையாக சோதிடமும் வான சாத்திரமும் ஒட்டி பிறந்த குழந்தைகள் போல ஒன்றாகவே இருந்ததுடன் அன்று பொதுவாக, மத குருமார்களே வானியல் வல்லுனர்களாகவும் சோதிட விற்பன்னர்களாகவும் அரசுக்கு ஆலோசகர்களாகவும் அதிகாரம் செலுத்தி வந்துள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது. எனினும் இன்று சோதிடமும் விஞ்ஞானமும் [அறிவியலும்] எதிரெதிர் துருவங்களாக நின்று மல்லு கட்டிக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

 

இந்த சோதிட சங்கதிகளை அல்லது பலன்களை நம்புபவர்கள் எல்லோரும் பொதுவாக கூறும் விடயம் என்னவென்றால், சோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்லது அறிவியல்; அது ஒரு கணித முறையில் கணக்கிடப்படும் துறை. ஆனால், சிலர் அதைத் தவறாகக் கணக்கிடுவதாலேயே தவறுகள் நடந்து விடுகின்றன என்பதே ஆகும். அவை ‘கணக்கு’ என்றால் அதில் கட்டாயம் தவறேதும் நடக்க முடியாது; எனக்கு ஒரு வகைக் கணக்கு; உனக்கு ஒரு வகைக்கணக்கு என்றால் அது கணக்கே அல்லவே ?. ஒரே சாதகத்தை சில சோதிட மேதைகளிடம் கொடுத்துக் கணிக்கச் சொல்லுங்கள். சோதிடம் விஞ்ஞானமாகவும்  கணிதமாகவும்  இருந்தால் கணிப்புகள் எல்லாமே ஒரேமாதிரி கட்டாயம் இருந்தாக வேண்டும். நடைமுறையில் நான் கேள்விப்பட்ட, பார்த்த வரையில், இப்படி இருப்பதேயில்லை. சோதிடருக்கு சோதிடர் பலன்கள் வேறுபடுவதை இலகுவாக காணலாம். மற்றது கணிசமான இந்து சமய மக்கள் இன்றும் சோதிடம் பார்த்துதான் கல்யாணம் செய்கிறார்கள். அதேவேளையில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களிடம் இந்த வழக்கம் பொதுவாக கிடையாது. நடந்து முடிந்த திருமணங்களில் நல்லதும் கெட்டதும்  எல்லாமே இந்த இருவகைத் திருமண வாழ்க்கைகளிலும் நாம் காணலாம். சாதகம் பார்த்து திருமணம் பண்ணிக்கொண்ட தம்பதிகளின் வாழ்க்கை இன்பத்திலும், மற்றவர்கள் வாழ்க்கை துன்பத்திலும் அமைந்ததாக சரித்திரம் இல்லை. நல்லது கெட்டது என்பது வாழ்க்கையோடு இயல்பாய் இருக்கும் காரியங்கள். இதற்கு நாளென்ன செய்யும்; கோளென்ன செய்யும்; இதை நீங்கள் புரியவேண்டும்?

 

நீங்கள் ஒரு மனிதனை கவனத்தில் எடுத்தால், அவனுக்கு தன் எதிர் காலம் மற்றும் தன் குடும்பத்தின் எதிர்காலம் பொதுவாக மறைக்க பட்டு, நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கிறது. எனவே அவனுக்கு அதை அறிய ஆசை ஏற்படுவது இயல்பே. அந்த உந்துதலினால், வானத்தின் அசைவுகளுக்கும், பூமியில் மனிதனின் அசைவுகளுக்கும் ஆண்டவனின் அல்லது சமயத்தின் நம்பிக்கை ஊடாக ஒரு முடிச்சு போட்டதே சோதிடக் கலை எனலாம். இதனால் தான் மனிதன் உலகளாவிய ரீதியில், நாட்டின் தலைவர்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தம் துன்பங்கள், கஷ்டங்களுக்கு சோதிடத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட சோதிட வல்லுநர் சொன்னால் தான், அதற்கு முக்கியமும் கொடுக்கிறார்கள். அது தான் எனக்கு புரியவில்லை, சோதிடம் ஒரு அறிவியல் மற்றும் கணக்கு என்றால் யார் சொன்னால் என்ன ?, அதன் முடிவு ஒன்றாகவே கட்டாயம் இருக்கவேண்டும் !. இரண்டாவது சோதிடம் "இந்த வாரம் உங்களுக்கு ஒரு முக்கியமான சவால் வரும்" போன்ற தெளிவற்ற, மேலோட்டமான அறிக்கை அல்லது எதிர்வு கூறுவது ஏனென்றால், சோதிட வல்லுநர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, அங்கு உண்மையில் ஒரு தொடர்பும் இல்லாத பொழுதும்,  மனிதர்களின் மனம் எப்பவும் இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தொடர்பை தேடுகிறது என்பது ஆகும். பொதுவாக எங்கள் மூளை அங்கு ஒரு வடிவத்தை அல்லது ஒரு தோற்றத்தை தேட முனைவது தான் சோதிடத்தை நம்பக்கூடியதாக பலரை கருத வைக்கிறது எனலாம். [why astrology can be perceived as believable is that our brains are hard-wired to look for patterns]

 

இதைத்தான் அகநிலை சரிபார்ப்பு [subjective validation] என்பார்கள். எனவே அகநிலை சரிபார்ப்பு மூலம், அது அவர்களுக்கு  தனிப்பட்ட ஒரு கருத்தையோ அல்லது ஒரு முக்கியத்தையோ கொடுத்தால், ஒரு நபர் அந்த அறிக்கையையோ அல்லது ஒரு நிகழ்வையோ சரியானதாக கருதுவார் [Through subjective validation, a person will consider a statement or another piece of information to be correct if it has any personal meaning or significance to them]. இது தான் இந்த தெளிவற்ற, மேலோட்டமான சோதிட அறிக்கையை உண்மையாக்குகிறது. நீங்கள் சாதகம் பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு ஏதாவது நடக்கும் என்று அது கூறுகிறது. பிறகு எப்பொழுதாவது, சற்று பொருத்தமான ஏதாவது நடக்கும் போதெல்லாம், அதை நீங்கள், முன்பு நீங்கள் பார்த்த சோதிடம் சொன்ன பலனாக்குகிறீர்கள். [So you read a horoscope, it says that something will happen to you, and whenever something somewhat relevant happens, you attribute it to the horoscope you read previously.] இது தான் உண்மை.

 

உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ அது உனது முதல் பரிமாணம்.என்றும் உன்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்களோ, அது உனது இரண்டாவது பரிமாணம் என்றும், ஆனால் உண்மையில் நீ யாராக இருக்கிறாயோ அதுதான் உனது மூன்றாவது பரிமாணம். ஆனால் இது உனக்கு தெரியாது. இதை உனக்கு தெரிய வைப்பவையே சோதிடம் என்று சொல்லி மக்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முயல்வதுடன் இவைகளுக்கு சான்றாக புராணம், இதிகாசங்களில் உதாரணம் கூறுகிறார்கள். ஆனால் இவைகள் புனையப்பட்ட  கதைகள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தை பாக்கியம் இல்லாத தசரதனின் சாதகத்தையும் அவருடைய மனைவியர் சாதகங்களையும ஆராய்ந்த பின்னரே, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு, அதன் பலனை தசரதன் பெற்றார் என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏன் அந்த சோதிடர், இராமன் பிரிவு ஏற்படும் என்றும் அப்பொழுது துயரம் தாங்காமல் தசரதன் \ சாவார் என்றும் சொல்லவில்லை ? மற்றும் அதற்கு பரிகாரமும் சொல்லவில்லை ? ஏன் ? அதேவேளையில், மகாபாரதத்தில் சோதிட  ஆரூட சாத்திரத்தில் வல்லவன் என கூறப்படும் சகாதேவன் குறித்துக் கொடுத்த நாளில் தான் துரியோதனன் களப்பலி நிகழ்த்தி, போருக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான். ஆனாலும், அவன் தோல்வியைத் தழுவினான். இதற்கு சாத்திர ரீதியான விளக்கங்கள், அதை நியாயப் படுத்தி சொல்லப்பட்டும் உள்ளன. ஏன் எல்லாம் தெரிந்த சகாதேவன், இப்படி ஒரு சூழ்ச்சி நடக்கும் என்றுமுன்கூட்டி சொல்லவில்லை ? ஏன் ?

 

அதே போன்று, ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் “சாவுக்கு அஞ்சி வாழ்வதை விட, போராடி வீரனாகச் சாவதேமேல்'' என்ற கொள்கையுடன் ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீஸர் [Gaius Julius Caesar] வாழ்ந்து வந்தார் என்றும் ஒருநாள், எதிர்காலம் பற்றிக் குறிசொல்லும் சோதிடர் ஒருவர், ''சீஸர்! மார்ச் 15-ஆம் நாள் ['Ides of March'] நீ இந்த மன்றத்தில் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைவாய்!'' என்றார் என்றும் சோதிடர் சொன்னது போலவே, அதே திகதியில் சீஸர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தான் எனவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் சீஸரின் சர்வாதிகார போக்கை எதிர்த்து, அவனை கொல்ல, சூழ்ச்சி நடந்து கொண்டு இருந்த காலம் அது. ஜூலியஸ் சீஸர் தனது அடுத்த செனட் கூட்டத்தை மார்ச் 15 வைத்து, அன்று அதில் பங்கு பற்றிய பின், மார்ச் 18 ரோமை விட்டு வெளிய தனது அடுத்த படையெடுப்புக்கு ஆயுத்தம் ஆனான் என்பது வரலாறு [The seemingly precise timing of the prediction, the Ides of March, was likely based on the fact that Julius Caesar had plans to next attend the Roman Senate on March 15 and then leave Rome on March 18th for a military campaign] எனவே அன்று நிலவிய அந்த சூழ்நிலையில், அவனுடன் சேர்ந்தவர்களை கொண்டு அவனை, அவனது பாதுகாவலர்கள் குறைவாக இருக்கும் தருணமான அந்த சென்ட் அவையில் கொல்லுவது ஒன்றுதான் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகளில் முதன்மையானது ஆகும். எனவே அன்றைய நிலைவரத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இது கட்டாயம் புரிந்து இருக்கும். அதன் அடிப்படையிலேயே அந்த புகழ் பெற்ற 'Ides of March' என்ற வாசகம் ஷேக்ஸ்பியரால் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அது மட்டும் அல்ல ஷேக்ஸ்பியரின் நாடகத்திலிருந்த  அடையாளம் தெரியாத அந்த சூத்திரதாரியை சிலர்  ஸ்புரின்னா [Spurinna ] என்ற ரோமன் சோதிடன் என்கின்றனர். ஆனால் இவன்  முன்னமே எதிர்வு கூறவில்லை.  ''நாட்டில் குடியாட்சி மலராமல் போனதே'' என்று அவர்மீது வருத்தப்பட்ட சிலரால் அரசியல் கிளர்ச்சிகள் ஏற்படுத்திய  அந்த கடைசிநேரத்தில் தான்  சீஸரை எச்சரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. [According to the historical writer C.J.S. Thompson, M.B.E., Ph.D. - and confirmed in Plutarch's account of the story written in 75 A.D. and Suetonius in 110 A.D. - it was sometime prior to the fateful day of March 15 that Spurinna had first given Caesar the famous warning to "beware of the Ides of March."]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 07 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 07

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01:   

1 comment:

  1. MANUVENTHAN SELLATHURAIFriday, June 04, 2021

    சோதிடத்தை நம்பி சோலிகளை வளர்த்துக்கொண்டவர்கள் எத்தனைபேர்.சோதிடத்தை நம்பி வாழ்கையினைப் பாழாக்கியவர்கள் எத்தனைபேர்.மனித மனங்களின் பலவீனங்களை அறிந்தவன் சோதிடத்தால் உழைக்கிறான்.இவர்கள் வாத்தைகளை நம்பி பிள்ளைகளை நரபலி கொடுத்த மூடர் கதைகளும் இந்தியாவில் நடந்துள்ளன. நடக்கினறன். உங்கள் ஆய்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete