வாழ்வியல் சிந்தனைகள் - பகுதி:01


தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

-ஆ. அந்தோணிசாமி

(கட்டுரையாளர்,

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசு கலைக்கல்லூரி,

சேலம் – 07)

 


முன்னுரை:

     இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல் கருத்துக்களைக் கூறி அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது.

 

     மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம் இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வாழ்வியல் சிந்தனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

தனிமனிதஒழுக்கம்

     வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படை காரணமாக இருக்கும். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன. பழமொழி நானூறு ஒழுக்கத்தை விட உயா்ந்தது ஒன்றுமில்லை என்பதை

 

கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓா்

பொல்லாதது இல்லை ஒருவருக்கு – நல்லாய்

ஒழுக்கத்தின் மிக்க இழவு இல்லை இல்லை

ஒழுக்கத்தின் மிக்க உயா்வு”    

(64-பழமொழி நானூறு)

 

எனக்கூறும் நல்லொழுக்கமே செல்வம் என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவா்களிடத்துச் செல்வம் தங்காது என்று

 

திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்

கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற

மறைக்க மறையாதாம் காமம் முறையும்

இறை வகையான் நின்றுவிடும்” (39 – நான்மணிக்கடிகை)

 

எனப் பகா்கிறது. கல்வி கற்றால் ஒழுக்கம் வரும் என்று அனைத்து இலக்கியங்களும் கூறுகிறபோது முதுமொழிக்காஞ்சி ஒழுக்கம் கல்வியை விட சிறந்தது என்கிறது.

 

ஆா்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஓதலின் சிறந்தன்று. ஒழுக்கம் உடைமை”    (1-முதுமொழிக்காஞ்சி)

 

அறம்

     மனித இயக்கத்தின் வாழ்வியல் அடிப்படைப் பண்புகளே அறமாகும். அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல இடங்களில் வந்துள்ளது அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது. அறம் என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல், அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம் பொதுவாக நல்லொழுக்கமும், நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும். அறம் மனிதனில் வாழ்வியல் கூறுகளில் ஒன்று தமிழ் இலக்கியங்கள் அறம் பற்றி அதிகம் பேசுகின்றது.

மேலும் பகுதி:02 தொடரும்

 

No comments:

Post a Comment