ஊனங்கள்- கதை

[கனடிய சூழ்நிலையில் இடம்பெறும் கதையிது. இக்கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகின்றன என்பதனை கவனத்தில் கொள்க]



 அலிஷாவுக்கு அழுகையும் ,ஆத்திரமும் மாறி மாறி அவளை ஆட்டிச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது. அவளால் என்ன செய்வது என்று புரியவில்லை. அவள் மனம் தீயால் பொசுங்கிக்கொண்டிருந்தது.

 

''அடப்பாவி , ஓரிரு  வருடங்களா? 10 வருடங்கள். என்னை ஒழுங்காய் படிக்கவும் விடாமல் சுற்றி,சுற்றி வந்தானே!! இவனால் நான் என் ஒரே ஒரு அண்ணனுடன்  எத்தினை நாள் வாக்குவாதம் செய்து விரோதத்தினை அவனுடன் வளர்த்திருப்பன். அம்மா ,அப்பாவின் நண்பர்களினால் வந்த கல்யாண சம்பந்தங்களினை வேண்டாம் என்று ஒதுக்கி அவர்களுடய அன்பினை உதாசீனம் செய்து, என்மேல் இருக்க வேண்டிய அவர்களின் நம்பிக்கையினை ஒட்டுமொத்தமாய்  தொலைத்திருப்பன்.''

 

''இவனை நம்பி என் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்து கல்லூரி சென்றேன் . பாசமுள்ள பெற்றோரை எத்தனை பொய் சொல்லி ஏமாற்றியிருப்பேன். குடும்ப உறவுகளின் அன்பினை இழந்தேன். ஊரவர்களின் நாக்குக்கு இரையானேன். ஐயோ நான் தானே எல்லாவற்றிற்கும் காரணம்.  பள்ளி போய்வருகையில்  அப்பா,அம்மா சொன்னவைகளைக் கேட்டு நடந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா..?''

 

 அலிஷாவின்  புலம்பல் அவள்மீது குற்றச்சாட்டுகளை அள்ளி எறிந்துகொண்டிருந்தது.அவள் படுக்கையறையில் எப்பக்கம் புரண்டு படுத்தாலும் அவளின் சக்தியை மீறி அவளின் உள்ளம் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது.

 

திடீரென ஒரு முடிவுக்கு வந்தவளாக அவனை  ஒருமுறை சந்திக்கவேணும் என்று எண்ணியவள்   ஆத்திரத்தையும், அழுகையையும் அடக்கிக்கொண்டு , அவளது கைபேசியில் அவன் இலக்கத்தினை நடுங்கும் விரலினால் தட்டிக் கொண்டாள் .

 

''ஹலோ , சந்தனு உன்னோட கதைக்கவேணும்''

 

மறு முனையில் அவளது காதலன் சந்தனு மெதுவாக குரல் கொடுத்தான்.

 

'' ம் , சொல்லு ''

 

'' போனில் இல்ல ,நேரில கதைக்க வேணும் ''

 

''ம் , எங்க''

 

''விக்ரோறிய பார்க் , நாளை 4.00''

 

''சரி வாறன்''

 

மறுநாள் குறிப்பிட இடத்துக்கு அவள் எப்படிச் சென்றாள் என்பது அவளால் உணர முடியவில்லை. கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினாள்.வழக்கம்போல் அவள் தன் முகத்தினை கார்க் கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். இவனை சந்திப்பதற்காக ஒவ்வொரு முறையும் இந்தக் கண்ணாடியில் தான் தன் முகத்தினை எத்தனை வருஷமாய் அழகுபடுத்தியிருப்பாள். ஆனால் இன்று.....

 

அழுது வீங்கியிருந்த தன் முகத்தினை கார்க் கண்ணாடியில்  ஒருமுறை துடைத்துக்கொண்டு பெருமூச்சினை வெளிப்படுத்திக் கொண்டாள்.

 

அவனும் நேரத்திற்கே வந்திருக்க வேண்டும். அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தான்.

 

''ஹலோ சந்தனு''

 

கண்டதும் எழுந்து நின்றான் சந்தனு.

 

'' என்ன புதுசா மரியாதை எல்லாம் தாறாய்!!, இப்ப உனக்கு சந்தோசம் தானே?''

 

''ஏன் அலிஷா அப்பிடி எல்லாம் கதைக்கிறாய்''

 

''என்னது எனோ? எடே 10 வருசமடா.உன்னால எத்தினையை இழந்தன்.உன்னை நம்பித்தானே அத்தனையும் சகிச்சுக் கொண்டன். கடைசியில இப்பிடிப் பண்ணியிற்றியே''

 

''நானில்லை அலிஷா ,அம்மா, அப்பா தான்..''

 

''ஏன்டா? அம்மா ,அப்பாவை கேட்டா என்னை காதலிச்சாய்?''

 

''கல்யாணம் செய்து வைக்கிற என்றுதானே அம்மா,அப்பா சொல்லுகினம்.''

 

நகைத்தவாறே ''அருமையான அம்மா-அப்பாவும், பிள்ளையும் , காதல் கல்யாணத்திற்கும்  சீதனம் கேட்டு கல்யாணத்தை குழப்பிற   அம்மா,அப்பா, பிள்ளையை இப்பதான் நான் காணுறன்''

 

''எங்கட நன்மைக்குத்தானே அலிஷா''

 

ஆத்திரம் மேலோங்கிய அலிஷா ''ஏன்டா, நீயும்,நானும் என்ன ஊனமுற்றவரா அவர்கள் சீதனம்வேண்டி எங்கட தலையில போட? . நீயென்ன  ஆம்பிளை  இல்லையா உழைத்து சம்பாதிக்க? வெறும் கையோட இந்த நாட்டுக்கு அகதியாய் வந்த உன்ர ,என்ர அம்மா அப்பவாலை இவ்வளவு வசதியாய் இருக்க முடியும் என்டா ,இங்க படிச்சு நல்ல வேலை செய்யும் எங்களால எப்படியெல்லாம் இருக்க முடியும் எண்டு ஏன் உன்னால்  சிந்திக்க முடியேலை? போடுறது வெள்ளைக்காரன் உடுப்பு.பேசுறது வெள்ளைக்காரன் மொழி. விழுங்கிறது வெள்ளைக்காரன் சாப்பாடு. சீதனம் மட்டும் தமிழன் சிலகாலம் கேட்டான் பிச்சை என்றதை  மட்டும் வைச்சு , அடுத்தவன் உழைச்ச காசையும் ,சொத்தையும் முதுகெலும்பு இல்லாத பிள்ளையளை வைச்சு கொள்ளையடிக்கிற உங்களைப்போல திருடர் கூட்டம் எப்பதான் திருந்தும்?''

 

 ''நான் அம்மா,அப்பாவோட கதைக்கிறன் அலிஷா''

 

''என்ன ,சீதனத்தை குறைக்கச்சொல்லிக் கேட்கப்போறியா?''

 

''இல்லை அலிஷா..''

 

''இங்க பார் சந்துரு,உன்னோட சமாதானம் பேச நான் வரேலை. உன்னால் நான் என்ர பெற்றோருக்கும் ,கூடப் பிறந்தவனுக்கும்  பல துரோகங்கள் செய்தாலும், என்னை அவையள் உழைத்து வாழத் தகுதியுள்ளவளாய்த்தான் வளர்த்திருக்கினம். நானுன்னைப்போல அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவளுமல்ல. ஏன்! என்னுடைய அம்மா,அப்பா வின்ர காசிலையோ, சொத்தில்லையோகூட நான்  தொடப்போறதுமில்லை. அதை நம்பி நான் வாழவேண்டியவளாக என்ர  அம்மா அப்பா என்னை வளர்க்கேலை.

 

''சரி அலிஷா ,அப்பிடி எண்டால் இரண்டு பேரும் ...''

 

''ஷ் ,வாயை மூடு ,உந்த இரண்டு பேரும் என்ட நினைவே உனக்கு இருக்கப்படாது. நீ இல்லையெண்டா உங்க உள்ள சில பெண்கள் மாதிரி நான் தற்கொலை செய்வன்,நீ தப்பிவிடலாம் எண்டு மட்டும் நினைச்சிடாதை.  உன்னைப்போய்  கல்யாணம் செய்தால் நாளைக்கு சீதனம் கேட்டு சித்திரவதை செய்யமாட்டாய் எண்டதில என்ன நிச்சயம். ஊனமான உன்னைப்போல ஆம்பிளையல் முன்னால நான் உழைச்சு இந்த நாட்டில, இதே மண்ணில் வாழ்ந்து காட்டுறன் பார் என்றவாறே நிலத்தில் பணிந்து மண்ணில் தன் கையால் அடித்து சத்தியம் செய்த அலிஷா..

 

ஒரு புதுப் பெண்ணாக தலை நிமிர்ந்து வேகமாகவே நடந்து சென்றாள். அவளது வேகம், நிச்சயம் அவள் இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுவாள் என்ற நம்பிக்கையினை வெளிச்சமாக உணர்த்தியது.

கதை:செ.மனுவேந்தன்




No comments:

Post a Comment