"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"

 



"அன்னைக்கு அரணாக அப்பாவுக்கு தனயனாக

அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக

அனைவருக்கும் திமிராக என்றும் முரடாக

அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"

 

"ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே

ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே

ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே

ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"

 

"இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில்

இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே

இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே

இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"

 

"ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி

ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில்

ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய்

ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"

 

"உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய்

உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ?

உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம்

உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"

 

"ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல்

ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே

ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ

ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"

 

"எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய்

எழுதுகோல் எடுத்து உலகை காட்டியவனே!

எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது

எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"

 

"ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம்

ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ

ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம்

ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"

 

"ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி

ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே

ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே

ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"

 

"ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து

ஒழுங்காக தினம் நடவடிக்கைகளை எடுத்து

ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்து

ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"

 

"ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை

ஓலம்பாட எம்மை வைத்தது எனோ?

ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து

ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லாயோ?"

 

"ஔவை வாக்கை மருந்தாக கொண்டு

ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே

ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே?

ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?" 

✏️✏️✏️✏️✏️✏️✏️✏️ 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

{எரிவனம் - சுடுகாடு

ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை

ஓலாட்டு - தாலாட்டு

ஔதாரியம் - பெருந்தன்மை

ஔரசன் - உரிமை மகன்

ஔடதம் - மருந்து]

3 comments:

  1. சந்திரகாசன்Monday, May 24, 2021

    அன்பாயும், ஆதரவாயும் இருந்து, ஈன்றோர், உற்றார், ஊரார் என்றும் ஏற்க, ஐக்கியமும், ஒற்றுமையும் ஒங்கவைத்த ஔரசன் நீ; நீ இறந்தாலும் என் நண்பனாய் என்னுடன் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்!

    ReplyDelete
  2. செ.மனுவேந்தன்Monday, May 24, 2021

    பல்லாண்டு வாழ்க வென்று பல்லோரும் வாழ்த்துமுலகில் , இல்லாதோரும் இறப்பினையே மறந்து வாழ , கல்லாய் மனம் கிறங்கி மரணத்திற்கு முன்னமே அஞ்சலிக் கவி வடித்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  3. இராசேந்திரன்Monday, May 24, 2021

    கவியில் இப்படி ஒரு கற்பனையா? அருமை

    ReplyDelete