விண்வெளி ஆய்வுகளின் பின்னணி என்ன ?

 


சில வருடங்களிற்கு முன்னர்  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவிய ‘மங்கல்யான’ விண்கலம் குறித்து ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வந்தன. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விண்வெளி ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

வட அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்ணில் நடக்கும் மாற்றங்களையும், புதிய கிரகங்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் துல்லியமாகக் கணித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

 

இந்தியாவின் மங்கல்யானைப் போலவே அண்மையில், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சற்றொப்ப 100 கோடி விண்மீன்களை புகைப்படம் எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கையா (GAIA) என்கிற அதிநவீன செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.இதற்கான செலவு சற்றொப்ப 100 கோடிடாலர்கள் ஆகும்.

 

புவியைவிட்டு சற்றொப்ப 15 இலட்சம் மைல்களுக்கு அப்பால் சென்று நிலைகொள்ளும் இந்த செயற்கைக் கோள், அங்கிருந்து பல விண்மீன்களை படமெடுத்து பூமிக்கு அனுப்பும். இந்த செயற்கைக் கோளின் மூலம் மட்டும் சற்றொப்ப 50 ஆயிரம் கோள்கள் குறித்த தகவல்களைத் திரட்ட முடியும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நம்பிக் கைத் தெரிவித்துள்ளது.

 

சீனாவும் தன் பங்கிற்கு, சந்திரனை ஆய்வு செய்ய ஆளில்லா விண்கலத்தை முதன் முறையாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில், ரசியா ஏற்கெனவே அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போலவே, தமக்கும் ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையம் வேண்டும் என்ற சீனாவின் உந்துதலே இந்த புதிய விண்கலத்தை ஏவியதற்கு காரணம் என சீன அறிவி யலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

 

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே பூமியில் நடை பெற்றுக் கொண்டுள்ள நாடு பிடிக்கும் அதிகாரப் போட்டி, விண்வெளியிலும் நடந்து கொண்டுள்ளது. அதன் விளைவாக, ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி வருவது ஆராக்கியமானதே எனினும், அவ் ஆராய்ச்சிகளின் பின்னணியில் முதலாளிகளின் தீரா இலாபவெறியே முன்னிற்கிறது.

 

உலகெங்கும் முன்னணி முதலாளிய நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இது போன்ற விண்வெளி ஆராய்ச்சிகள், “நாம் வாழுகின்ற இப்புவியைத் தாண்டி, உயிரினங்கள் வசிப்பதற்கு வசதியான வேறொரு கிரகம் இப்பால் வெளிக்கு அப்பால் உள்ளதா?’’- என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை காணவே பெரும்பாலும் நிகழ்த்தப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். அது ஒரு முக்கியமான கேள்வியே! இருப்பினும், இன் னொரு முக்கியமானக் கேள்வியும் இவ் ஆராய்ச்சிகளுக்கு பின் உள்ளது.

 

நாம் வாழுகின்ற பூமியின் இன்றைய அவல நிலை நமக்கு நன்கு தெரியும். இயற்கை வளங்களை முதலாளிய நாடுகளும், நிறுவனங்களும் வரைமுறையற்றுச் சுரண்டிக் கொண்டுள்ளதன் விளைவாக, புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பனிப் பிரதேசங்கள் உருகுவதும், கடல் மட்டம் அதிகரிப்பதும், மழை - புயல் - நில நடுக்கம் உள்ளிட்ட கடும் இயற்கைச் சீற்றங்கள் இயல்பாகி வருவதும் என புவியின் நிலைமை படுமோச மாக உள்ளது. World Resources Institute என்ற பன்னாட்டு அமைப்பு, உலகின் 69 நாடுகள் கடுமையான தண்ணீர் சிக்கலில் இருப்பதாகவும், அந்த நாடுகளின் தண்ணீரில் கணிசமான அளவு தொழிற்சாலை உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

 

முதலாளியத்தின் விளைவால், புவியின் ஒட்டுமொத்த மனித குல மும், உயிரினங்களும் சந்திக்கும் பேரவலங்கள் இவை. இன்னொரு புறம், இந்த அவலங்கள் சூழலியலைக் காப்பதற்கான உலக தழுவியப் போராட்டங்களுக்கு மறைமுக அழைப்பை விடுத்துக் கொண்டுள்ளது. சூழலியல் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகள் உலகெங்கும் பரவிவருகிறது.

 

இந்நிலையில், பூமியின் இயற்கை வளங்களை இனியும் பழையபடி தீவிரமாகச் சுரண்ட முடியாது என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிய சக்திகள், தாம் சுரண்டு வதற்கு ஏதுவாக உள்ள இயற்கை வளங்கள், கனிமங்கள் ஆகியவை நிறைந்துள்ள புதிய கிரகங்கள் விண்வெளியில் உள்ளனவா என்பதை அறிவதற்காகவும் பல விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

 

பூமிக்கு அப்பாற்பட்ட கோள்கள் மட்டுமின்றி, எரிகற்கள் ஆகிய வற்றிலும் கனிசமான அளவிற்கு டைடானியம், பிளாட்டினம், துத்த நாகம் உள்ளிட்ட பல்வேறு கனி மங்கள் காணப்படுகின்றன. 1997 ஆம் ஆண்டு வெறும் 1.6 கிலோ மீட்டர் சுற்று வட்டம் கொண்ட ஓர் எரிகல்லில், இரும்பு, நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 20 ட்ரில்லியன் டாலர் அளவிற்கான கனிமங்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். 12Psyche என்ற எரிகல்லில் மட்டும், உலகின் இன்றைய பயன்பட்டு அளவைக் கணக்கில் கொண்டால், பல மில்லியன் ஆண்டுகளுக்குத் தேவையான அளவிற்கான இரும்பு மற்றும் நிக்கல் கனிமங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 

ஒரு வேளை அவ்வாறான கிரகங்களோ, விண்கற்களோ கண்டு பிடிக் கப்பட்டால், அதிலிருந்து கனிமங்கள், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பூமிக்குக் கொண்டு வருவது குறித்தும், வாய்ப்பிருந்தால் அங்கேயேக் குடியேறுவது குறித்தும் இந்த ஆய்வுகளை அவர்கள் முன் தள்ளி நடத்துகிறார்கள்.

 

இது போன்ற ஆராய்ச்சிகளின் விளைவாக, அமெரிக்காவின் அரி சோனா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், வைரத்தின் படிமங்களை அதிகமாகக் கொண்ட Planet 55 Cancri-eஎன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித் துள்ளனர். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம், மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற 5 கிரகங்களைப் பட்டியலிட்டு, அதில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருகிறது.

 

மேலும், அமெரிக்காவின் ஹப் பில் விண்வெளித் தொலை நோக்கி, வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் யுரோப்பா என்ற துணைக் கிரகத் தில், நீர் கசிவு இருப்பதை உறுதி செய்து படம் எடுத்துள்ளது. 2004ஆம்ஆண்டு வரை அமெரிக்கா மட்டும், சற்றொப்ப 50.8 பில்லியன் டாலர்கள் இது போன்ற ஆராய்ச்சி களுக்காக செலவிட்டுள்ளது.

 

விண்வெளி ஆராய்ச்சியை பெரிதும் அரசுகளே முன்னின்று செய்து வந்த நிலையில், அதில் பல முன்னேற்றங்கள் ஏற்படவே, 2004 ஆம் ஆண்டு - வட அமெரிக்க அதி பர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில், அதில் தனியார் பெரு முதலாளிய நிறுவனங்களும் ஈடுபடு வதற்கான வாய்ப்புகள் ஏற்படுதித்க கொடுக்கப் பட்டன. 2004ஆம் ஆண்டு Ciomposites என்ற தனியார் நிறுவனம், SpaceShipOne என்ற முதல் தனியார் விண் கலகத்தைக் கொண்டே, அமெரிக்க அரசின் நாசாவின் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், பெரும் பொருட் செலவிலான விண்கலங்களை தயாரிக்கும் பணியை தனியாரிடம் தாரை வார்த்தது அமெரிக்க அரசு.

 

இந்நிறுவனங்கள் விண்கலங்கள் தயாரிப்பதோடு நின்றுவிடவில்லை. விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா கொண்டு செல்வதற்கு விண் கலம் உருவாக்குதல், மனிதர்களை வேற்று கிரகத்தில் குடியமர்த்த விண்கலம் உருவாக்குதல் என இலாப நோக்கில் பல திட்டங்களி இந்நிறுவனங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.

 

இதற்கு முன்னோட்டமாக, 2001ஆம் ஆண்டு - Space Adventuresஎன்ற தனியார் நிறுவனம், அமெரிக்க அரசின் ஒப்புதலோடு, பெருந்தொகை அளித்த பணக்காரர் ஒருவரை விண்வெளியிலுள்ள, சர்வ தேச விண்வெளி நிலையத் திற்கு முதல் முறையாக சுற்றுலா வாக அழைத்துச் சென்றது. SpaceX என்ற தனியார் நிறுவனம், விண் வெளியில் உள்ள எந்த கிரகத்திற்கும் மனிதர் களைக் கொண்டு செல்வதற்கான அதிநவீன புதிய விண்வாகனங்களை தற்போது உருவாக்கி வருகின்றது.

 

Mars Oneஎன்ற நிறுவனம் 2024ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்து வதற்கான திட்டத்தை செயல்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த ஆகத்து 2013 - வரை சற்றோப்ப, அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் முன்னணி முதலாளிய நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சம் பேர் இதற்கு முன்பதிவு செய் துள்ளனர்.

 

எரிகற்களிலிருந்து கனிமங்களை எடுக்கும் முறைக்கு Carl Sagan, Steven J. Ostro உள்ளிட்ட விண்வெளி இயற்பியல் அறிஞர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின் றனர். எரிகற்களில் களம் அமைத்து கனிமங்களை எடுப்பதன் மூலம், அவற்றின் சுற்றுப்பாதையில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது மற்ற எரிகற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி பூமியின் மீது அவை மோதுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இது போன்ற எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் இதற் கானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

 

அமெரிக்காவிற்கும் சோவியத் இரசியாவிற்கும் விண் வெளி ஆராய்ச்சியில் கடும் போட்டிகள் ஏற்பட்டு வந்த 1967ஆம் ஆண்டு, Outer space treaty என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் ஆகிய நாடுகள் முதலில் இதில் கையெழுத்திட்டன. தற்போது வரை 102 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தத் தின்படி, விண்வெளியில் உள்ள எந்தவொரு கிரகத்தையும், எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது என்று முடிவானது.

 

அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், நாடுகளைப் பற்றிய வரையறைகள் தான் உண்டே தவிர, தனியார் நிறுவனங்கள் குறித்த வரையறை ஏதுமில்லை. மேலும், எரிகற்களை பூமிக்குக் கொண்டு வந்து அதிலிருந்த கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால், அது யாருக்கு சொந்தம் என்பது குறித் தும் வரையறைகள் இல்லை. இத னைப் பயன்படுத்தியே பல தனியார் நிறுவனங்களும் விண்வெளிக் கிரகங்களையும், எரிகற்களையும் தமதாக்கிக் கொண்டு, அதிலுள்ள வளங்களை ஆராய்ந்து அதை பூமிக்குக் கொண்டு வரத் திட்டங் கள் தீட்டி வருகின்றன.

 

2010ஆம் ஆண்டு பூமிக்கு அப்பாலுள்ள கிரகங்களில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டி எடுப்பதையே நோக்கமாகக் கொண்டு Planetary Resourcesஎன்ற அமெரிக்க நிறுவனம் தொடங்கப் பட்டது. கூகிள், மைக்ரோசாப்ட், பேபால் என உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ளனர். Deep Space industriesஎன்ற நிறுவனம், 2016க்குள் எரிகற்களிலிருந்து கனிம மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வர விண்கலம் தயாரித்து வருகிறது.

 

விண்வெளியிலுள்ள வேற்றுக் கிரகங்களிலிருந்து வளங்களை “எடுத்துத் கொள்ளத்’’ தொடங்கி னால், பூமியிலில் இருந்து “எடுத்துத் கொள்ள”ப்பட்டு வரும் வளங்கள் பாதுகாக்கப்படும் என அந்நிறு வனம் அதற்கு விளக்கம் வேறு அளித்துள்ளது.

 

விண்வெளி கிரகம் ஒன்றிலி ருந்து இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டு வது குறித்து விளக்கிய “அவதார்” எனும் ஆங்கிலத் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், 2012ஆம் ஆண்டு Planetary Resourcesநிறுவனத்தில் ஆராய்ச்சிக் குழுவின் ஆலோசகராக இணைந் தது வேடிக்கையான செய்தி.

 

அமெரிக்காவின் நாசா நிறுவனம், 2016ஆம் ஆண்டு செப்டம் பரில், OSIRIS-Rex என்ற விண்கலத்தின் மூலம், புவிக்கு அப்பால் சுற்றும் ஒர் விண்கல்லில் இருந்து கனிம வளங்களைக் கொண்டு வரும் சோதனைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.


நடத்தப்பட்டு வரும் இந்த விண்வெளி ஆய்வுகளின் மூலம் பெறப்படுகின்றப் பயனை ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் அளிக்கும் அளவிற்கு, முதலாளியம் இரக்க குணம் கொண்டதல்ல. எப்படியும், தனது இலாப நோக்கத் திற்குத்தான் இந்த ஆய்வுகளையும், இதனால் பெறும் வளங்களையும் முதலாளியம் பயன்படுத்தும் என்பது கண் கூடான உண்மை. ஒன்று மட்டும் நிச்சயம், முதலாளியத்தின் சுரண்டல், பூமியோடு நின்றுவிடப் போவதில்லை!

mmக.அருணபாரதி


0 comments:

Post a Comment