பகல் உறக்கமும் , உடல் நிறையும்

 

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?

சுதன் முல்லைத்தீவு

 


பதில்:- தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் நேரிடையான தொடர்பு ஏதும் கிடையாது.


பொதுவாக பகல் தூக்கத்தை நாம் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். சோம்பேறியாக இருந்து உடல் உழைப்பில் ஈடுபடாதிருந்தால் உடல் எடை அதிகரிப்பிற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.

 

அதாவது பகலில் தூங்கினாலும் சரி தூங்காவிட்டாலும் சரி உடலுழைப்பற்ற வாழ்க்கையானது எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

 

மாறாக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர் உடல் அசதி நீங்க, உணவின் பின் சில நிமிடங்கள் தூங்குவதால் எடை அதிகரிக்கப் போவதில்லை. மாறாக அவர் தொடர்ந்தும் கடுமையாக வேலை செய்வதற்கான உந்துசக்தியாக அந்த சிறு தூக்கம் அமையும்.

 

ஒருவர் குண்டாக இருக்கிறாரா மெல்லியவராக இருக்கிறாரா என்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது அவரது பரம்பரை அம்சமும், அவரது உணவுமுறை மற்றும் உடலுழைப்பு போன்ற வாழ்க்கை நடைமுறைகளேயாகும்.

 

உண்மையில் நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தியில் பெருமளவிலானது (60 முதல் 75 சதவிகிம் வரையானது) எமது உடலின் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது மூளை,  இருதயம்,  உணவுக் கால்வாய், அங்கங்கள் உட்பட அனைத்து உறுப்புகளின் செயற்பாட்டீற்கு இது பயன்படுத்ப்படுகிறது. நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் சரி இவை தொடர்நது செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

 

10 முதல் 25 சதவிகிதமே நமது நாளாந்த நடவடிக்கைகளான நடப்பது, வேலை செய்வது போன்றவற்றிக்கு பயன்படுதப்படுகிறது.

 

நாம் தினமும் உண்ணும் உணவின் சக்திப் பெறுமானமானது எமது உடலில் நாளாந்த செயற்பாட்டிற்காக நாம் செலவழிக்கும் சக்தியின் அளவை விட அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறி எமது உடலில் சேமிக்கப்படும். அது எடையை அதிகரிக்கச் செய்யும்.

 

இன்று பலரும் நம் பாரம்பரிய உணவுகளான சோறு இடியப்பம் புட்டு போன்றவற்றை கைவிட்டு கலோரிப் பெறுமானம் அதிகமுள்ள ஏனைய உணவுகளை அதிகம் உள்ளெடுகிறார்கள். ரோல்ஸ் பற்றிஸ் போன்ற பொரித்த உணவுகள், தேநீர்,  சோடா ஜீஸ் போன்ற இனிப்புப் பானங்கள்,  சொக்கிளற் ஜஸ்கிறீம் போன்ற யாவுமே அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை. இதுவே அவர்களது எடை அதிகரிப்பிறகு காரணமாகிறது. பகல் தூக்கம் அல்ல.

 

அத்துடன் உடல் உழைப்பின்றி தொலைக்காட்சி பெட்டி முன் வாளாவிருப்பதும் காரணம்தான்.

 

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்சமானது. உங்கள் கேள்விக்கு எதிர்மாறானது

 

தூக்கக் குறைபாட்டு பிரச்சனை உள்ளவர்களும் போதியளவு நேரம் தூங்கக் கிடைக்காதவர்களும், போதியளவு நேரம் தூங்குவர்களை விட அதிக எடை அதிகரிப்பிறகு ஆளாகிறார்களாம். இதற்குக் காரணம் லெப்டின் (Leptin) என்ற

ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதும் கிறெஹ்லின் (Grehlin) என்ற ஹோர்மோன் அதிகமாகச் சுரப்பதும் ஆகும்.

 

இதனால் வயிறு நிறையாத உணர்வும் கூடுதலான பசியும் ஏற்படுகிறதாம். அதாவது தூங்காவிட்டால்தான் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அர்த்தப்படுகிறது.

 

முடிவாக என்ன ஆலோசனை சொல்லலாம்?

 

பகல் தூக்கம் என்பது நீண்டதாக இருக்கக் கூடாது. உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்குமளவிற்கு குறுகியதாக இருக்க வேண்டும்.

உணவுகள் போசாக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய அதிக கலோரிச் சத்துள்ளதான இருக்க கூடாது.

 

இவற்றைக் கடைப்பிடித்தால் எடையை சரியான அளவில் பேண முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

No comments:

Post a Comment